வருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு

நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள் பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.

அவையாவன:

* வருமான வரி விலக்கு உச்சவரம்பை, தற்போதுள்ள, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து, குறைந்தபட்சம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, சம்பளதாரர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. தேர்தல் பிரசாரத்தின் போது, 'வருமான வரியில், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' என, பலமுறை மோடி அறிவித்துள்ளதால், இது தான் அவரின் முக்கிய சீர்திருத்தமாக இருக்கும் என, பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

* நிரந்தர கழிவு என்ற விதத்தில், ஆண்டுக்கு, 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி செலுத்துவோருக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தது; அது மீண்டும் தொடர வேண்டும்.பெண்களுக்கு இவ்வளவு, பிற பிரிவினருக்கு இவ்வளவு என இருந்தது, 2005ல், மன்மோகன் சிங் அரசால் காலாவதியானது; இப்போது, 50 ஆயிரம் ரூபாய், நிரந்தர கழிவாக எதிர்பார்க்கப்படுகிறது.

* வீட்டுக்கடன் பெற்றவர்கள், ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை, வட்டியில், வருமான வரி விலக்கு பெறலாம் என, உள்ளது. இந்த அளவை, குறைந்தபட்சம், மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உயர்த்த வேண்டும்.வீட்டுக்கடன் வருமான வரி வட்டி விலக்கு, 2001ல் நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப் பின் மாற்றியமைக்கப்படவில்லை.

* ஊழியர்களின் மருத்துவச் செலவாக, ஆண்டுக்கு, 15 ஆயிரம் ரூபாய் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்; இதை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.இந்த தொகை, 1998ல் நிர்ணயம் செய்யப்பட்டது; அதற்குப் பின் மாற்றப்படவில்லை.

*வருமான வரி விலக்கிற்கான, '80 சி' போன்ற பிரிவுகளின் படி, அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் தான் விலக்கு பெற முடிகிறது; இதை, மூன்று லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

நன்மைகள் என்னென்ன?

*வீட்டுக்கடன் வட்டி வரிச்சலுகையை அதிகரிப்பதால், கட்டுமான தொழில் மேலும் விருத்தியடையும்.

*வருமான வரி உச்சவரம்பை உயர்த்துவதால், மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும்; சேமிப்பு உயரும், முதலீடு அதிகரிக்கும், அன்றாட பயன்பாட்டு பொருள் உற்பத்தி துறை வளர்ச்சி அடையும்.

*நிலையான கழிவு கிடைப்பதால், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயரும்; வருமானத்தை குறைத்து காண்பிக்கும் முயற்சிகள் இருக்காது.

*மருத்துவ செலவுக்கான வரி விலக்கை அதிகரிப்பதால், மருத்துவ சேவைகள் துறை விரிவடையும்; பயனாளருக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்கும்.

*'80 சி' பிரிவில் விலக்கு கோரும் தொகை உயரும் போது, வரி விலக்கிற்கான முதலீடுகளும் அதிகரிக்கும்; இதனால், பணவீக்கம் கட்டுப்படும்.


நிதியமைச்சர் சொல்வது என்ன?

உற்பத்தி துறை மற்றும் சுரங்கத் தொழில் வீழ்ச்சியால், கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. 4.7 என்ற அளவில் உள்ள வளர்ச்சியை மேம்படுத்துவதும், அதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், எங்களின் முதல் குறிக்கோள். இன்சூரன்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீடு, சரக்கு மற்றும் சேவை வரி, நேரடி வரி விதிப்பு நெறிமுறைகள் போன்றவை, முந்தைய அரசால் முடக்கப்பட்டு உள்ளன; அவற்றை சரி செய்ய கவனம் செலுத்தப்படும்.முதலீட்டில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். வர்த்தகம், ஓட்டல், போக்குவரத்து துறையில், எதிர்மறையான எண்ண ஓட்டங்கள் உள்ளன; அவற்றை சரி செய்ய வேண்டும்.ஏப்ரலில், 8.9 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை, குறைப்பது தான் முக்கிய வேலையாக இருக்கும். அது போல், மொத்த பொருளாதார வளர்ச்சியில், 10.1 சதவீதமாக இருக்கும் வரிவசூலை அதிகரிக்க நடவடிக்கை 
மேற்கொள்வோம்.இவ்வாறு, நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரி அவசியம்:

சோழநாச்சியார் ராஜசேகர்தமிழ் தொழில் வர்த்தக சபை, சென்னை:சராசரி வருவாய் அதிகரித்துள்ளதால், வருமான வரி உச்சவரம்பை, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தலாம். சி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த வேண்டும்.இதற்கு, உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களுடன் சுமுக பேச்சு நடத்தி, இதை கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.

வருமான உச்சவரம்பு உயர்த்த வேண்டும்:

ஜெ.ஜேம்ஸ் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறு தொழில் முனைவோர் சங்கம், கோவை:நாட்டில் உள்ள எல்லாருக்கும், சொந்த வீடு என்பதை, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது. அதற்காக, வீட்டுக் கடனுக்கான வட்டி வீதத்தை, மத்திய அரசு குறைக்க வேண்டும். வருமான வரி உச்சவரம்பு உயர்த்துவது, எல்லா தரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. உறுதி அளித்த படி, வருமான உச்சவரம்பு உயர்த்த வேண்டும். அரசின் வழிகாட்டி மதிப்பீட்டைக் காட்டிலும், நிலத்தின் விலை, நான்கு மடங்கு வரை விற்கப்படுகிறது.வழிகாட்டி மதிப்பின் படிதான், பதிவு நடக்கிறது; வங்கிக்கடன் கிடைக்கிறது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி