சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?


"சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே இப்பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

சாதனை 
           சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்திருப்பதாகக் கூறுவது தவறு. இதன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் ஓரே பாடத்திட்டம் கற்பிக்கப்படுவதால் அனைவரும் இதனை வரவேற்கிறார்கள். இதனால் தேர்ச்சி சதவீதமும், உயர்கல்விக்கு போவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறவும் முடிகிறது. கிராம,சிறு நகர பள்ளிகளில் படிப்பவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்கிற போலி தோற்றம் மறைந்து அவர்களும் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரிகிறார்கள்.
          என். சண்முகம் 
       திருவண்ணாமலை.  

வியப்பில்லை

      இக்கருத்தை ஏற்கமுடியாது. இது கல்வி அறிஞர்கள் சேர்ந்து ஆராய்ந்து தயாரித்த பாடத் திட்டமாகும். கிராமத்து முதல் தலைமுறை மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் தயாரிக்கப்பட்ட பாட திட்டத்தை மாற்றினால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். நடுவண் அரசு பாடதிட்டத்தை மட்டும் தங்கள் பள்ளிகளில் வைத்துக்கொண்டு, மாநில அரசு பாடதிட்டத்தை எதிர்ப்பவர்கள் தனியார் பள்ளி நடத்தி, பெற்றோர்களிடம் வசூல் வேட்டை நடத்துபவர்கள் மட்டுமே. அவர்களுக்கு சமச்சீர் கல்வி எட்டிக்காயாக இருப்பதில் வியப்பில்லை.
      பூ.சி. இளங்கோவன்,
      அண்ணாமலைநகர்.    

           நூற்றுக்கு நூறு சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டு இவ்வாண்டுதான் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கையும் பாடவாரியாக நூற்றுக்கு நூறு எடுத்தோர் எண்ணிக்கையும் வியப்படைய வைத்துள்ளன. இவற்றைப் பார்க்கும்போது இதற்கு முன்னர் இருந்த நிலையைவிடத் தரம் குறைவாக உள்ளது என்றே கூறவேண்டும். முந்தைய மெட்ரிக் பாடத்திட்டத்தைவிட இது எளிமையாக இருந்ததால் தேர்ச்சி முழுமையாகி விட்டது. ஆனால், தேர்ச்சி அதிகமே தவிர தரம் அதிகமில்லை.
அ. கருப்பையா, பொன்னமராவதி.    

 குறையவில்லை
  
           இத்திட்டத்தால் கல்வித்தரம் குறையவில்லை. வெறும் மனப்பாடக் கல்வியாக மட்டுமே இருந்து வந்த கல்வி முறை மாறி, பொதுத் தேர்வுகளில் சுயமாக சிந்தித்து எழுதுவதற்கு சமச்சீர் கல்வித் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாது, இந்நாட்டின் இயற்கை வளங்களை மனித ஆற்றலை புரிந்து வளர்க்கக்கூடிய கல்வி முறையாக சமச்சீர் பாடத்திட்டம் அமைந்து வருகிறது. ஆக, சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறையவில்லை. பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிற கருத்து சரியல்ல.
அ. கற்பூரபூபதி, சின்னமனூர்.  

அக்கரைப் பச்சை

         கல்வித்தரம் குறைந்துள்ளமைக்கு சமச்சீர் பாடத்திட்டமே காரணம் என்பது ஒருதலைப் பார்வையாகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. மாணவர்களின் புரிதல் இல்லா படிப்பு இதில் முதலிடம் பெறுகிறது. எந்தப் பாடத்தையும் மனப்பாட நிலையில் மூளையில் ஏற்பதும், அதன் உண்மைத் தன்மையை அறியாத அறியாமையும் கல்வியின் தரத்தைக் குறைக்கிறது. கல்விக்கு அடிப்படையான எண்ணையும் எழுத்தையும் கசடின்றி மாணவர்கள் புரிந்தும் அறிந்தும் கற்றால் கல்வி வளரும். சமச்சீர் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்னும் கருத்து "இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதாகத்தான் ஆகும். 
             கோ. தமிழரசன், செஞ்சி.

         மதிப்பெண்கள் சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது என்கிற கருத்து சரியானதாகும். இப்பாடத்திட்டத்தால் மதிப்பெண்களை அள்ளிக் குவிக்க முடியுமே தவிர, மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிக்க வாய்ப்பில்லை. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் தரம் சமச்சீர் பாடத்திட்டத்தில் இல்லை என்பதே கல்வியாளர்களின் கருத்து. உலகத்தரம் வாய்ந்த கல்வியறிவு பெற வேண்டுமெனில் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
              எஸ். குமரவேல்,
                              அம்மையப்பன்.  

ஏற்க முடியாது  

         ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்று மொழி, ஒரே பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு - இந்த மூன்று வரையறைகளைக் கொண்டதுதான் சமச்சீர் கல்வி முறையாகும். கல்வித்தரம் உயரவேண்டுமானால், பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும். அத்துடன் மாணவர்களின் மனத்தில் பதியுமாறு பாடங்களைப் புரிய வைக்க வேண்டும். மாணவர்களும் புரிந்து படிக்க முயல வேண்டும். சமச்சீர் கல்வித் திட்டத்தால், கல்வித்தரம் குறைந்துள்ளது என்பதை ஏற்த முடியாது.
           வை. பாவாடை, புதுச்சேரி.

          சூழ்ச்சி சமச்சீர் கல்வி பல அறிஞர்களின் ஆய்வுக்குப்பின் கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம். அதில் குறை காண முடியாது. கல்வியின் தரம் அதனால் குறைந்தது என்பது வீண் பேச்சு. மெட்ரிக் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் சமச்சீர் கல்வியைத் தாழ்த்திப் பேசி தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள அல்லது வருகின்ற வருவாய் குறையாமல் இருக்கச் செய்கின்ற சூழ்ச்சியே அன்றி வேறு ஒன்றுமில்லை.
குரு. பழனிசாமி, கோயமுத்தூர்.

        உண்மையே சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தோடு ஒப்பிட்டால் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தின் தரம் குறைவாக உள்ளது என்பது உண்மையே. அதனால்தான் பெரும்பாலான பெற்றோர் தம் குழந்தைகளை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்கள். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்குச் சமமாக உயர்த்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அனைத்து மாணவர்களுக்கும் உண்மையான சமச்சீர் கல்வி கிடைக்கும்.
ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.  

             மனப்பாடம் சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறையவில்லை. குறைந்திருந்தால் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எப்படி 499 மார்க் எடுத்திருக்க முடியும்? நமது கல்வி கற்பிக்கப்படும் முறை மட்டுமே மாற்றம் செய்யப்பட வேண்டும். தற்போதைய கல்விமுறை புரிந்து படிப்பது என்றில்லாமல் மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிப்பதாக உள்ளது. எனவே பாடத்திட்டத்தை மாற்றுவதைவிட கற்பிக்கப்படும் விதத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கலாம்.
துரை.ஏ. இரமணன், துறையூர்.  
சிறப்பு சமச்சீர் பாடப் புத்தகங்களை மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை படித்தால் எந்தப் பாடத்திற்கும் ஆசிரியர் துணையின்றி புரிந்து கொள்ளும் விதத்தில் தேவையான வண்ணப்படங்களுடன் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. ஆட்சி மாறிய சூழலும் தனியார் புத்தகங்களை மாணவர்களிடம் திணித்து வந்த ஆங்கில வழிப் பள்ளிகளின் வியாபாரம் எடுபட முடியாமல் போன நிலையுமே சமச்சீர் புத்தகங்கள் மீது குறை சொல்ல வைத்திருக்கிறது.
இரா. செல்வமணி, திருநெல்வேலி.  

      ஏமாற்றம் ஆளும் கட்சியின் தலையீடு இருப்பதே இந்த இழி நிலைக்குக் காரணம். எனவே மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றன. சமச்சீர் திட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் அகில இந்திய தொழிற்கல்வி நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. பத்தாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்டும் கல்வித்துறை உண்மையில் பெற்றோர்களை ஏமாற்றுகிறது
கே. சீனிவாசன், திருவையாறு.  

          முறையன்று இது ஒரு நல்ல திட்டம். சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறையவில்லை. தேர்ச்சி விகிதம் அதிகமானதை நினைத்து, கல்வித்தரம் குறைந்து விட்டதாக சிலர் புலம்புகின்றனர். இது பிழையான கருத்து. சில மாணவர்களாவது தேர்வில் தோல்வி அடையும் வகையில்தான் வினாத்தாள் அமைய வேண்டும் என்பது முறையன்று. அரசியல் கலக்காத கல்வியாளர்கள் நோக்கில் இத்திட்டம் நல்ல திட்டமே.  
ம.நா. சந்தானகிருஷ்ணன், மிட்டாமண்டகப்பட்டு.  

         கருத்துத் திணிப்பு இந்தக் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. இது நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர்தான் +2, தொழிற்கல்வியிலும் சிறப்பான திறனை வெளிக்காட்டி வருகின்றனர். மெட்ரிக் பள்ளிகளும் சமச்சீர் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் வந்ததால், சி.பி.எஸ்.இ. முறைக்கு அவர்கள் மாறினார்கள். எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடைபெறவில்லை. அதன் விளைவே தற்போது பரப்பப்பட்டு வரும் சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற கருத்துத் திணிப்பு.  
ச. கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார்.    

         பயிற்று முறை சமச்சீர் பாடத்திட்டம் என்பது பல அறிஞர்கள் பரிசீலித்து கொண்டு வரப்பட்ட திட்டமாகும். நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பின்னரே அமல்படுத்தப்பட்டது. இப்பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது என்பது ஏற்பதற்கில்லை. முப்பருவ முறை முற்றிலும் கோணலான பயிற்சி முறை. எனவே பாடத்திட்டத்தை மாற்றும் அவசியமின்றி, பயிற்று முறையை மேம்படுத்தினாலே கல்வித் தரம் உயரும்.
என்.பி.எஸ். மணியன், மணவாளநகர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி