வாரத்தில், ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சக உயர் வட்டாரங்களில் விசாரித்த போது, அவர்கள் கூறியதாவது:அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா, இல்லையா என்பதை பரிசோதிக்கும்படி, பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.அத்துடன், அனைத்து அமைச்சகங்களிலும், வருகை பதிவுக்கான, பயோமெட்ரிக் சாதனங்களை, விரைவில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தற்போது, துறை ரீதியான, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி, பலரும், சனிக்கிழமைகளில், இனி, அலுவலகம் வருவர். விரைவில், அரசு தரப்பில் இருந்து, இதுதொடர்பாக, அதிகாரப்பூர்வ ஆணை வெளியாகும். அதன்பின், சனிக்கிழமை வேலை முழு அளவில் நடைமுறைக்கு வந்து விடும்.இவ்வாறு, உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.அமைச்சக ஊழியர்களுக்கு,தற்போது, அறிமுகமாகி உள்ள, ஆறு நாள் வேலை, விரைவில், இதர மத்திய அரசு ஊழியர்களுக்கும் அமலாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.