பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு முதல் முறையாக வயது வரம்பு நிர்ணயம்.

அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் காலிப் பணியிட தேர்வுக்குமுதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது பொறியியல் பட்டதாரிகள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு சமூகப் பிரிவு அடிப்படையில் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படாததும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் 139 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) வெளியிட்டது.இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 5 கடைசித் தேதியாகும். எழுத்துத் தேர்வு அக்டோபர் 26-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-2014 தேதியில் 35 வயதைத் தாண்டியவராக இருக்கக் கூடாது என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அறிவுறுத்தலின்படி இந்த வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியது: 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படுவது கிடையாது. அவர்கள் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதே நிலைதான் அரசு பொறியியல் கல்லூரி உதவிப்பேராசிரியர் பணித் தேர்வுக்கும் இருந்தது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த முறை அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணித் தேர்வு செய்யப்பட்டபோதும்கூட இதுபோல் வயது வரம்பு நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை. ஆனால்,இப்போது முதன் முறையாக வயது வரம்பு நிர்ணயம் செய்திருப்பது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி, அரசுப் பணியிடங்களை நிரப்பும்போது பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கு, குறிப்பாக பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுவது வழக்கம். இந்த சமூகப் பிரிவுகளுக்கான சலுகையும், டிஆர்பி அறிவிப்பில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக என்னைப் போன்று தனியார் பொறியியல் கல்லூரிகளில்பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான அனுபவமிக்க பேராசிரியர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வயது வரம்பு நிர்ணயத்தை நீக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியது:அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வுக்கு வயது வரம்பு நிர்ணயம் செய்வது தொடர்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்துடன் டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வைப்போல், இதற்கும் வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யக் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றிய பணி அனுபவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது.ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் அதை ஏற்க மறுத்துவிட்டது. விதியின்படி, அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதைத் தாண்டியிருக்கக் கூடாது என கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டனர் என்றார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி