மதிப்பெண் முறை வேண்டாம்; கிரேடு முறை வேண்டும்

மதிப்பெண் முறை மாணவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. மாணவர்களிடையே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதனால், அவர்களுக்கு மனதளவில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்படுகிறது என்றாலே தவறான முறை என்றுதான் பொருள். மாணவர்களின் திறமையைக் கணக்கிட கிரேடு முறையே சிறந்தது. மதிப்பெண் முறை தேவையற்றது.

உதாரணமாக ஏ கிரேடு என்பது 61 முதல் 70 வரை என்றால், 61 முதல் 71 வரை மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் ஒரேவிதமான மதிப்பெண் பெற்றதாகவே கருதுவதால் வேறுபாடு குறைகிறது. மன அழுத்தம் குறைகிறது. எனவே, மதிப்பெண் முறை மாற்றப்பட்டு, கிரேடு முறை கொண்டுவரப்பட வேண்டும்.

மதிப்பெண் மட்டும்தான் தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் என்ற தவறான எண்ணத்தால், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியுறுகின்ற மாணவர்கள் தற்கொலை வரை செல்கின்றனர். இது மனிதனின் வாழ்வுரிமைக்கு எதிரானது. மதிப்பெண் முறையினால் சிறிய வகுப்பிலிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள், சமுதாயத்தால் மாணவர்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது. இது உள்ளத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கிறது.

மனிதன் என்பவன் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அதற்கு மனதை, செயலை, உடலைப் பராமரிக்கும் கலையை தெரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பற்றியத் தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டும். வாழ்க்கை முறையையே மாற்றிக் கொள்ள வேண்டும். எங்கே மனிதன் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறானோ, அங்கு பிரச்னை உள்ளது என்பதுதான் பொருள். எந்த உணவு எரிச்சல் இல்லாமல் மகிழ்ச்சியை கொடுக்கிறதோ, எந்த உணவு சோம்பேறியாக ஆக்காமல், சுறுசுறுப்பாக வைத்திருக்கிறதோ அதுவே மனிதனுக்கு ஏற்ற உணவு.

நிறைய மதிப்பெண் பெற்றால்தான் உயர்ந்த பள்ளி, கல்லூரிக்கு செல்லலாம் என்ற தவறான எண்ணத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு, விருப்பம்போல விளையாட முடியவில்லை. எனவே, உடல்நலம் பாதிக்கப்படுகிறது, உறவினர்களோடு அளவளாவ முடியவில்லை. பாசத்தையும் அன்பையும் பெற முடியவில்லை. மனதளவில் பாதிக்கப்படுகிறான். பிடித்த விஷயங்களில் ஈடுபட முடியவில்லை. கல்வி இணைச் செயல்பாடுகளில் ஈடுபட முடியவில்லை. இதனால் திறமையும் குறைகிறது. வெற்றி, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவமும் குறைகிறது.

தனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மதிப்பெண் பெறுவதற்காகக் கட்டாயமாகப் படிக்க வேண்டியுள்ளது. இம்முறையில் எந்த வளர்ச்சியையும் பெற்று விட முடியாது. வாழ்க்கையில் யார் வெற்றி பெறுகிறார்கள்? அறிவுடையவனோ, திறமையுடையவனோ இல்லை... ஆர்வம் உடையவனே. அறிவுடையவனும், திறமையுடையவனும் ஆர்வம் இல்லையென்றால் சாதிக்க இயலாது. திறமையையும் ஆர்வத்தையும் வளர்த்துக் கொண்டு வெற்றியைப் பெற முடியும். சிரமப்படுத்தி படிக்க வைப்பதால் வெற்றி கிடைக்காது. படிப்பின் மீது வெறுப்பு, மற்றவர்கள் மீது வெறுப்பு, வாழ்வின் மீது வெறுப்பு, சமுதாயத்தின் மீது வெறுப்பு உண்டாகிறது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைவிட அடுத்த நிலை மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான் கல்வியிலும் இதர செயல்பாடுகளிலும் ஈடுபட்டு அதிகமான சாதனை புரிகிறார்கள். அவர்கள் வெற்றி, தோல்வியை நிறையச் சந்திப்பதால் நம்பிக்கையும் தெளிவும் கிடைத்துவிடுகிறது. தோல்விக்குப் பிறகு வெற்றி என்ற பாடத்தை உணர்ந்து விடுகிறார்கள். தாக்குப் பிடிப்பவனே வெற்றியை எட்டிப் பிடிக்கிறான். எனவே, மதிப்பெண் மட்டுமே மனிதனை உயர்த்திட முடியாது.

எதையும் எதிர் கொள்கிற, வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாத எப்பொழுதும் எதையும் தாக்குப் பிடிக்கிற ஆர்வம் நிறைந்த மனிதவளம் நிறைந்த மனிதர்களால் மட்டுமே நாட்டை வல்லரசாக்க முடியும்.

சில நாடுகளில் விரும்புகின்ற படிப்பை தேர்வு செய்யும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிட்டுகிறது. துவக்க நிலையிலிருந்தே விரும்பிய பொதுக்கல்விப் பாடங்களையும், தொழிற்கல்வி பாடங்களையும் படிக்கலாம். அனைவரும் வேலைக்குப் போகின்றனர். அனைவரும் சம்பாதிக்கிறார்கள். அரசுக்கு அனைவரும் வரி செலுத்துகின்றனர். அந்த நாடு பணக்கார நாடாக மாறுகிறது. நிறைந்திருக்கும் பொருளாதாரத்தை வைத்து பணக்கார அரசு மீண்டும் நாட்டு மக்களுக்கு இலவச மின்சாரம், மருத்துவம், கல்வி கொடுக்கிறது. நாம் நாட்டுக்கு என்ன செய்கிறோமோ, அது நமக்கு திரும்பக் கிடைக்கிறது.

எனவே, தரம் உயர்ந்த கல்வி தரவும், திறம் நிறைந்த மாணவர் உருவாகவும் கல்வி நிலையங்களில் உள்ள மதிப்பெண் முறை மாற்றப்பட்டு கிரேடு முறை கொண்டு வந்தால் மாணவர்களிடையே உள்ள அழுத்தம் குறையும், அமைதி நிலவும். மகிழ்வான சூழல் ஏற்படும். மகிழ்ச்சியும், ஆர்வமும் படைப்பு சிந்தனையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாகவும், சாதனைக்கு துணையாகவும் நிற்கும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி