பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வரும் கல்வியாண்டு முதல் தமிழ் மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வெழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு,'தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கங்கள்' வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி நலச்சங்கம் சார்பில், தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைகூட்டம் டாடாபாத்தில் நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சாவித்திரி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில், பள்ளி அங்கீகாரம் சார்ந்த ஒப்புதல் வழங்க துரித நடவடிக்கைகளை கடைபிடித்தல், பள்ளி வாகனங்களில் நடைமுறைப்படுத்த இயலாத 10 அம்சங்களை நீக்குதல், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட ஜந்து அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில்,''தனியார் பள்ளிகளின் இடநிர்ணயம் சாந்த கமிட்டியின் அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு உடனடி தீர்வை அறிவிக்க வேண்டும். மேலும், பத்தாம் வகுப்பில் வரும் கல்வியாண்டு முதல் தமிழை முதல்பாடமாக கொண்டு மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிப்பை வரவேற்கின்றோம், '' என்றார்.