TNTET Weightage Survey - கருத்துகணிப்பு முடிவு.
Survey: TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
9/5/2014 Time: 11.00 pm நிலவரப்படி: Poll closed
உடனடியாக வழங்க வேண்டும் 876 (50%) | |
எப்போதுமே வழங்க கூடாது 376 (21%)
| |
இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம். 479 (27%)
|
Votes so far: 1731
அன்புள்ள வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.
இந்த கட்டுரை மூலமாக நாம் இந்த கருத்துகணிப்பு முடிவினை மட்டும் அல்லாமல் டெட் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய உள்ளோம்!
1. கருத்துகணிப்பு முடிவு-
கருத்துகணிப்பில் 1731 வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
TNTET Weightage -ல் Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் வழங்கலாமா?
- எனும் நமது கேள்விக்கு உடனடியாக வழங்கவேண்டும் என்று 876 (50%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
- இப்போதைக்கு தேவையில்லை. அடுத்த தகுதித்தேர்வுக்கு நடைமுறைப்படுத்தலாம் என்று 479 (27%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
- எப்போதுமே வழங்க கூடாது - என்று 376 (21%) வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
எனவே நமது கருத்துகணிப்பில் பங்கேற்ற டெட் தேர்வெழுதிய தேர்வர்கள், வாசகர்கள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் அளித்த முடிவின்படி Employment Seniority & Experience - க்கு 5% + 5% மதிப்பெண் நிச்சயம் வழங்க வேண்டும் [879+479 = 1,355 (77%)] என்பதையே பாடசாலை தனது இறுதி முடிவாக பிரதிபலிக்கிறது. அதாவது நீதிமன்றம் அறிவுறுத்திய அறிவியல் முறையிலான புதிய வெயிட்டேஜ் வழங்கும் முறையை ஏற்றுக்கொண்டு அதில் சிறிது மாற்றம் செய்து Employment Seniority & Experience-க்கும் மதிப்பெண் வழங்க வேண்டும். இந்த மாற்றம் வெயிட்டேஜ் குறித்த புதிய அரசாணையில் இடம்பெற்று இருந்தால் நலமாகும். அதே சமயம் டெட் தேர்வு முடிந்து பல மாதங்களாகியும் பணி நியமனம் நடைபெறாத காரணத்தால் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் அனைவரும் கடும் மனநெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே அவர்களின் வேதனையை மேலும் அதிகரிக்காதவாறு மின்னல் வேகத்தில் இதற்கான பணிகளை செய்து இதன்படி பணிநியமனம் செய்தால் நல்லது.
கடந்த டெட் தேர்வு குறித்த வழக்குகள் பலவும் நடந்துகொண்டிருந்தபோது கல்வித்துறை அதிரடியாக செயல்பட்டு வெள்ளி மாலை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஞாயிறு காலை கலந்தாய்வுக்கு அழைத்து வியாழன்று (டிசம்பர் 13) முதல்வர் கையால் பணிநியமன ஆணை வழங்கி திங்களன்று (டிசம்பர் 17) அனைவரும் பணியில் சேர்ந்தனர். இதே அதிரடி வேகத்தை இப்போதும் டெட் தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Our Related Previous Article:
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2014
TET தேர்வில் வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க கோருதல் தொடர்பாக - Request Letter Click Here
2. Employment Seniority - க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்?
காரணம்- தற்போது நம் பாடசாலை வலைதளத்தில் மட்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தலைசிறந்த, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வழங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டடி மெட்டீரியல்கள் உள்ளன. இதே போன்று இதர பல கல்வி சார் வலைதளங்களிலும் பலவகையான ஸ்டடி மெட்டீரியல்கள் உள்ளன. இது மட்டுமில்லாமல் அரசே எளிதாக தேர்ச்சி பெறுவது எப்படி? 100 க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி? என பல்வேறு சிறப்புக் கையேடுகளை வழங்கி வருகிறது. ஆனால் இத்தகைய பல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.
3. Experience க்கு ஏன் மதிப்பெண் வழங்க வேண்டும்?
வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.
ஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
4. டெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரிதானா?
12 ஆம் வகுப்பில் மிகத்திறமையாக மதிப்பெண் பெற்ற ஒருவர் குடும்ப சூழ்நிலை காரணமாக அடுத்த இளங்கலை படிப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற இயலாமல் போகலாம்? அதற்காக அவர் திறமையற்றவர் என்று கூறிவிட இயலாது. கார் ரேஸ் மட்டும் அல்ல, டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட 3 அல்லது 5 மேட்சுகளில் பெற்ற மொத்த வெற்றியே முழுமையான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆசிரியராக பதவி ஏற்கும் ஒருவர் தனது முந்தைய வகுப்புகளில் சரியாக படிக்காமல் இறுதி கட்ட ஒரு டெட் தேர்வில் மட்டும் முழுமையாக படித்துவிட்டு வேலைக்கு முன்னுரிமை கோரினால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களும் இதையே தான் பிரதிபலிப்பார்கள். "8 ஆம் வகுப்பு வரை படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி தான் சார்” என்று ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் இன்றைய தலைமுறை மாணவர்கள், நாளை ஆசிரியர்களிடம் ”நீங்கள் சும்மா படி படி என திட்டாதீர்கள்! Just Pass போதும். போட்டி தேர்வின் போது தேவையான அளவிற்கு படித்துக்கொள்கிறேன்” என நம்மிடம் கூற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். மேலும் ஆசிரியர் பணி என்பது படித்துக்கொண்டே இருக்க வேண்டிய பணி. இதர Non Teaching Staff போன்று ஒரு முறை படித்து பணியில் சேர்ந்து விட்டால் அவ்வப்போது வரக்கூடிய புதிய அரசாணைகளை மட்டும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பணிபுரிந்தால் போதும், எனும் சூழ்நிலை ஆசிரியர் பணியில் கிடையாது. அவ்வாறு இருக்க தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அதற்குரிய அங்கீகாரம் வழங்குவதில் என்ன தவறு. எனவே +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்குவது சரிதான்.
5. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% தளர்வு அளிப்பது சரிதானா?
மாமேதை டாக்டர். அம்பேத்கார் அவர்கள் கூறியது போல
”சமத்துவம் - என்பது சமமாக மதிக்கப்படுவது மட்டும் அல்ல,
கிடைக்கும் வாய்ப்புகளை சமமாக பங்கிட்டுகொள்வதும் தான்”
- இது மிகச்சிறந்த கருத்து. வாய்ப்புகளை சமமாக பங்கிட்டுக் கொள்வதால் சமதர்ம சமுதாயம் உருவாகும். மேலும் தமிழக அரசு வழங்கும் பணி நியமனங்களில் 2 முறையை கடைபிடிக்க இயலும் 1) தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே பணி நியமனம் வழங்கலாம் (அல்லது) 2) தேர்ச்சி பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டத்தில் உள்ளபடி சாதி வாரியாக ”ரோஸ்டர்” நடைமுறையின்படி தேர்வு பெற்றவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்க இயலும். இதை நாம் ஆரம்பம் முதலே நமது கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்துள்ளோம்.
ரோஸ்டர் நடைமுறையின்படி பணி நியமனம் வழங்க போதுமான அளவிற்கு தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை எனில் இரண்டு நடைமுறைகளை மேற்கொள்ள இயலும். 1) இடஒதுக்கீட்டு பிரிவினர் போதுமான அளவில் தேர்ச்சி பெறாத காரணத்தாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தாலும் இம்முறை மட்டும் விதிவிலக்கு அளித்தும், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உரிய காலி பணியிடங்கள் இருப்பதால் சாதிவாரியான ரோஸ்டர் நடைமுறையில் விதிவிலக்களித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கலாம் (இதன்படி தான் 2012 ல் பணி நியமனம் நடைபெற்றது). 2) அடுத்து டெட் தேர்விலும் இடஒதுக்கீடு பிரிவினர் போதிய தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களுக்கு மதிப்பெண் தளர்வு வழங்கலாம் எனும் RTE சட்டப்படி தளர்வு வழங்கி அவர்களுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பிய பிறகு மீதமுள்ள அல்லது புதிதாக உருவான பணியிடங்களையோ நிரப்பலாம். அல்லது பின்னடைவு காலி பணியிடம் அல்லது புதிய பணியிடம் என அனைத்து பணியிடங்களும் ஒரே நேரத்திலோ நிரப்பலாம். (தற்போது 2013 ன்படி இம்முறையே நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது). இதன்படி 2014 ல் நடைபெற உள்ள ஆசிரியர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு முந்தைய பணிநியமனத்தில் ஒதுக்காமல் போன பணியிடங்களுக்கும் சேர்த்து கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது இயல்பான நடைமுறைதான். ("பின்னடைவு காலி பணியிடம்” - குறித்த விளக்கம் முன்னதாகவே நாம் நமது வலைதளத்தில் விவரித்துள்ளோம். எடுத்துக்காட்டாக கண்பார்வையற்றவர்களுக்கு டெட் தேர்வில் தனி சலுகை கோரி போராட்டம் நடந்த போது மாண்புமிகு முதல்வர் அவர்கள் "PH தேர்வர்களுக்கு தனி டெட் தேர்வு நடத்தி உடனடியாக பின்னடைவு காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்” என அறிவித்தது நினைவிருக்கலாம்).
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறி ஒதுங்கி கொள்வதற்கும் மேற்கூறிய காரணங்கள் பொருந்தும். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரிதான். மேலும் பணி நியமனத்தின் போது வழக்கமான நடைமுறையான விதவை மற்றும் இராணுவத்தினருக்கான முன்னுரிமை சலுகையும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்!
இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறி ஒதுங்கி கொள்வதற்கும் மேற்கூறிய காரணங்கள் பொருந்தும். எனவே இடஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கியது சரிதான். மேலும் பணி நியமனத்தின் போது வழக்கமான நடைமுறையான விதவை மற்றும் இராணுவத்தினருக்கான முன்னுரிமை சலுகையும் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்!
ஆனால் டெட் 2013 குறித்த அறிவிப்பில் தேர்ச்சி பெறுவதற்கு 90 மதிப்பெண்கள் தேவை என அறிவித்துவிட்டு தேர்வுக்கு பின் மதிப்பெண் தளர்வு வழங்கியது தான் தற்போது ஏற்பட்டு வரும் கால தாமதத்திற்கு காரணம். சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு: "சிறுபான்மையின பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இலவச இடஒதுக்கீடு வழங்க முடியாது” என தொடர்ந்த வழங்கில் 2 நீதிபதிகள் இலவச இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கருத்து வெளியிட்ட போதும் மூன்றாவது நீதிபதி இலவச இடஒதுக்கீடு வழங்க வேண்டியதில்லை - என கருத்து வெளியிட்டு அதையே தீர்ப்பாகவும் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் பள்ளிகள் அனைத்து மதத்தினருக்கும் இடஒதுக்கீடு வழங்காவிட்டாலும் அவர்கள் சமூகத்தில் உள்ள ஏழை மாணர்களுக்கு மட்டுமே கூட 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியிருக்கலாமே! - எனும் கருத்து நமக்கு தோன்றியது. இருப்பினும் 2 நீதிபதிகளின் எதிர்ப்பையும் மீறி இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. காரணம் திறமையான வாதம்! இதே போன்று டெட் 2013 தேர்வர்களும் திறமையான வழக்கறிஞர் வாதங்களால் தற்போது மட்டும் -இடஒதுக்கீடு தளர்வினை அடுத்த டெட் தேர்வு முதல் நடைமுறைபடுத்துமாறும், தற்போதைய பணிநியமனத்தில் விலக்கு அளிக்குமாறும் கோரிக்கை வைக்கலாம். ஆனால் மேலும், மேலும் ஏற்படும் கால தாமதத்தால் இதற்கான வாய்ப்புகள் குறைவு.
6. இவ்வாறு கல்விசார் வலைதளங்களில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதாலோ அல்லது கமெண்ட்கள் வழங்குவதாலோ என்ன பயன்?
- நாட்டில் படித்து முடித்தவனுக்கே வேலை இல்லை. இதில் நீ வேறு படிக்கிறாயா? என்று துவக்கப்பள்ளியில் கேள்வி கேட்டு எதிர்மறைகருத்தை திணிப்பவர்கள் இப்போது குறைந்து விட்டாலும் டெட்டில் மட்டும் குறையவில்லை.
- இப்போது நடந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவனுக்கே வேலை இல்லை. இதில் அடுத்த டெட் தேர்வுக்கு படிக்கிறாயா?
- கல்வி சார் வலைதளங்களில் கமெண்ட்கள் வழங்குவதால் மட்டும் என்ன வேலை கிடைத்து விடப்போகிறதா?
வேலையும் நமக்கு முக்கியம் தான் என்றாலும், வேலைக்காக மட்டுமே படிப்பதை காட்டிலும் நமது அறிவினை வளர்த்துக்கொள்வதற்காகவும் நாம் படிக்கிறோம் என்பதே உண்மை. கல்விசார் வலைதளங்களில் கமெண்டகள் வழங்குவதால் தான் ஆண்டிபட்டியிலிருந்து கருத்து கூறினாலும் சரி, ஸ்ரீரங்கத்திலிருந்து கூறினாலும் சரி, அந்தமானிலிருந்து கூறினாலும் சரி, உடனுக்குடன் தனது கருத்துக்கு ஒத்த கருத்துடையவர் கூறும் கருத்துகளையும், எதிர் தரப்பு வாதங்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் இயலும். ஆசிரியர் என்பவருக்கு ஒரு தரப்பு நியாயம் மட்டும் முக்கியமில்லை எதிர் தரப்பு வாதத்தையும் கேட்டறிந்து அதில் உள்ள நல்ல கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு நடுநிலையாக செயல்படுபவர் மட்டுமே ஒரு நல்ல ஆசிரியராக உயர இயலும். அதிலும் பாடசாலை வாசகர்கள் இயன்றவரை தவறான வார்த்தைகளை உபயோகிக்காமல், நடுநிலையான, ஆரோக்கியமான கமெண்டகளை நாகரீகமான வார்த்தைகளில் மட்டுமே வழங்கி வருகின்றனர் என்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாடசாலை வாசகர்களுக்கென ஒரு மதிப்பும் மரியாதையும், தரமும் இருப்பதை மீண்டும் நீங்கள் நிரூபித்து உள்ளீர்க்கள். அதற்கு நன்றி!
சிலகாலம் முன்னர் வரை ஏன் பணி நியமனம் தாமதமாகிறது? என்பது பெரும்பாலவர்களுக்கு தெரியாமல் இருந்தது. மற்ற ஊடகங்கள் வழக்கின் இறுதி தீர்ப்பினை மட்டுமே வழங்கி வந்த நிலையில், - தற்போது எந்த வழக்கு நடைபெறுகிறது? வழக்கின் இன்றைய நிலை என்ன? வழக்கின் தீர்ப்பு என்ன? என தினசரி தகவல்கள் உடனுக்குடன் கல்வி சார் வலைதளங்கள் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள இயலுகிறது என்பதை நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே உணர முடியும்.
2013 அக்டோபர் 9 ம் தேதி அன்று நாம் வெளியிட்ட முந்தைய கட்டுரையை கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து அவசியம் படிக்கவும். தற்போது வந்துள்ள புதிய அறிவியல் பூர்வ முறை குறித்த நீதிமன்ற தீர்ப்புடன் நமது கட்டுரைகள் ஒத்து இருப்பதை அறிய இயலும்.
கட்டுரை வெளியிடப்பட்ட நாள்: 09/10/2013
Please Change TNTET Weightage Calculation Method - Request Article - Click Here
7. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதால் காலதாமதம் மட்டுமே ஏற்படுகிறது? வேறு என்ன பயன்?
டி.என்.பி.எஸ்.சி யில் நடைபெறும் உயர்மட்ட தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற்றவர்களின் தேர்வு எண் மட்டுமே வெளியிடப்படும் சூழல் இருந்தது. நான் தேர்ச்சி பெறாவிட்டாலும் பரவாயில்லை நான் பெற்ற மதிப்பெண் எவ்வளவு என்பதையாவது அறிந்து கொண்டால் தானே அடுத்த தேர்வுக்கு மேலும் முயற்சி எடுக்க இயலும் என பலரும் நினைத்தனர். எந்த அடிப்படையில் இந்த மதிப்பெண் வழங்கப்பட்டது? Tentative Answer Key வழங்கிய பிறகு மதிப்பெண் வழங்கலாமே? கடினமாக படித்து தேர்வெழுதிய நிலையில் வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி வேலை வழங்குவதில் வெளிப்படை தன்மை இருந்தால் தானே ஊழல் நடைபெறவில்லை என நம்ப இயலும்? இதுபோன்ற பல கேள்விகள், காலம் காலமாக கேள்விகளாகவே இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தின் மூலமாக இவற்றிற்கு தீர்வு கிடைத்துள்ளது. சமீப காலமாக நடக்கும் தேர்வுகளுக்கு Tentative Answer Key வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது வெளிவர இருக்கும் வி.ஏ.ஓ தேர்வின் முடிவுகள் மற்றும் பணி நியமனம் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் கலந்தாய்வு நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் திரு. நவநீதகிருஷ்ணன் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். 2012 டெட் தேர்வில் Tentative Answer Key வழங்கப்பட்டது. 2013 டெட் தேர்வில் Final Answer Key யும் வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற பல மாற்றங்களும் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் கூறப்பட்ட வழிகாட்டல் மூலமாகவே வெளிப்படையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது என்பது உண்மை. ஏன்? இதே டெட் தேர்வில் ஒவ்வொரு மதிப்பெண் எடுப்பதும் மிக கடினம் எனும் நிலையில் 90 மதிப்பெண் எடுத்தவரும், 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒரே வெயிட்டேஜ் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் தானே நீதின்றத்தின் வழிகாட்டலின் படியும், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையியும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் உரிய மதிப்பு அளிக்கும் வகையிலான அறிவியல் பூர்வ முறை பரிசீலிக்கப்படுகிறது. இவையெல்லாம் நீதிமன்றத்தின் சாதனை தான்.
ஆனால் இத்தகைய நீதிமன்ற வழக்குகள் குறித்த விழிப்புணர்வோ, பல்வேறு உடனுக்குடன் கருத்து பரிமாற்றங்களோ கல்வி சார் வலைதளங்களால் தான் தற்போது சாத்தியமாகி உள்ளது. கல்வி சார் வலைதளங்களை தேர்வர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு கல்வித்துறை அலுவலக பணியாளர்களும், கல்வியாளர்களும், அரசும் தொடர்ந்து கவனித்து வருகின்றனர் என்பது உண்மை.
மேலும் ஒத்த கருத்துடையவர்கள் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு ஒன்றினைவதும் கல்வி சார் வலைதளங்களால் எளிதாக நடைபெறுகிறது.
மேலும் ஒத்த கருத்துடையவர்கள் பலரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, அலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு ஒன்றினைவதும் கல்வி சார் வலைதளங்களால் எளிதாக நடைபெறுகிறது.
புதிய அறிவியல் பூர்வ முறை பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி. திரு. நாகமுத்து அவர்கள் தீர்ப்பு வழங்கிய போது இதுகுறித்து தொடர்ந்து கட்டுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த தினமலர் உட்பட பல்வேறு ஊடகங்களை பாராட்டியுள்ளார் - என்பது குறிப்பிடத்தக்கது.
நமது பாடாசலை வலைதளத்தில் இந்த கருத்து கணிப்பு துவங்கிய பிறகு கடந்த வாரத்தில் மட்டும், பதிவு மூப்புக்கு மதிப்பெண் வழங்கவேண்டும் என்பது குறித்து கோரிக்கைகள், பல்வேறு கட்டுரைகள் தொடர்ந்து பல செய்தித்தாள்களிலும் வெளிவந்தவாறு இருப்பதை நடுநிலையாளர்களும் அனைத்து செய்திதாள்களையும் படிப்பவர்களும் உணர்வார்கள்.
எனவே நடப்பதெல்லாம் நன்மைக்கே! - என்பதற்கேற்ப இந்த டெட் விஷயத்தில் நல்லவையே நடந்து, விரைவில் தகுதியான அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்க வேண்டும் எனபாடசாலை விரும்புகிறது.
"நீ எதுவாக நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய்!
நல்லதே நினையுங்கள்! நல்லதே நடக்கும்”.
நல்லதே நினையுங்கள்! நல்லதே நடக்கும்”.
கல்வித்துறை விரைவில் அனைத்து சிக்கல்களையும் சரிசெய்து டெட் தேர்வர்களுக்கு ஜுன் மாதமே பணியில் சேரக்கூடிய வகையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என பாடசாலை பணிவுடன் கேட்டுக்கொள்கிறது!.
நன்றி!
- என்றும் அன்புடன் பாடசாலை.
இந்த கருத்து கணிப்பு குறித்த கட்டுரைகளில் பல்வேறு கமெண்ட்களை தொடர்ந்து வழங்கியவாறு இருந்த மதிப்பிற்குரிய பாடசாலை வாசகர்கள் - இரம்யா, தங்கராஜ், தினேஷ் குமார், சிரஞ்சீவி, கார்த்திகேயன், ஆல்வின் தாமஸ் மற்றும் ஆரோக்கியமான கருத்துகளை Anonymous பெயரில் வழங்கி வந்த நம் வாசகர்கள் மற்றும் பலர்- என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.
(அன்பு வாசகர்களே, - இக்கட்டுரை குறித்த தங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்சில் பகிரவும்.)
Source : http://www.padasalai.net/