ஆசிரியர் தேர்வில் புதிய 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அறிமுகம்: அரசாணை வெளியிடப்பட்டது

தமிழகத்தில், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு, புதிய, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணை, நேற்று வெளியிடப்பட்டது.


கடந்த 2012ல், ஆசிரியர் தேவையை விட, தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை, வெறும், 2,400 பேர் என்பதால், எந்த பிரச்னையும் இன்றி, அனைவரும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், அதே ஆண்டின், இறுதியில் சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. பின், 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் தகுதி அள வை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே, தேர்ச்சி பெற்றோரில் இருந்து, 15 ஆயிரம் பேர், ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களை, பழைய, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது.

பழைய மதிப்பெண் முறை:

டி.இ.டி., தேர்வில், 150க்கு பெறும் மதிப்பெண், 60க்கும், பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, பட்டப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றில், தேர்வர் பெற்ற மதிப்பெண், 40க்கும், 'வெயிட்டேஜ்' முறையில் கணக்கிட்டு, ஆசிரியரை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது. இடைநிலை ஆசிரியராக இருந்தால், பிளஸ் 2 தேர்வுக்கு, 15 மதிப்பெண் (அதிகபட்ச வெயிட்டேஜ் மதிப்பெண்), டிப்ளமோ படிப்பிற்கு, 25 மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில், 60 மதிப்பெண் என, 100க்கு, தேர்வர் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு:

இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை, மதிப்பெண் எடுத்தால், 15 மதிப்பெண் (முழு மதிப்பெண்); 80 முதல் 90 வரை எடுத்தால், 12; 70 - 80 வரை, 9; 60 - 70 வரை, 6; 50 - 60 சதவீதம் வரை, 3 மதிப்பெண் என, இருந்தது. இதேபோல், பட்டதாரி ஆசிரியருக்கும், 40 மதிப்பெண், 'வெயிட்டேஜ்' முறையில் அறிவிக்கப்பட்டது. இந்த முறையை எதிர்த்தும், தேர்வர்கள் பெற்ற ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய, 'வெயிட்டேஜ்' முறையை அமல்படுத்த வலியுறுத்தியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், பலர் வழக்கு தொடர்ந்தனர்.

பழைய முறை ரத்து:

இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஏப்ரல், 29ம் தேதி, புதிய உத்தரவை பிறப்பித்தது. பழைய, 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய முறையை, அமல்படுத்த உத்தரவிட்டது. மேலும், உயர் நீதிமன்றம், ஒரு புதிய முறையை, தமிழக அரசுக்கு, யோசனையாகவே தெரிவித்தது. அதைப்போலவோ அல்லது வேறு அறிவியல் பூர்வமான முறையையோ, அறிமுகப்படுத்தலாம் என்றும், அரசுக்கு தெரிவித்தது.

புதிய அரசாணை:

தற்போது, உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனையை ஏற்று, அதன்படி, புதிய, 'வெயிட்டேஜ்' முறையை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், சபிதா வெளியிட்டு உள்ளார்.

அரசாணை முழு விவரம்:

இடைநிலை ஆசிரியர்

* பிளஸ் 2 தேர்வுக்கு, அதிகபட்சமாக, 15 மதிப்பெண், 'வெயிட்டேஜ்' முறையில் வழங்கப்படும். ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பிற்கு, 25 மதிப்பெண் மற்றும் டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60க்கும், கணக்கில் கொள்ளப்படும்.


* பிளஸ் 2 தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண், சதவீதமாக கணக்கிட வேண்டும். சதவீதத்தை, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணுடன் பெருக்கி, பின், நூறால் வகுக்க வேண்டும்.


* இதேபோல், ஆசிரியர் பயிற்சி டிப்ளமோவில் பெ றும் மதிப்பெண், டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு வரும், மதிப்பெண் ஆகியவற்றை கூட்டி, ஒட்டுமொத்த மதிப்பெண் வழங்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர்

* பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், இதே முறை அமல்படுத்தப்படும். பட்டதாரி ஆசிரியர் தேர்வில், பிளஸ் 2க்கு, 10 மதிப்பெண், பட்டப் படிப்பிற்கு, 15 மதிப்பெண், பி.எட்., படிப்பிற்கு, 15 மதிப்பெண் என, மொத்தம், 40 மதிப்பெண் கணக்கிடப்படும். டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண், 60க்கு கணக்கிடப்படும்.


* அனைத்து மதிப்பெண்ணும், தேர்வர் பெற்ற மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும்.


* பல தேர்வர்கள், ஒரே மதிப் பெண் பெற்றால், அவர்கள் பிறந்த தேதியின் அடிப்படையில், வயதில் மூத்தவர்களுக்கு, தேர்வில், முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய 'வெயிட்டேஜ்' முறையை கணக்கிடுவது எப்படி?

ஒரு தேர்வர், பிளஸ் 2 தேர்வில், 1,200க்கு, 1,121 மதிப்பெண் பெற்றால், அவரது சதவீதம், 93.41. இதை, 15ல் பெருக்கி, பின், நூறால் வகுத்தால் வரும் மதிப்பெண், 14.01. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட, 15 மதிப்பெண்ணுக்கு, 14.01 மதிப்பெண்ணை, தேர்வர் பெறுகிறார். இதே தேர்வர், டி.இ.டி., தேர்வில், 150க்கு, 82 மதிப்பெண் பெறுகிறார் என்றால், இவரது மதிப்பெண் சதவீதம், 54.66. 54.66ஐ, அறுவதால் பெருக்கி, நூறால் வகுத்தால் வருவது, 32.80. பின், 14.01 உடன், 32.80ஐ கூட்டினால், ஒட்டுமொத்த மதிப்பெண் 46.81. மொத்தத்தில், 100க்கு, 46.81 மதிப்பெண் பெற்றார் என, கணக்கிடப்படும். பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கும், இதே முறையில் கணக்கிடப்படும்.

யாருக்கும் பாதிப்பு வராது:

இதுகுறித்து, கல்வியாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது: தற்போது அறிவித்துள்ள, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையால், யாருக்கும் பாதிப்பு வராது. தேர்வரின், ஒவ்வொரு மதிப்பெண்ணும், 'வெயிட்டேஜ்' முறையின் கீழ் வந்துவிடுகிறது. இந்த முறையில், 'ரேங்க்' பட்டியலை தயாரித்து, விரைவில், புதிய ஆசிரியரை நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி