5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்: ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதுபோல் 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த தேர்ச்சி விகிதம் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மாதிரி பெயரில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

2012 நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வில் இணைப்புக் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 2013-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழக தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 506 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 140 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்தக் கல்லூரி பூஜ்ஜியம் தேர்ச்சி விகிதத்துடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.


இதேபோல 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. பெரம்பலூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 55 பேர் தேர்வெழுதியதில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்.

திண்டுக்கலைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 21 பேர் தேர்வெழுதி ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 5 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் 25 பேர் தேர்வெழுதியதில் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 7 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இந்தப் பருவத் தேர்வில் 333 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. 88 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு குறைவாகவும், 50 பொறியியல் கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு குறைவாகவும், 25 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 506 பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் மட்டுமே 80 சதவீதத்துக்கும் மேல் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி அதிக மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்று 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய இரு பல்கலைக்கழக தேர்வுகளிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பின்னடைவை சந்தித்துள்ள பிரபல கல்லூரிகள்: கடந்த சில ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகித்து வந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள், இப்போது தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சில கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை 88 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன. ஒருசில கல்லூரிகள் முதலிடத்தையும் பிடித்து வந்தன.

இந்த நிலையில் 2013 பல்கலைக்கழகத் தேர்வில் இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை.

பி.ஆர்க்.: பி.ஆர்க். படிப்பை 38 கல்லூரிகள் வழங்குகின்றன. 2013 நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழகத் தேர்வில் 17 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

இரண்டு கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. திருச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 45 மாணவர்கள் தேர்வெழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரியில் 11 பேர் தேர்வெழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி