இ-டிக்கெட் எடுக்க புதிய வெப்சைட்: ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் - தினகரன் செய்தி


சென்னை: ரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களில் இது தவிர்க்க முடியாதாகி விட்டது. காலை 10 மணி முதல் 12 மணி வரை இ-டிக்கெட் எடுப்பதற்கு கடும்போட்டி ஏற்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் இ-டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் பெரும் சவாலாக இருக்கிறது.

ரெயில் இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செய்து வருகிறது. ரெயில் டிக்கெட் விற்பனை ஏஜென்சிகளுக்கும் இ.டிக்கெட் விற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ரெயில் இ–டிக்கெட் எடுக்கும் போது இண்டர்நெட் ஒர்க் பிரச்சினையால் சில நேரம் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய வெப்சைட் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது.

இ–டிக்கெட் எடுப்பவர்கள் நீண்ட நேரம் காத்து இருக்காமல் எளிதாகவும், விரைவாகவும் டிக்கெட் எடுக்கும் வகையில் இந்த வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. www.nget.irctc.co.in என்ற புதிய இணையதளம் வழியாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய வெப்சைட்டான www.irctic.co.in -க்கு பதிலாக இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய வெப்சைட் வேகமாக செயல்படக்கூடியது என்பதால் காத்திருக்கும் நேரம் குறைகிறது. இந்த புதிய வெப்சைட் பற்றிய தகவல் வழக்கமாக பயன்படுத்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் கையாளப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவிக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி