அரசு உதவி பெறும் பள்ளியில் கட்டாய கட்டணம் வசூல்: அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை

அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக, மறைமுக கட்டாய கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் அல்லது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கலாம்" என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.


மத்திய, மாநில அரசின் சார்பில் பள்ளிக் கல்வித் துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த, துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஏழை, எளிய மாணவர்கள் பயனடையும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது.


பெண் குழந்தை கல்வி வளர்ச்சி, இடைநிற்றல் தடுத்தல், மாற்றுத்திறன் குழந்தைகளை ஊக்குவித்தல், முப்பருவ கல்வி, சத்துணவு, சீருடை, நோட்டு புத்தகம், பாடப்புத்தகம், புத்தகப் பை, கல்வி உபகரணம், செருப்பு, நிலவரைபடம், சைக்கிள், லேப்டாப், சிறப்பு ஊக்கத்தொகை, கல்வி உதவித் தொகை ஆகிய 14 வகையான திட்டம் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.


மேலும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி எவ்வித கட்டணமும் மாணவரிடம் வசூல் செய்யாமல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட வேண்டும். ஆனால், தற்போது, 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகள் போலவே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியிலும் நடக்கிறது.


அரசு பள்ளிக்கு அரசின் சார்பில் கட்டிடம், ஆசிரியருக்கு சம்பளம், நலத்திட்டம் செயல்படுத்துதல் இருப்பது போல, அரசு உதவி பெறும் பள்ளிக்கும் கட்டிடம் கட்டுதல் தவிர ஆசிரியருக்கு சம்பளம், நலத்திட்டம் செயல்படுத்துதல் ஆகியவற்றை, அரசே செய்கிறது. அரசு உதவிபெறும் பள்ளியை நடத்துபவர், சேவை நோக்கத்தோடு, அடிப்படை வசதியை மட்டும் செய்து அரசிடம் தேவையான உதவிகளை பெற்றுக் கொள்கிறார்.


இந்நிலையில், மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்காக, அரசு உதவிபெறும் பள்ளியை நாடும் போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தார் கட்டாய கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் 8,395 துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு உதவிபெறும் பள்ளி உள்ளது. தற்போது, மாணவர் சேர்க்கை, மதிப்பெண், மாற்றுச் சான்று பெறுதல் ஆகிய பணிகள் பள்ளிகளில் நடப்பதால், சில அரசு உதவிபெறும் பள்ளிகள் பிளஸ் 1 மாணவருக்கு தலா 3,000 ரூபாய் வரை கட்டிட, போக்குவரத்து, சிறப்பு வகுப்பு என மறைமுக நன்கொடை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது, என்றனர்.


நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாணவர் சேர்க்கை மற்றும் மாற்று சான்றிதழ் வழங்கும் போது எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதையும் மீறி வசூலித்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 1997, கலெக்டர் அலுவலக எண்: 04286 - 281101, 280103, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எண்: 232094, மாவட்ட கல்வி அலுவலர் எண்: 223762 என்ற எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம்.


விசாரணையில், கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்வதுடன், மேல் நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி