பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறைய ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல : பி.ஜி., ஆசிரியர் சங்கம் 'ஆதங்கம்'

அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவிகிதம் குறைய ஆசிரியர்களை மட்டும் காரணம் அல்ல," என தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

மதுரையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டில் மாணவர்கள் சிலருக்கு அதிக வித்தியாசத்தில் மதிப்பெண் அதிகரித்ததாகவும், அதற்கு திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் கவனக் குறைவு தான் காரணம் என விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தவறானது. பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். சுமார் 64 லட்சம் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பீடு செய்தனர். விடைத்தாள் திருத்தும் மையங்களில் எவ்வித அடிப்படை வசதியும் இருப்பதில்லை.

அமைதியான சூழ்நிலையும் அங்கு நிலவுவதில்லை. நாள் ஒன்றுக்கு 24 விடைத்தாள் திருத்த வேண்டும் என்று இருந்தாலும், கூடுதல் தாள்கள் வழங்கப்படுகின்றன. திருத்தும் பணி துவங்கியதும், அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒரு காலக்கெடுவை அவர்களாக முடிவு செய்து, அதற்குள் திருத்தி, தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று காலம் நிர்ணயிக்கின்றனர்.

அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஆசிரியர்களும் திருத்துதல் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், ஆசிரியர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். அப்படி இருந்தும் இந்தாண்டு மறுமதிப்பீட்டில், ஆயிரத்திற்கும் குறைவான மாணவர்களுக்கு மட்டும் தான் மதிப்பெண் மாறுபட்டிருந்தது. 64 லட்சம் விடைத்தாள்களை ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இருந்தும் 70 சதவிகிதம் தேர்ச்சி குறைவான பள்ளி ஆசிரியர்களுக்கு '17 பி' உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போக்கை அரசு கைவிட வேண்டும்.

மேலும், அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாமக்கல், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் பிளஸ் 1 பாடம் பெயரளவில் தான் மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன. அங்கு மேல்நிலை கல்வியில், இரண்டு ஆண்டுகளிலும் பிளஸ் 2 பாடம் தான் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் தேர்ச்சியை ஒப்பிடும்போது அரசு பள்ளி தேர்ச்சி குறைவாக தெரிகிறது.

தமிழகத்தில் மேல்நிலை பள்ளிகளில் பொதுத் தேர்வு முறைக்கு பதில், 'செமஸ்டர் முறையை' அமல்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் சிறந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கும் முறைக்கு, தனியாக ஆசிரியர் நியமிக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கும் அரசாணை 720ஐ ரத்து செய்ய வேண்டும், என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி