பழங்காலத்து சட்டங்களை தூக்கி எறியுங்கள்: அரசு செயலாளர்களுக்கு மோடி அறிவுரை

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இடையூறாக இருக்கும் பழங்காலத்து சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு மக்கள் பிரச்சனைகளில் விரைவாக முடிவெடுக்கும்படி, அனைத்து துறைகளின் அரசு செயலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் அனைத்து துறைகளை சேர்ந்த அரசு செயலாளர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். சுமார் 2 1/2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசின் 77 செயலாளர்கள் பங்கேற்றனர்.

சூழ்நிலை நிமித்தமாக தங்களது ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி செயல்பட முடியவில்லை என்று சில செயலாளர்கள் தெரிவித்த கருத்துகளை உன்னிப்பாக கேட்ட பிரதமர், அதிகாரிகளின் திறமை மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இடையூறாக இருக்கும் பழங்காலத்து சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு, திட்ட நடைமுறைகளை எளிமையாக்கி, மக்களுக்கு உடனடியாக பலன்கள் சென்று சேரும்படி செய்யுமாறு அதிகாரிகளை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

‘பழைய சட்டங்களும் நடைமுறைகளும் காலாவதியாகி, அவை அரசின் செயல்பாட்டுக்கு உதவுவதை விட, அதிக குழப்பத்துக்கே வழி வகுக்கின்றன’ எனவும் அவர் தெரிவித்தார். சில முடிவுகளை அதிகாரிகளே எடுக்கலாம் என்று குறிப்பிட்ட மோடி, உங்களுக்கு நான் துணையாக இருப்பேன். அரசு அதிகாரிகள் எந்த நேரத்திலும் என்னை தொலைபேசி மூலமாகவும், ‘இ-மெயில்’ வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்றும் உறுதியளித்தார்.
திறமையான நிர்வாகத்திற்கு தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்திய மோடி, ஒரு மக்களாட்சியில் மக்களின் குறை தீர்ப்பு என்பது மிகவும் அவசியம். எனவே, இது தொடர்பாக தகவல் தொழில் நுட்பம் உயர்ந்த பலனை தரும்.
குழு செயல்பாடும் மிகவும் முக்கியம். ஒவ்வொரு துறைச் செயலாளர்களும் தங்களது குழுவின் தலைவர்களாக இருந்து செயலாற்ற வேண்டும். கூட்டு நடவடிக்கையின் மூலமாக மட்டுமே விரைவாக இலக்கை எட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டு காலத்தில் பிரதமர்- துறை செயலாளர்கள் இடையே இதைப்போன்ற ஒரு ஆலோசனை கூட்டம் நடப்பது இதுவே முதல் முறை என்று டெல்லி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி