ஆசிரியர் இடமாற்ற வழக்கு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிப்பது இல்லை -DINAKARAN NEWS


நீதிமன்றத்தை அதிகாரிகள் மதிக்காதது வேதனை அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் தேர்வு வாரி யம் மூலம் நான் உள்பட சுமார் 100 பேர், ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டோம். 2006ல் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.இந்த 3 மாவட்டங்களில் சுமார் 280 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகள் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சிறுபான்மையினர் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த துறையின் கீழ் இயங்கும் பள்ளியில் பணியாற்றும் எங்களை, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து, எங்களை வேறு மாவட்ட அரசு பள்ளிக்கு மாற்ற பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை அமல்படுத்தாததால் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து எங்களுக்கு இடமாற்றம் வழங்க உத்தரவிட்டது.

அதன்பிறகும் அதிகாரிகள் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கவில்லை. எனவே உயர் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:‘‘உயர் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் மதிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இப்படி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், மக்களிடம் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விடும். நீதி நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வது போலாகிவிடும். அதிகாரிகள் கோர்ட் உத்தரவை மதிப்பது இல்லை. இதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதி பரிபாலனம் சரியாக செய்ய முடியாது. அதிகாரிகள் செயல் நீதித்துறைக்கு ஆபத்தாகவிடும். எனவே வரும் 23ம் தேதி பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரன் முருகன், பிற்பட்டோர் நலத்துறை ஆணை யர் அசோக் டோங்க்ரே ஐ.ஏ.எஸ் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி