பள்ளிக்கு செல்ல மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடைப்பயணம்


        பாட்டன் காலத்தில் ’தினமும் 10 கி.மீ., நடந்து போய் நான் படித்து வளர்ந்தவன்,’ என்று பல கதைகளை முன்னோர் குரல்களில் நம் காதுகள் கேட்டிருக்கும். இப்போதும் இது போல் பயணித்து பள்ளி செல்வோர் இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் கரடுமுரடான ஒரு மலைப் பாதையில் தினமும் 10 கி.மீ., நடந்து, அதன் பின் பஸ்சில் பயணித்து படிக்கிறார்கள் ஒரு மலைக்கிராமத்து மாணவர்கள் 60 பேர்.

          மதுரை மாவட்டம் பாலமேட்டில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் வலையபட்டி கிராமத்தை கடந்து, 3 கி.மீ., பயணித்தால் எல்லைப்பாறை என்ற இடம் வரும். அந்த இடத்தில் இருந்து மலைப்பாதையில் 5 கி.மீ., நடந்தால் அழகிய மலை கிராமம் வரவேற்கும். அதுதான் மலையூர். தாண்டிக்குடி, சிறுமலை போன்ற ஒரு விவசாய பூமி. அனைத்து மலைப்பயிர்களும் இங்கு கிடைக்கும்.வாகனங்கள் ஏறாத இந்த மலையில் கோவேறு கழுதைகள் மக்களின் சுமைகளை சுமந்து, தங்கள் வயிற்றையும் நிரப்புகின்றன.

மலையூரின் பெருமை:

மலையூரின் பெருமைகள் பல. கொசு இல்லாத கிராமம். காகம் பறக்காது. எப்போதாவது ஏதாவது காகம் தென்பட்டால் ஏதோ தீட்டு அல்லது குற்றம் கிராமத்தில் நிகழ்ந்திருக்கிறது எனக் கருதி, அதற்கு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். ஊரில் யாரும் செருப்பு அணிந்து நடப்பது இல்லை. விஷ ஜந்துக்கள் ஏதாவது கடித்தால், இங்குள்ள ஐயனார் நீர்சுனையில் தண்ணீர் குடித்தால், உடலில் விஷம் ஏறாது, உயிருக்கு எந்த தீங்கும் வராது என்பது போன்ற அதீத நம்பிக்கை வைத்துள்ளனர் மக்கள்.

இந்த கிராமத்திற்கு புதிதாக யாராவது வந்தால் அவர்களுக்கு உணவு கொடுத்து அனுப்புவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் படித்த ஒருவர் வக்கீலாகவும், இன்னொருவர் போலீசாகவும் உள்ளனர்.லிங்கவாடி ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் துவக்கப்பள்ளி உள்ளது. நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்புக்காக மலையின் கீழ் உள்ள முலையூர், நத்தத்திற்கு தினமும் 60 மாணவ, மாணவியர் செல்கின்றனர்.

செருப்பில்லா பயணம்:

மலையில் இருந்து விரைவாக இறங்கினால் ஒரு மணி நேரம், ஏறுவதற்கு ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகிவிடும். மாணவர்கள் காலையில் மலையில் இருந்து கீழே இறங்கி, அரசு பஸ்சில் பள்ளி செல்கின்றனர். மாலையில் 5.30 மணிக்கு எல்லப்பாறைக்கு பஸ்சில் வந்து இறங்குகின்றனர். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்து மலையில் ஏறுகின்றனர். புத்தக சுமை ஒரு பக்கம். பலரது கால்களில் செருப்பு இல்லை. ஆறாம் வகுப்பு மாணவி முதல் பிளஸ் 2 மாணவி வரை, இந்த மலைப்பயணத்தில் எங்கும் நிற்காமல் நடைபோடுவது ஆச்சரியம். இவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இரவு 7 மணியாகிவிடும். இவர்களிடம் இருக்கும் தைரியம், மனஉறுதி இன்றைய மாணவ சமூகத்திற்கு ஒரு பெரும் எடுத்துக்காட்டு, இவர்கள் அத்தனை பேரையுமே சாதனை மாணவர்கள் என கொண்டாடலாம்.

வெளிச்சம் இல்லாத பாதை:

மாணவ, மாணவிகள் கூறியதாவது: மாலை 5.30 மணிக்கு இருட்டத் துவங்கிவிடும். மலைப்பாதையில் வெளிச்சம் இருக்காது. ஒருவித அச்ச உணர்வுடன் தான் ஏறுவோம். மலை ஏறிய பின் ஒவ்வொருவரும் அவரவர் தோட்டங்களில் உள்ள வீடுகளுக்கும், கிராமத்திற்கும் சென்றுவிடுவார்கள். ஆனால் இங்கு யாருக்காவது உடல்நலம் பாதிக்கப்படும் போது, அவர்களை கட்டில் கட்டி கீழே கொண்டு செல்ல வேண்டும். கர்ப்பிணி பெண்களை நினைத்தாலே பாவமாக இருக்கும். மிகவும் பழமையான இந்த கிராமத்தில் இன்னும் ரோடு வசதி இல்லாதது ஒரு பெரும் குறை. தற்போது ரோடு அமைக்கும் அளவிற்கு பாதை உள்ளது. கரடுமுரடான பாறைகளை அகற்றி, எளிதாக நடந்து செல்லும் வகையில் ரோடு அமைத்தால் போதும். கஷ்டம் இல்லாமல் நாங்கள் வந்து சென்றுவிடுவோம், என்கின்றனர்.

படிப்பது சுமையல்ல:

பிளஸ் 2 மாணவர் சுரேஷ், ”நாங்கள் படிப்பதற்கு நடப்பதை ஒரு சுமையாக கருதவில்லை. 60 பேர் பள்ளிகளில் படிக்கிறார்கள். தினமும் 55 பேராவது பள்ளி செல்வோம். கல்லூரியில் படிப்போர் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். எங்களுக்குள் தலைவர் என்று யாரும் இல்லை. ஆனால் மலை ஏறும் போதும், இறங்கும் போதும் ஒற்றுமையாக இருப்போம். ஒருவருக்கொருவர் புத்தக சுமைகள் மாற்றிக் கொள்வதிலும் உதவிகள் செய்வோம். சேர்ந்தே மலை ஏறி, இறங்க வேண்டும் என்பதை பெற்றோரும் உத்தரவாக வைத்திருக்கின்றனர், ஊர் கட்டுப்பாடாகவும் இது உள்ளது. அதை நாங்கள் மீறுவது இல்லை”, என்கிறார்.

காட்டுமாடுகள் கவனம்:

விவசாயி பார்த்தி, 37, ” இரவு யாரும் மலை ஏறமாட்டார்கள். காட்டு மாடுகள் வரும். நான் துவக்கப்பள்ளி படிப்போடு முடித்துவிட்டேன். நான் படிக்கும் போது இப்போது உள்ள எண்ணிக்கையில் மாணவர்கள் மலையின் கீழ் சென்று படிக்கவில்லை. தனிமையில் செல்ல பெற்றோர் அனுமதிக்கவில்லை. அதனால் படிப்பு பாதியில் நின்றது,” என்கிறார்.

மலையூர் கிராமத்து மாணவர்களின் வாழ்வியல் இன்றைய நம் மாணவ சமூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஒரு முறை இந்த கிராமத்திற்கு தனியாக, குழுவாக ’விசிட்’ செய்து பாருங்கள். ஒரு நாள் மலை ஏறுவதற்கே என்ன பாடுபடுவீர்கள் என்பதை உணரவைக்கும். கல்விக்காக தினமும் மலை ஏறும் இந்த கிராம மாணவர்களை எப்படி பாராட்டினாலும் தகும். படிப்பை போல் ரோடு தான் இவர்கள் அனைவரின் ஒரே கனவு.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி