பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ள யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு தொடங்கப்பட்டதன் பின்னணி சுவாரஸ்யமானது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் முடிவடையும் தருவாயில் 1945-ம் ஆண்டில் அலிகார், வாரணாசி (பனாரஸ்), டெல்லி ஆகிய இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்தப் பல்கலைக்கழகங்களை மேற்பார்வையிடுவதற்காகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் பல்கலைக்கழக மானியக் குழு. சுதந்திரத்திற்குப் பிறகு 1947-ல் இதர பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடும் பொறுப்பு யுஜிசிக்கு வழங்கப்பட்டது. 1948-ம் ஆண்டில் மறு நிர்மானம் செய்யப்பட்ட இந்த அமைப்பு இங்கிலாந்தில் இருப்பது போன்ற அதிகாரங்கள், உறுப்பினர்களுடன் முழுமையாகச் செயல்படத் தொடங்கியது. இப்படிச் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்புதான் உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் அமைப்பில் மிகப் பெரியது.
மத்திய மனித வள அமைச்சகத்தின் கீழ் நேரடியாகச் செயல்படும் இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் உள்ளது. புனே, போபால், கொல்கத்தா, ஹைதராபாத், குவஹாட்டி, பெங்களூர் ஆகிய நகரங்களில் துணை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வி ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு ஆகியவை இந்த அமைப்பின் முதன்மைப் பணிகள். இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்குதல், அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு நிதி மானியங்கள் வழங்குதல் போன்ற பணிகளைச் செய்யவும் இந்த அமைப்புக்கே அதிகாரம் உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே யுஜிசி பாலமாகத் திகழ்கிறது. உயர்கல்வி குறித்த முடிவுகளை எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளை வழங்கும் பணியையும் இந்த அமைப்பு செய்து வருகிறது.
இந்த அமைப்புக்கென www.ugc.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றின் பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. யுஜிசி தொடர்பான முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், யுஜியின் அதிகாரங்கள் என அனைத்துத் தகவல்களும் இடம் பிடித்துள்ளன. உயர்க் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் முதலில் பார்க்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய ஓர் அமைப்பு பல்கலைக்கழக மானியக் குழு.