எம்.பி.பி.எஸ்., பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. தரவரிசையில் 'டாப் 10' இடங்களைப் பிடித்த மாணவர்களில், ஒன்பது
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று துவங்கியது. இதற்காக, பெற்றோருடன், மாணவர்கள் குவிந்தனர். நேற்று முன்தினம், சிறப்பு பிரிவில், 44 பேர், எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெற்ற நிலையில், 1,979 எம்.பி.பி.எஸ்., 85 பி.டி.எஸ்., இடங்களுடன் கலந்தாய்வு துவங்கியது.
'டாப் 10' மாணவர்கள்:
தர வரிசையில், சென்னையைச் சேர்ந்த சுந்தர் நடேஷ் முதலிடம் பெற்றார். சென்னை அபிஷேக், ஈரோடு விஜயராம், நாமக்கல் மிதுன், கோவை ஸ்ருதி, நெய்வேலி நிவேதா, நாமக்கல் மைதிலி, கோவை கரோலின் திவ்யா, நாமக்கல் கவுதம், ராசிபுரம் மைவிழி ஸ்ருதி ஆகியோர், 'டாப் 10' இடங்களை பிடித்திருந்தனர். கலந்தாய்வு துவங்கியதும், இவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஐந்தாம் இடம் பெற்ற ஸ்ருதி, கோவை அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தார். ஒன்பது பேரும், சென்னை அரசு மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்தனர். ஒதுக்கீடு ஆணைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தன்னார்வ குழு:
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: முதற்கட்ட கலந்தாய்வு, ஐந்து நாட்கள் நடக்கின்றன. கலந்தாய்வுக்கு வருவோருக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு உதவ, முதலாம் ஆண்டு மாணவர்களைக் கொண்டு, தன்னார்வ குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகள் தவிர, ஏழு சுய நிதி கல்லூரிகளில் இருந்து, 498 இடங்கள் மாநிலத்திற்கு கிடைத்துள்ளன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தப்படும். இவ்வாறு, கூறினார்.
இதய நிபுணராவேன்!
தர வரிசையில் முதலிடம் பெற்ற சுந்தர் நடேஷ் கூறியதாவது: டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் தந்த உற்சாகத்தால், நல்ல மதிப்பெண் பெற்று, தர வரிசையில் முதலிடம் பெற்றேன். சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது. எம்.பி.பி.எஸ்., முடிந்து, இதய சிகிச்சை நிபுணர் ஆவேன். இவ்வாறு, அவர் கூறினார்.
175 இடங்களுக்கு சிக்கலா?
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், 100 இடங்கள், திருச்சி மருத்துவக் கல்லூரியில், 50 கூடுதல் இடங்கள், சேலம் மருத்துவக் கல்லூரியில், 25 கூடுதல் இடங்கள் என, 175 இடங்களுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் இன்னும் அனுமதி தரவில்லை. மீதமுள்ள, 2,380 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக (357 இடம்), 2,023 இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடக்கிறது. அடுத்த கலந்தாய்வுக்குள், விடுபட்ட, 175 இடங்களுக்கும் அனுமதி கிடைத்துவிடும் என, தெரிகிறது.