“இந்திய பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்த பாடுபட வேண்டும்” என்று திருச்சி என்.ஐ.டி. பொன்விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.
பிரணாப் முகர்ஜிதிருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்.ஐ.டி) ஐம்பதாவது ஆண்டு பொன்விழா நேற்று மாலை நடைபெற்றது. தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிர்வாகக்குழு தலைவர் ராஜாராம் நித்தியானந்தா வரவேற்று பேசினார். திருச்சி என்.ஐ.டி இயக்குனர் சுந்தர்ராஜன் பொன்விழா ஆண்டறிக்கையை படித்தார்.இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-இந்திய பொறியியல் துறையில் திருச்சி ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடத்தை பெற்று உள்ளது. திருச்சி அருகில் காவிரியின் குறுக்கே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை நீர்ப்பாசன ஒழுங்குமுறையில் உலக அளவில் சிறப்பான இடத்தை பெற்று உள்ளது. தஞ்சை பெரிய கோவிலின் உச்சியில் 90 டன் எடை உள்ள ஒற்றைக்கல்லை வைத்து இருப்பது கட்டுமான தொழில்நுட்பத்தில் இந்தியாவின் இரண்டாவது மைல்கல் ஆகும்.சர்வதேச தரம்பொறியியல் துறையை பொறுத்தவரை இந்திய அளவில் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. ஆனால் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்கள் எடுத்த புள்ளி விவர கணக்கின்படி முதல் 200 நிறுவனங்களில் இந்திய பொறியியல் கல்வி கூடங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இது தான் நிலைமை. எனவே பொறியியல் துறையில் உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்த நாம் பாடுபட வேண்டிய நிலையில் உள்ளோம்.தற்போது நமது நாட்டின் சில ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் 50 முன்னணி சிவில் மற்றும் மின்னியல் பொறியியல் துறையில் இடம் பெற்று உள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் முன்னணியில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் ஐந்து கல்வி நிறுவனங்கள் இடம் பெற்று உள்ளன. ஆசிய அளவில் முதல் 100 இடங்களை பிடித்த கல்வி நிறுவனங்களில், இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றில் இருந்து 10 ஆக உயர்ந்து உள்ளது. எனவே சர்வதேச அளவில் இந்திய பொறியியல் துறையின் தரத்தை உயர்த்திக்காட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சர்வதேச தரத்தில் இந்திய பொறியியல் கல்வியை உயர்த்துவதற்கான பூர்வாங்க பணிகளை ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டும். இதற்கான முயற்சிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.சவால்கள்பொறியியல் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் குறுகிய கால கல்வி ஒப்பந்தங்களை செய்து கொள்ளவேண்டும். நமது பொறியியல் தொழில்நுட்பம் சாதாரண விவசாயிகள் மற்றும் கைவினைஞர்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும் பயன்படும் அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கான ஆராய்ச்சிகளில் பொறியியல் ஆசிரியர்களும், மாணவர்களும் இறங்கவேண்டும். திருச்சி என்.ஐ.டி.யில் ஏற்கனவே கிராமப்புற தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.கவர்னர் ரோசய்யாவிழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா வாழ்த்தி பேசினார். என்.ஐ.டி. பொன்விழா மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட அதனை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெற்றுக்கொண்டார்.