ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கியதால் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா

ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கியதால் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

சமஸ்கிரியா அறக்கட்டளை சார்பில் நூலகங்களை மாணவர்களை நோக்கி எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 50 அரசுப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

சென்னை எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.சபிதா பங்கேற்று அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியது: பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள், புத்தகங்கள், புத்தகப் பைகள், அட்லஸ் புத்தகங்கள், லேப்-டாப்கள் உள்ளிட்டவற்றை வழங்கும் திட்டங்கள் ரூ.4 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.


ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டதால் இந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை, திருச்சியில் ரூ.50 லட்சத்தில் குழந்தைகளுக்கென தனி நூலகம், சென்னை சாந்தோமில் மாற்றுத் திறனுடையவர்களுக்கென தனி நூலகம் என பல புதிய நூலகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10 அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மாணவர்களிடத்தில் இந்தத் திட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து இப்போது 50 பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது என்றார் அவர்.


இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே புத்தகங்கள் பெற்ற துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜி.கிருஷ்ணசாமி பேசியது:


இந்தத் திட்டத்தின் கீழ் எங்கள் பள்ளிக்குத்தான் முதன் முதலில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. நூலகமே மாணவர்களைத் தேடிச் சென்றது. வகுப்பறையில் மாணவர்கள் பார்வையில் எந்த நேரமும் படும் வகையில் புத்தகங்கள் வைக்கப்பட்டன.


வண்ணப் படங்களுடன் இருந்த இந்தப் புத்தகங்களை மாணவர்கள் வகுப்பு இடைவேளைகளில் படித்தனர். அதோடு, பள்ளி முடிந்த பிறகு வீடுகளுக்கும் புத்தகங்களை மாணவர்கள் எடுத்துச்சென்றனர். புத்தகங்கள் கிழிந்தாலும் பரவாயில்லை, மாணவர்கள் தொலைத்துவிட்டாலும் பரவாயில்லை என அறக்கட்டளை தெரிவித்திருந்தது. இதை மாணவர்களிடம் தெரிவித்தோம். ஆனாலும் புத்தகங்களைச் சேதமில்லாமல் மாணவர்கள் ஒப்படைத்தனர். புத்தகங்களைப் படித்த மாணவர்களிடத்தில் நல்ல மாறுதல் ஏற்பட்டது. மாணவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததோடு, மொழியறிவும் மேம்பட்டது. அவர்களின் பேச்சு, எழுத்து, கட்டுரை எழுதும் திறன்களும் வளர்ந்தன என்றார் அவர்.


இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் புத்தகங்கள் பெற்ற ஒக்கியம் துரைப்பாக்கம் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் டிக்சின் பேசும்போது, வகுப்பு இடைவேளைகளிலும், வகுப்புக்கு ஆசிரியர்கள் வராத போதும் புத்தகங்களைப் படித்தோம். ஆசிரியர்களின் அனுமதியோடு இந்தப் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துச்சென்றும் படித்தோம், என்றார்.


சமஸ்கிரியா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சந்தியா ஜெயச்சந்திரன், பத்திரிகையாளர் என்.ராம், பியூர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.பொன்னுசாமி, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி