அரசுப் பணிகளை நிரப்பும் முன் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் எதிர்காலத்தில் நிரப்பப்படும் அனைத்து அரசுப் பணிகள் தொடர்பாகவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் காலிப் பணியடங்களை நிரப்புவதற்காக கடந்த 2007-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.ஜெகநாதன் என்பவர் பங்கேற்றார். ஆனால், அதில் அவர் தேர்வாகவில்லை.


இந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு கிராம உதவியாளர் பணிக்காக காலியாக உள்ள 25 இடங்களை நிரப்புவதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வர்கள் அழைக்கப்பட்டனர். இந்த தேர்வுப் பணியின்போது, அது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவில்லை.


இதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளை நிரப்பும் முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை.


எனவே, அரசுப் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது, வேலைவாய்ப்புச் சட்டம் 1959-ன் படி அரசுப் பணியில் எந்தத் துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டாலும் அதை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது.


விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்தத் தவறும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் அவர் உத்தரவிட்டுள்ளார்.


வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் மட்டுமே தகவல் அனுப்பி பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது.


பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளது தொடர்பாக அதிகமானோர் படிக்கும் பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.


மேலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் விளம்பரப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிகளுக்கு மட்டும் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


எனவே, எதிர்காலத்தில் காலியாக உள்ள அரசுப் பணிகளை நிரப்புவதற்கு முன்பு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.


இந்த உத்தரவை தமிழக தலைமைச் செயலருக்கு உடனடியாக உயர்நீதிமன்ற பதிவுத் துறை அனுப்ப வேண்டும்.


தலைமைச் செயலர் இதர அனைத்து துறைச் செயலர்களுக்கும் இதை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி