புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எவ்வாறு - அரசாணை விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை புதிய வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில் கூறியிருக்கும் விவரம் வருமாறு:–

இடை நிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய மதிப்பெண் வெயிட்டேஜ் முறை வருமாறு:–

இடை நிலை ஆசிரியர்கள் 

பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண், இடைநிலைஆசிரியர் பயிற்சிக்கு 25 மதிப்பெண், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்

பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களை சதவீதத்தில் கணக்கில் கொண்டு அதை 15ஆல் பெருக்கி, பெருக்கினால் வரும் தொகையைக் கொண்டு அதை 100 ஆல் வகுக்க வேண்டும். உதாரணமாக ஒரு மாணவர் பிளஸ்–2 தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்தால் அதை 15 ஆல் பெருக்கி 100 ஆல் வகுத்தால் கிடைப்பது 13.5 மதிப்பெண்.

அதுபோல ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 25 ஆல் பெருக்கி வரும் தொகையை 100–ஆல் வகுக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஆசிரியர் பயிற்சியில் 85 சதவீத மதிப்பெண் எடுத்தால் அதை 25ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுத்தால் வரும் மதிப்பெண் 21.25 ஆகும்.

அடுத்து ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 60 ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுக்கவேண்டும்.

உதாரணமாக ஆசிரியர் தகுதி தேர்வில் ஒருவர் 150–க்கு 130 மதிப்பெண் எடுத்திருந்தால் அது 86.66 சதவீதம். அதை 60 ஆல் பெருக்கி 100 ஆல் வகுக்க 51.99 மதிப்பெண் கிடைக்கும். மேற்கண்டவாறு ஒரு மாணவர் மதிப்பெண்களை பெற்றிருந்தால் அவர் 100–க்கு 86.74 மதிப்பெண் எடுத்துள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

பட்டதாரி ஆசிரியர்கள் 

இதே போல பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பெண் வெயிட்டேஜ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

பிளஸ்–2 தேர்வுக்கு 10 மதிப்பெண்களும், பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்ணுக்கு 15 மதிப்பெண்களும், பி.எட்.படிப்பில் எடுத்த மதிப்பெண்களுக்கு 15 மதிப்பெண்களும், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் கொடுக்கப்பட உள்ளது.

இந்த மதிப்பெண்கள் அனைத்தும் 100–க்கு கணக்கிடப்பட உள்ளது.

பிளஸ்– மதிப்பெண் சதவீதத்தை 10 ஆல் பெருக்கி அதை கொண்டு 100ஆல் வகுத்தால் வருவது கணக்கிடப்படும்.

அதுபோல பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை கொண்டு அதை 15 ஆல் பெருக்கி அதைக்கொண்டு 100 ஆல் வகுத்தால் கிடைப்பது கணக்கிடப்படும்.

பி.எட்.படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை 15 ஆல் பெருக்கி அதை 100 ஆல் வகுத்து கிடைப்பதுதான் அந்த மாணவருக்கு கணக்கிடப்படும் மதிப்பெண் ஆகும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிபெண் சதவீதத்தை 60 ஆல் பெருக்கி அதைகொண்டு 100 ஆல் வகுத்தால் கிடைப்பதை கொள்ள வேண்டும்.

இப்படி 100–க்கு கணக்கிடப்படும் மதிப்பெண்களைக் கொண்டும் இட ஒதுக்கீட்டைக் கொண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஒரு மாதத்திற்குள் வெளியிட மும்முரம் 

இதில் ஒரே மதிப்பெண்ணை இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பெற்றால் அவர்களில் யார் பிறப்பால் மூத்தவரோ அவரே தேர்ந்து எடுக்கப்படுவார்.

இவ்வாறு அந்த அரசாணையில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மதிப்பெண் வெயிட்டேஜ் முறையில் ஆசிரியர்களை தேர்ந்து எடுத்து இன்னும் ஒரு மாதத்திற்குள் ஆசிரியர் தேர்வு பட்டியலை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராக உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி