கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடத்தப்பட உள்ளது.

கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடத்தப்பட உள்ளது.

தகுதியுள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் பி.வி.எஸ்.சி. படிப்புக்கு மொத்தம் 14,571 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 14,293 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உணவு தொழில்நுட்ப படிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட 2,521 விண்ணப்பங்களில் 2,314 விண்ணப்பங்கள் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கோழியின உற்பத்தி படிப்புக்கு விண்ணப்பிக்கப்பட்ட 1,606 விண்ணப்பங்களில், 1,471 விண்ணப்பங்கள் தகுதியானவை.


கலந்தாய்வு தேதி: ஜூலை 30-இல் பி.வி.எஸ்.சி. படிப்பில் சிறப்புப் பிரிவினர் மற்றும் பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஜூலை 31-இல் பி.வி.எஸ்.சி. பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்தப்படும்.


ஆகஸ்ட் 1-ஆம் தேதி பி.டெக். உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின உற்பத்தி தொழில்நுட்ப படிப்புகளில் அனைத்துப் பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும்.


எவ்வளவு இடங்கள்: ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பை (பி.வி.எஸ்சி.) பொருத்தவரை சென்னை (120 இடங்கள்), நாமக்கல் (80), திருநெல்வேலி (40), ஒரத்தநாடு (40) ஆகிய பகுதிகளில் உள்ள 4 கல்லூரிகளில் மொத்தம் 280 இடங்கள் உள்ளன.


இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 8 இடங்களும், விளையாட்டுப் பிரிவின் கீழ் 5 (மகளிர் -3, ஆண்கள் -2) இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 இடங்களும், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 1 இடமும், பிளஸ்-2 தொழில் பிரிவு படிதத மாணவர்களுக்கு 14 இடங்களும் ஒதுக்கப்படும்.


மத்திய அரசு ஒதுக்கீட்டுக்கு (இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில்) 48 இடங்கள் ஒப்படைக்கப்படும்.


சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம் கொடுவள்ளியில் உள்ள கல்லூரியில் நான்கரை ஆண்டு பி.டெக். (எஃப்.டி.-உணவுத் தொழில்நுட்பம்) படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.


ஒசூரில் உள்ள கல்லூரியில் பி.டெக். (பிபிடி-கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) படிப்பில் 20 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி