உழைப்பால் வரும் அதிர்ஷ்டம்

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிர்ஷ்டம் அடிக்கும்' என ஒரு அறிஞர் கூறியுள்ளார்.

கல்லூரிகளில் சிறப்புப் பேச்சாளர் பேசும்போது, "மாணவர்கள் கடுமையாக உழைத்தால் முன்னேறலாம்' எனக்கூறுவார்கள். "கடின உழைப்பு' என்றால் என்ன? மூட்டை தூக்குவதும், வெயிலில் வேலைபார்ப்பது மட்டுமா கடின உழைப்பு?

கடின உழைப்பு என்றால் உங்களது இலக்கை நோக்கி முன்னேற, தடைகளைத் தாண்டி உழைக்க வேண்டும். அந்த உழைப்பு உங்கள் ரத்தம், சதை ஆகியவற்றில் ஊறி இருக்க வேண்டும். அதுவே கடின உழைப்பு.

நீங்கள் என்னவாக வேண்டும் எனத் திட்டமிடுங்கள். உயர் பதவிக்கு வரவேண்டும் என்றால், முதலில் நம்மை அதற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பதவி உயர்வு கிடைத்தாலும், அதனைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினமாகும்.

படிக்காத மேதை என பலரை கூறுகிறோம். ஆனால், அவர்கள் அத்துறையில் நல்ல புலமை பெற்றிருப்பார்கள். எப்படி புலமையைப் பெறுவது என கேட்கலாம். அதற்குத்தான் கடின உழைப்புத்தேவை. புத்தகங்களைப் படிப்பதன்மூலம் நம்மை தயார் செய்து கொள்ளலாம். அத்துறை வல்லுநர்களிடம் பழகி, விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்கள் ஒரே நாளில் சாதிப்பதில்லை.
நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் வந்துவிட்டால், உற்சாகம் பிறந்து கடினஉழைப்புக்கு தயாராகி விடுவீர்கள். இதையடுத்து உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.

ஒரு விதை ஒரே நாளில் மரமாவதில்லை. அதைப்போல ஆசைப்படும் மனிதன் ஒரே நாளில் விஞ்ஞானியாகவோ, பொறியாளராகவோ மாறுவதில்லை.
ஒரு மனிதன் பாறையை பிளக்க அதன்மீது சம்மட்டி கொண்டு அடிமீது அடியாக அடித்துக் கொண்டிருந்தான். கடைசியில் நூறாவது அடியில் பாறை பிளந்தது. பாறையை உடைத்தவன், "நூறாவது அடியில்தான் பாறை பிளந்தது. ஆனால், அதற்கு முன் அடித்த 99 அடிகளும் பாறை பிளப்பதற்கு காரணமாக இருந்தன' என்றான்.

மனிதன் குறிக்கோளை அடையத் திட்டம் வகுக்கிறான். ஆனால், வெற்றி பெறுவது என்பது திட்டத்தை நிறைவேற்ற உழைக்கும் செயல்திறனை பொருத்துள்ளது.

அனைவருக்கும் ஆசை உள்ளது. லட்சியம் இருக்கிறது. திட்டம் உள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்துவதில்தான் வித்தியாசப்படுகிறார்கள்.
சிலர் என்னால் இது முடியாது என எண்ணுகிறார்கள். என்னிடம் அந்த திறமை இல்லை என நினைத்து முடங்கி விடுகிறார்கள். மனித மனம் காரியங்களை செய்யாமலிருக்க ஒரு சமாதானத்தை தேடுவதில் முனைகிறது.

இதனால் என்னால் இந்த காரியத்தை செய்ய முடியவில்லை என கூறுவார்கள். இது ஏற்க முடியாத சமாதானமாகும். இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் தங்கள் உடல் உழைப்பை கொடுக்கத்தான் வேண்டும்.
உழைப்பாளிகளின் வியர்வையால்தான் நமக்கு உணவு கிடைக்கிறது. உடை, வீடு என உழைப்பாளிகள் இல்லாமல் எதுவும் கிடைக்காது. எனக்குத் தெரிந்த ஒரு தையல் கடைக்காரர், "எனக்கு என சில வாடிக்கையாளர்கள் உள்ளார்கள் அதுபோதும்' எனக் கூறுவார். 

அவரது மகன் வந்தான். பலவகை ஆடைகளை தைக்க கற்றுக் கொண்டான். கடையை விரிவுபடுத்தி, பலருக்கு வேலை கொடுத்தான். இன்று அவனது கடைதான் அந்த ஊரில் சிறந்த கடை.

வாழ்கையில் வெற்றி பெறுவதும் சாதனை புரிவதும் மனநிலையை பொருத்துள்ளது. எனக்குத் தெரிந்த தொழிலதிபர் ஒருவர் கல்லூரி நடத்தி வருகிறார். கல்லூரியில் மாணவர்களிடமும் பேராசிரியர்களிடமும் நீங்கள் தினசரி 18 மணி நேரம் உழைக்க வேண்டும் எனக் கூறி வந்தார். 
இதனைக் கேட்ட மாணவன் ஒருவன், தினசரி பல புத்தகங்களை படிக்கத் தொடங்கினான். விளையாட்டை ஆர்வமாக கற்றுக்கொண்டான். 
அவன் அக்கல்லூரியைவிட்டு வெளியேறும்போது, சிறந்த மாணவனாக வெளியேறினான். இதற்கு காரணம், அந்த மாணவனின் கடின உழைப்பு. அது அவனுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது.

49 வயதில் பெண் ஒருவர் யோகாசனத்தில் உலக சாதனை புரிந்துள்ளார். ஒரே நாளில் எந்தப்பெண்ணும் சமையலில் நிபுணராக ஆவதில்லை. 
சாதனையாளர் எனக்கூறுகிறோம். அதற்கு அவரின் உத்வேகமும், நூறு சத கடின உழைப்பும்தான் காரணம். கடின உழைப்பு மட்டுமே உங்களை அதிர்ஷ்ட தேவதையிடம் அழைத்துச்செல்லும்.


"இங்கே பணி புரிய உங்களுக்கு வெறி பிடித்திருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால்,அப்படியிருப்பது உதவிகரமாக இருக்கும்"-பிளிட்ஸ்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி