தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி பி.சதாசிவம் கேரள கவர்னராக நியமனம்புதுடெல்லி, ஆக.31-

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு கேட்டுக்கொண்டும் சில மாநில கவர்னர்கள் பதவி விலக மறுத்தனர்.

அப்படி பதவி விலக மறுத்து வந்த, கேரள மாநில கவர்னர் ஷீலா தீட்சித் பின்னர் மனம் மாறி கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அன்றைய தினமே ராஜஸ்தான், மராட்டியம், கர்நாடகம், கோவா ஆகிய 4 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை மத்திய அரசு நியமித்தது.

இந்த நிலையில், கேரள மாநிலத்தின் புதிய கவர்னராக சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் நேற்று நியமிக்கப்பட்டார். அவர் விரைவில் கேரள கவர்னராக பதவி ஏற்க இருக்கிறார்.

கேரள கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கும் 65 வயதான நீதிபதி பி.சதாசிவம், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூரில் கடந்த 1949-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் பழனிச்சாமி கவுண்டர், தாயார் பெயர் நாச்சாயம்மாள்.

மாணிக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடத்தில் பள்ளிப்படிப்பை தொடங்கினார். பள்ளிப்படிப்பை முடித்த பின் சிவகாசியில் உள்ள அய்ய நாடார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற பி.சதாசிவம் பின்னர் சென்னை அரசினர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பொறுப்பு ஏற்றார்.

1973-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் அரசு வக்கீலாக இருந்தார். இவருடைய உண்மையான உழைப்பு, நேர்மையான செயல்களால் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாக கடந்த 1996-ம் ஆண்டு ஜனவரி 8-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

கடந்த 2007-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் நீதிபதியாக சண்டிகார் ஐகோர்ட்டில் பொறுப்பு ஏற்றார். அதன்பிறகு 2007-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஆனார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் 40-வது தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். கடந்த ஏப்ரல் 26-ந் தேதி அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

நீதிபதி பி.சதாசிவத்துக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சீனிவாசன், செந்தில் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகன் சீனிவாசன் கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு முடித்து கோவையில் தொழில் செய்து வருகிறார். 2-வது மகன் செந்தில் பட்டப்படிப்பு முடித்து விட்டு விவசாயத்தை கவனித்து வருகிறார். 

Source : http://www.maalaimalar.com/2014/08/31032036/Justice-P-Sathasivam-appointme.html

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி