பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பு பாழாவதற்கு ஊர்வலங்கள் எந்த வகையிலும் காரணமாக அமைந்து விடக்கூடாது. DINAMANI

விழிப்புணர்வு ஊர்வலங்கள் எனும் பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளை விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்த வைத்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு வெய்யிலில் நடக்க வைப்பதை அடிக்கடி ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.


தேர்தலில் வாக்களிப்பது, மது ஒழிப்பு, புகையிலை ஒழிப்பு, சாலைப் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, எய்ட்ஸ் நோய், ரத்த தானம், காச நோய், பேரிடர்களான புயல், வெள்ளம், நில அதிர்வு, தீத்தடுப்பு உள்பட இன்னும் எத்தனை பிரிவுகள் உள்ளனவோ அத்தனைக்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக பேரணிகள், மனிதச் சங்கிலி, மாரத்தான் போன்றவற்றை அரசு நடத்துகிறது.


மேலும் தனியார் கல்வி நிறுவனங்களும் தங்களது விளம்பரத்துக்காக அத்தனை தினங்களையும் கொண்டாடுகின்றன (எனினும் அன்னையர் தினம், நண்பர்கள் தினத்தைப்போல தந்தையர் தினம் என்ற ஒன்று இருப்பதும், அதை எத்தனை பேர் கொண்டாடினர் என்பதும் கேள்விக்குறியே).


இந்நிலையில், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மனிதச் சங்கிலியாக நிற்க வைப்பதாலும், பேரணியில் நடக்க வைப்பதாலும், மாரத்தானில் ஓட வைப்பதாலும், விளம்பரப் பதாகைகளை கையில் ஏந்த வைத்து ஊர்வலம் நடத்துவதாலும் எத்தனை பேர் விழிப்புணர்வு பெறுகின்றனர் என்பது நம்முன்னே நிற்கும் மாபெரும் கேள்வி.


இதுபோன்ற பேரணிகள் நடைபெறும் போது சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எரிச்சலுடன் எதிர்கொள்ளும் பொதுமக்கள் எந்தக் காரணத்துக்காக ஊர்வலம் செல்கிறார்கள் என்பதைப்பற்றி தெரிந்து கொள்ள முனைவதுகூட இல்லை.


முன்பெல்லாம் இதுபோன்ற விழிப்புணர்வுகள் குறித்து ஆண்டுக்கு ஓரிரு முறை, ஊர்வலங்கள் நடைபெறுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அண்மைக்காலமாக மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை மாவட்டத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.


ஊர்வலத்தில் செல்லும் மாணவ, மாணவிகள் தாங்கள் எதற்காக ஊர்வலத்தில் செல்கின்றோம் எனத் தெரியாத நிலையிலேயே தங்களது ஆசிரியர்கள், அதிகாரிகள், பள்ளித் தாளாளர்கள் உத்தரவுபடி கலந்து கொள்கின்றனர் என்பதுதான் உண்மே.


இத்தகைய ஊர்வலங்களில் கலந்துகொள்ளும் மாணவர்களின் பாட வகுப்புகள் ஆண்டுக்கு 10 முதல் 20 நாள்கள் பாதிக்கப்படுகிறது. மேலும், பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வில் எடுக்கக்கூடிய மதிப்பெண் பாதிக்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.


நிர்வாகத்துக்குப் பயந்து ஊர்வலத்தில் செல்லும் மாணவ, மாணவிகள் குறிப்பாக மாணவிகள் பலர் சோர்வினால் மயங்கி விழுவதும், உடல்நலக் குறைவு ஏற்படுவதும் தொடர் நிகழ்வுகள்.


இதில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏதேனும் நேரிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்யவே மனம் பதறுகிறது. மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் அடிப்பதும், உடல் ரீதியாக தண்டனை கொடுப்பதும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வைப்பதும் தவறு. அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதும் தவறு என குழந்தைத் தொழிலாளர் சட்டம் கூறுகிறது.


அதன்படி பார்த்தால் படிப்பு தவிர்த்த வேறு செயல்களில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்துவது சட்டபடி குற்றம் என்றே கூறலாம். இதுபோன்ற பேரணிகளை அடிக்கடி நடத்துவதும், அதில் மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி பங்கேற்கச் செய்வதையும் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் இதுபோன்ற விழிப்புணர்வு ஊர்வலங்களுக்கு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் விருப்பமுள்ள தனியார் நிறுவன ஊழியர்களையும் பயன்படுத்தலாம்.


மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த செய்திக்குறிப்பு, நோட்டீஸ், டிஜிட்டல் பேனர், சுவர் விளம்பரம், அறிக்கைகள், பத்திரிகை விளம்பரம், கேபிள் டிவி, திரையரங்குகள் போன்ற எத்தனையோ வசதி வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.


பொதுமக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியது அரசின் கடமைதான். ஆனால் பள்ளி மாணவ, மாணவிகளின் படிப்பு பாழாவதற்கு இதுபோன்ற ஊர்வலங்கள் எந்த வகையிலும் காரணமாக அமைந்து விடக்கூடாது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி