ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒன்பது லட்சம் பேர் எழுதினர்

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 84 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், இந்திய கணக்கு பணி, இந்திய வருவாய் பணி, இந்திய அஞ்சல் பணி, இந்திய ரயில்வே பணி உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு தேர்விலும் வெற்றி பெறுவோர் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு தகுதி பெறுகிறார்கள்.

இந்தாண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மே 31ம் தேதி வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் ஜூன் 30ம் தேதி வரை பெறப்பட்டன. நாடு முழுவதும் 9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு யு.பி.எஸ்.சி. இணையதளத்தில் அண்மையில் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி இரண்டாம் தாள் தேர்வும் நடைபெற்றது. முதல் தாளில் 200 மதிப்பெண்களும், இரண்டாம் தாளில் 200 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

தமிழகத்தில் சென்னை(145 மையம்), மதுரை(31 மையம்), கோவை(22 மையம்) ஆகிய 3 நகரங்களில் மொத்தம் 198 மையங்களில் இத்தேர்வு நடக்கிறது. இத்தேர்வை சுமார் 84 ஆயிரம் பேர் எழுதினர். சென்னையில், எழும்பூர் அரசு மேல்நிலை பள்ளி, கொளத்தூர் எவர்வின் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வை திறன் குறைபாடு கொண்ட 309 பேருக்கு என சென்னையில் 145 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

சென்னை மையத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பாளர்களாக அரசு தேர்வுகள் இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வின் போது செல்போன் மற்றும் நவீன மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு மைய வளாகத்திற்கு நுழையும் வாயிலேயே, காவல்துறையினர் உதவியுடன் தேர்வர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இன்று நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாணவர்கள் சார்பில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து இன்று தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி