நீராடும் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!
நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- Manonmaniam Sundaram Pillai