ஆண்டுக்காண்டு சரிகிறது மாணவர் சேர்க்கை அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளே இருக்காது?

அரசு துவக்க பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் வரலாறு காணாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. சில ஆண்டுகளில் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட வேண்டிய அபாயம் உருவாகி உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் மாணவ, மாணவியர் சேர்க்கை சொல்லி கொள்ளும்படி இல்லை. அடித்தட்டு மக்களுக்கும் தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு இங்கிலீஷ் பேசவேண்டும் என்ற மோகம் அதிகரித்துள்ளது. 

இவ்வாறு பலரும் நம்பிக்கை இழந்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் கடந்த 7 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை கடுமையாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளில் அரசின் துவக்க பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை என்பதை விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் புள்ளி விவரம் உணர்த்துகிறது. 
மாநிலம் முழுக்க வேதனை நிலை

விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாவட்டம் என்ற அந்தஸ்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக விட்டு கொடுத்து விட்டு ஒதுங்கி வருகிறது. இழந்த முதலிடத்தை திரும்ப பெற்று விட வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர். இது ஒருபுறம் இருக்க அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரிந்து வருகிறது. 

மாவட்டத்தில் 598 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 344 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், 14 ஆதிதிராவிட நலத்துறை துவக்கப்பள்ளிகள், 13 நகராட்சி துவக்கப்பள்ளிகள், 9 துவக்கப்பள்ளிகள் என மொத்தம் 978 துவக்கப்பள்ளிகள் உள்ளன. 149 ஊராட்சி நடுநிலைப்பள்ளிகள், 62 உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், 2 ஆதிதிராவிட நல நடுநிலைப்பள்ளிகள், ஒரு நடுநிலைப்பள்ளி என மொத்தம் 214 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. 

மாவட்டத்தில் 2007ம் ஆண்டு அரசின் துவக்க பள்ளிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 651 மாணவ, மாணவியர் கல்வி கற்றனர். ஆனால் 2014ல் 46 ஆயிரத்து 603 மாணவ, மாணவியர் மட்டும் கல்வி கற்று வருகின்றனர். 2007ம் ஆண்டை 2014ல் ஒப்பிடுகையில் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்து 11 ஆயிரத்து 48 குறைந்துள்ளது. நடுநிலை பள்ளிகளில் 2007ம் ஆண்டில் 25 ஆயிரத்து 623 மாணவர்கள் கல்வி கற்றுள்ளனர். 2014ல் 22 ஆயிரத்து 354 ஆக குறைந்துள்ளது.

விரிவான ஷாக் ரிப்போர்ட் 
மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டிய நிலையில் துவக்க பள்ளிகளில் பயின்ற 71 சதவீத மாணவர்களும், நடுநிலைப்பள்ளிகளில் பயின்ற 23 சதவீத மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி சென்று விட்டனர். இதே விகிதாச்சார தேய்வு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி மக்கள் படையெடுப்பதை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளில் 1 மற்றும் 6 வகுப்புகளில் ஆங்கில மொழிப்பிரிவை துவங்கியது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழிப்பிரிவு துவங்கியும் மாணவர்கள் சேர்க்கை எதிர்ப்பார்த்த அளவில் இல்லை. 

இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்தாண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யத்தில்தான் இருக்கும். இதனை மேம்படுத்த அரசு பள்ளிகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த அரசும், ஆசிரியர்களும் பாடுபடவேண்டும். செய்ய தவறும் பட்சத்தில் வரும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு பள்ளிகளும் இருக்காது. ஆசிரியர்கள் பணியிடமும் இருக்காது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி