சென்னை ஐகோர்ட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.முனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2012-ம் ஆண்டு 222 என்ஜினீயரிங் பதவிகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த பதவிக்கு நான் விண்ணப்பித்தேன். இதன்பின்னர் 2013-ம் ஆண்டு மார்ச் 2–ந் தேதி நடந்த எழுத்து தேர்வில் கலந்துக் கொண்டு, சிறப்பு தேர்வு எழுதினேன். ஆனால், துரதிருஷ்டவசமாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மதிப்பெண் பட்டியலை வெளியிடவில்லை.
ஆனால், தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களின் விவரங்களை கொண்ட முதல் பட்டியல் கடந்த ஜனவரி 30-ந் தேதி வெளியானது. அதில், என்னுடைய பெயர் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7–ந் தேதி வெளியான 2-வது தேர்ச்சி பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை. மேலும், இந்த முதல் பட்டியலில் தேர்வாகாதவர்கள், 2–வது பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மேலும், இவர்களுக்கு நேர்முகத் தேர்வு வருகிற 22 முதல் 25–ந் தேதி வரையும் மற்றும் 28–ந் தேதியும் நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே, கடந்த 7–ந் தேதி வெளியான தேர்ச்சி பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த பட்டியலை ரத்து செய்யவேண்டும். மேலும், இந்த எழுத்து தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் சுரேஷ் ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, மனுவுக்கு வருகிற 21–ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி டி.என்.பி.எஸ்.சி. தலைவர், செயலாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.