படிப்பு மட்டுமல்ல... பாதுகாப்பும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஒன்றல்ல... இரண்டல்ல... கிட்டத்தட்ட 45 நாட்களுக்கும் மேலாக கோடை விடுமுறையை குதூகலமாக கழித்து விட்டு இன்று மாணவர்கள் பள்ளிக்கு செல்ல உள்ளனர். விளை யாட்டு, சுற்றுலா, பார்க், சினிமா என்று பெற்றோருடன் உற்சாகமாக கழித்த இந்த நாட்கள் மீண்டும் கிடைக்க 10 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.
அந்த உற்சாகத்தில் இருந்து மீண்டு படிப்பு... படிப்பு...படிப்பு இதை மட்டுமே தாரக மந்திரமாக கொண்டு மாணவர்கள் புத்தகப்பையுடன் பள்ளிக்கூட வாசலை இன்று மிதிக்க உள்ளனர்.
‘வாயைக்கட்டி, வயித்தை கட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டினு பணத்தை வாங்கி நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்று படிக்க பணம் கட்டி முடிச்சாச்சு. இனி பிள்ளையோ, பொண்ணோ படிச்சு நல்ல மார்க் வாங்கணும். அவ்வளவுதான்’ என்று பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பர். இத்தோடு முடிந்து விடவில்லை பெற்றோர்களாகிய உங்கள் பொறுப்பு. இனிமேல்தான் அதிகரிக்கவே போகிறது.
வாகன போக்குவரத்து:
முதலில் மாணவர்களுக்கு அவசியமானது பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதி. அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பெரும்பாலானவை பஸ்கள், வேன்கள் வைத்திருக்கின்றன. இதற்கென்று கட்டணம் வசூலித்து மாணவர்களை ஏற்றி, இறக்கி விடுகின்றனர்.
இதன் மூலம் சற்று தொலைவில் உள்ள பள்ளியில் பிள்ளைகளை சேர்த்த பெற்றோருக்கு இந்த வசதி பெரும் உதவியாக இருக்கும். ஆனால், இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது.
1. பஸ்சில் அல்லது வேனில் அவசர வழி இருக்கிறதா?
2. டிரைவர் வாகனத்தை வேகமாக இயக்குகிறாரா?
3. வாகனத்தில் உதவியாளர் பிள்ளைகளை ஏற்றி, இறக்க உதவுகிறாரா?
4. உங்கள் வசம் பிள்ளையை ஒப்படைத்து விட்டு செல்கிறாரா?
5. டிரைவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவரா?
என்பது உட்பட்ட விஷயங்களை முக்கியமாக கவனித்துக் கொள்ள வேண்டும். கூடுமானவரை டிரைவர், உதவியாளர்களின் செல்போன்கள், முகவரிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் வேன், கார், ஆட்டோக்களை அமர்த்தும் பெற்றோர்களும் மேற்கண்ட விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பொதிமூட்டைகளை போல மாணவர்களை வாகனங்களில் திணித்து அள்ளி செல்கின்றனரா? அல்லது குறிப்பிட்ட அளவு மட்டுமே மாணவர்களை அழைத்து செல்கின்றனரா என கவனிக்க வேண்டும்.
ஆட்டோக்களில் அனுப்பும்போது டிரைவர்கள் பக்கத்தில் மாணவ, மாணவிகளை அமர வைக்க அனுமதிக்க கூடாது. முக்கியமாக பெண் குழந்தைகளை அனுமதிக்கவே கூடாது. குறைந்த பட்சம் டிரைவர்கள் 30-40 கிமீ வேகத்தில் செல்ல பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் டிரைவர்களுக்கு அறிவுறுத்தலாம். முக்கியமாக, அழைத்து வர முடியாத தகவலை டிரைவர்கள் கண்டிப்பாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். விடுமுறையில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததோடு வேலை முடிந்தது என வருவாய்த்துறை அதிகாரிகள் அமைதியாக இருந்து விடக்கூடாது. தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசாரும் பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றி செல்கின்றனரா என பார்வையிட வேண்டும். அதிகளவு ஏற்றி சென்றால் உடனே அபராதம் விதிக்கவேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. மேலும், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், வகுப்பறையில் காற்றோட்டம், கழிப்பறை வசதிகள் திருப்திகரமாக உள்ளதா என மாணவர்களிடம் பெற்றோர் கேட்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடந்த அன்றாட நிகழ்வுகளை மாணவர்களிடம் பெற்றோர் பகிர்ந்து கொள்வது மிகமிக முக்கியம்.