சாலைகளின் சைக்கிள் செல்ல தனிப்பாதை வேண்டும்: சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்

           உடல் நலத்திற்கு தேவையான சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறமும், சைக்கிள் செல்ல தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் எழுப்பியுள்ளார்.

                  இதுகுறித்து மத்திய, சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சாலைகளில் சைக்கிள் பயணத்திற்கு மத்திய அரசு தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற டெரி அமைப்பின் அறிக்கை அடிப்படையில் இந்த பரிந்துரையை அமைச்சர்  மேற்கொண்டுள்ளார்.

              டாக்டர் ஆர்.கே.பச்சோரியை தலைமை இயக்குனராகக் கொண்ட, டெரி எனப்படும், இந்திய எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனிடம், அறிக்கை ஒன்றை அளித்தது. "இந்தியாவில் பசுமை சூழ்நிலைக்காக சைக்கிள் மிதிப்பது: நாட்டில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான அறிக்கை" என்ற தலைப்பில், நீண்ட ஆய்வறிக்கை, சுகாதாரத்துறை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதை பெற்றுக் கொண்ட அமைச்சர், ஹர்ஷவர்தன் பேசியதாவது: அனைவரின் உடல் நலத்திற்கு உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்புக்கு எளிதான பயிற்சியாக, சைக்கிள் ஓட்டுவது அமைந்துள்ளது. சைக்கிள் ஓட்டுவதை பெரிய இயக்கமாக மாற்றினால், நம் நாட்டிலிருந்து பெரும்பாலான நோய்களை ஓட்டி விடலாம். இதற்காக முதற்கட்டமாக, சைக்கிள் ஓட்ட பாதை அமைக்க வேண்டியது அவசியம்.

சைக்கிள் ஓட்டுவதற்கு சரியான இடவசதி இல்லாததால்தான், பெரும்பாலானோர் சைக்கிளை பயன்படுத்துவதில்லை. அதனால், மாநில சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில், சைக்கிள் ஓட்டுவதற்கு என தனியான ஓடுதளங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து துறையிடம், தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.

தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளேன். சைக்கிள்களை அனைவரும் எளிதாக வாங்கும் வகையில், அதற்கான வரிகளை ரத்து செய்ய வேண்டும். குறைந்த விலையில் தரமான சைக்கிள்களை தயாரிக்க வேண்டும். இந்திய சைக்கிள் உற்பத்தி துறையை, உலக அளவிலான போட்டிகளை சமாளிக்கும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

வெளியே போய் விளையாடுங்க! நமக்கு ஏற்படும், 45 சதவீத நோய்களுக்கு அடிப்படை காரணம் உடல் உழைப்பு இல்லாதது தான். சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது, நடப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலே 50 சதவீத நோய்கள் நம்மை அண்டாது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு போன்ற பல நோய்கள், சைக்கிள் ஓட்டுவதால் நெருங்காது. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

எனவே, சைக்கிள் ஓட்டுவது மட்டுமின்றி, உடலை அசைத்து செய்யும் பணிகளை அதிக ஆர்வத்துடன் மேற்கொள்வது அவசியம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அடிக்கடி வெளியிடங்களுக்கு விளையாட அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், குழந்தைகளுக்கு ஏற்படும் அதிக உடல் எடை, நீரிழிவு போன்ற நோய்கள் தடுக்கப்படும்.

பெட்ரோல், டீசலுக்கு மானியம் சைக்கிளுக்கு கிடையாதா?

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மானியம் அளிக்கப்படும் போது, சைக்கிள்களுக்கு ஏன் வழங்கக்கூடாது? என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த, 2012 - 13ம் நிதியாண்டில், 3,000 ரூபாய் விலையில் 50 லட்சம் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளன. 3,000 - 6,000 ரூபாய் விலையில், 16 லட்சம் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சைக்கிள்களுக்கு வரியை ரத்து செய்தால், அதன் விற்பனை பல மடங்கு பெருகும். இப்போதைய 12 சதவீத வரி ரத்து செய்யப்படுமானால், மத்திய அரசுக்கு 150 கோடி ரூபாயும், மாநில அரசுக்கு, 110 கோடி ரூபாயும் என, 260 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.

பெட்ரோல், டீசல், எரிவாயுவுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்போது, எளிமையான சைக்கிள்களுக்கு மானியம் அளித்தால் என்ன?சுற்றுச்சூழலுக்கு துளி கூட மாசு ஏற்படுத்தாத சைக்கிள்களால், சுற்றுப்புற சூழல் மேம்பாடு அடையும்; உடல் உழைப்பால் நோய்கள் குறையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் பயன்படுத்துவது பல நன்மைகளை அளிக்கும். நகர்ப்புறங்களில் எளிமையான போக்குவரத்தாக அமையும் இது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது. அனைத்து தரப்பினராலும் எளிமையாக பின்பற்றப்படக் கூடிய போக்குவரத்து ஊடகம் இது. நகர்ப்புறங்களில் உட்கார்ந்தபடியே அதிக நேரம் வேலை பார்ப்பதால், பல்வேறு உடல் நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன. அவற்றை, சைக்கிள் ஓட்டுவதால் தடுக்க முடியும். உடல் நலம் மட்டுமின்றி, மனநலத்திற்கும் சைக்கிள் ஓட்டுவது நல்லது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி