TNPSC GROUP 1 இல் அசத்திய பெண்கள்.

மிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சமீபத்தில் வெளியிட்ட குரூப் 1 தேர்வில், மொத்தமுள்ள 25 பதவி இடங்களில் 15 இடங்களைப் பிடித்து அபார சாதனை படைத்துள்ளனர் பெண்கள். 75,629 பேர் எழுதிய இந்தப் போட்டித் தேர்வில்... முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களும் பெண்களே!

துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரிகள் துறை உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்பட 25 பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களும், முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றவரும் இங்கே பேசுகிறார்கள்.முதல் முயற்சியிலேயே வெற்றி!
24 x 7 மைக்குகளின் ஓயாத அலறல், எந்நேரமும் குழாயடி சண்டை போன்ற பல சச்சரவுகள்... இத்தகைய சூழலுக்கு நடுவே வாழ்ந்தாலும், முதல் முயற்சியிலேயே துணை ஆட்சியர் பதவியைப் பிடித்திருக்கிறார், சென்னை, வியாசர்பாடி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு திவ்யஸ்ரீ.

''2012-ம் வருஷம், கொளப்பாக்கம் ஸ்ரீராமானுஜர் பொறியியல் கல்லூரியில் டிகிரியை முடிச்ச கையோட, நான் எழுதின அத்தனை அரசு தேர்வுகளிலும் எனக்கு வெற்றிதான். காரணம், தேர்வுக்காக கட்டாயத்தில் படிக்காம, நம்ம நாட்டைப் பத்தி தெரிஞ்சுக்கிறோம்னு ஆர்வத்துல படிச்சேன்.

சொல்லப்போனா, நம் அரசாங்கத்தின் திட்டங்களையும், அதன் அமைப்பையும் படிக்கும்போது வந்த அதீத ஆர்வமே, அரசு உயர் அதிகாரி என்ற என் லட்சியமா மாறிச்சு. அப்பா, அம்மா ரெண்டு பேரும் அரசு ஊழியர்கள் என்பதால், அரசு இயந்திரத்தின் சாதக பாதகங்களை எல்லாம் சின்ன வயசிலிருந்தே கவனிச்சுட்டு வர்றேன். அங்கங்க இருக்கிற பாதகங்களை எல்லாம் சாதகமா மாற்றி மக்களுடன் இணைந்த அரசை உருவாக்குவதுதான் என்னோட கனவு'' என்று சொல்லும் திவ்யஸ்ரீ,

''என்ன படிக்கணும், எப்படிப் படிக்கணும்னு என்கிற சூட்சமம் எல்லாம் தெரிஞ்சு கிட்டு, 100 சதவிகிதம் விடாமுயற்சியோட உழைப்பைக் கொடுத்தா... எல்லாராலும் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற முடியும். தியானம் அல்லது யோகா போன்றவற்றை தினமும் சில நிமிடங்கள் செய்வது, நேர்முகத்தேர்வின் போது வரும் தேவையில்லாத பயத்தைக் குறைக்க உதவும்’' என்று டிப்ஸ் தரும் திவ்யஸ்ரீ, பல்வேறு அமைப்புகளிலுள்ள பார்வையற்றவர்கள், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக வகுப்புகள் எடுக்கிறார்.

'தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் அப்பா ராகையா, நியாயவிலைக் கடையில் வேலை செய்யும் அம்மா லட்சுமி தேவி, ரேடியன் ஐ.ஏ.எஸ் அகாடமியைச் சேர்ந்த ராஜ பூபதி, ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.ஏஸ், தியான மாஸ்டர் ஜெயந்தி ஜீவன்னு... இவங்க எல்லாருக்கும் என் வெற்றியில் பங்குண்டு!'' என்ற திவ்யஸ்ரீயின் கண்களில், லட்சிய வெறி!


''மாமனார், மாமியாருக்கு நன்றி!''

'முயற்சி, இடைவிடாத பயிற்சி... இதுதான் வெற்றிக்கான பார்முலா!' என்கிறார், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து, மாவட்ட துணைஆட்சியர் பதவியை தேர்ந்தெடுத்திருக்கும் சென்னை, அசோக் நகர், கீதாபிரியா.

''நீ போயிட்டு வாம்மா, நான் குழந்தையைப் பார்த்துக்கிறேன்’னு சொல்லி, என்னை வெற்றிபெற வைத்தவங்க, மாமனார் - மாமியார்தான். எம்.பி.ஏ. முடிச்சிட்டு எல் அண்ட் டி நிறுவனத்துல 2010 வரை வேலை பார்த்துட்டு இருந்தேன். குரூப் 1 தேர்வெழுதறதுக்காக, வேலையை விட்டுட்டு படிக்க ஆரம்பிச்சேன். 

முதல் முயற்சியில் குரூப் 2 தேர்வானேன். குடும்பத்துல எல்லாரும் உற்சாகப்படுத்த, மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து முழு வீச்சா படிச்சேன். அதுக்குப் பரிசுதான், இந்த துணை ஆட்சியர் பதவி'' எனும் கீதாபிரியாவின் கணவர் கார்த்திகேயன், மார்க்கெட்டிங் மேனேஜராக பணிபுரிகிறார். இவர்களுக்கு, ஹிரண்மயி எனும் ஐந்து வயது மகள் உள்ளார்.
''குடும்பத்தையும், படிப்பையும் பேலன்ஸ் பண்ண டைம் மேனேஜ்மென்ட் ரொம்ப முக்கியம். அதுவும், இரண்டாம் நிலை தேர்வுக்கு தினமும் கட்டாயம் படிக்கணும். அதோடு, மக்களுக்கு நாம சேவை செய்யப் போறோம்ங்கிற உந்துதலோட படிச்சா, எந்த தடையையும் தாண்டி வந்துடலாம்!'' என்கிறார் கீதாபிரியா, நம்பிக்கையாக.

'ஹோம் மேக்கர்... ஆகலாம், அட்மினிஸ்ட்ரேட்டர்!’

''கல்யாணத்துக்கு அப்புறமும் பெண்கள் நினைத்தால் எந்தத் துறையிலும் சாதிக்கலாம்ங்கிறதுக்கு நானும் ஓர் உதாரணம்'' என்று தெம்பாகச் சொல்கிறார் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள நெய்வேலியைச் சேர்ந்த டீனாகுமாரி. இவரும் மாவட்ட துணைஆட்சியர் பதவியையே பிடித்திருக்கிறார்!
''கோவை, பி.எஸ்.ஜி-யில் பி.டெக். முடிச்சி... டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை செய்துகிட்டுஇருந்தேன். ஆனா, என்னோட கனவெல்லாம் அரசு அதிகாரியாகி, மக்களுக்கு தொண்டு செய்யணும்ங்கிறதுதான். 

அதற்கு முழு ஒத்துழைப்பையும் என் கணவர் தர, கூடுதல் பக்கபலமா அப்பா, அம்மா ரெண்டு பேரும் இருந்தாங்க. 2011-ம் ஆண்டு குரூப் 1 தேர்வு எழுதினேன். ஆனா, தேர்வாகல. தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்து, சின்ஸியரா படிச்சேன். அதே ஆண்டில் குரூப் 2 தேர்வில் தேறிட்டேன். ஆனாலும், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றே ஆகணும்ங்கிற வைராக்கியத்தோட, இன்னும் அதிக உழைப்பைக் கொடுத்துப் படிச்சேன். அதுக்கான பலன் இப்போ கிடைச்சிருச்சி'' எனும் டீனாகுமாரியின் கணவர் ராஜா சரவணன், 'விப்ரோ' நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் ஷரண் என்ற மகன் உள்ளார்.
''படிப்பை முடிச்சி, ரொம்ப நாள் இடைவெளி விட்டாச்சி. 

இனி பரீட்சை எல்லாம் எழுதி பாஸாக முடியுமானு யோசிச்சே காலத்தை வீணாக்காம, சரியான திட்டமிடலும், கடுமையான உழைப்பும் இருந்தா... திறமை இருக்கிற அத்தனை ஹோம்மேக்கரும், அட்மினிஸ்ட்ரேட்டர் ஆகலாம்.
இல்லத்தரசிகள், தினமும் வேலைக்கான நேரம் போக, படிப்புக்குனு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்க. படித்ததை அடிக்கடி ரிவைஸ் செய்றது ரொம்ப முக்கியம். கல்லூரி படிப்பு போல சில புத்தகங்களோட மட்டும் முடங்கிடாம, ஒவ்வொரு பாடத்துக்கும் பாடம் சம்பந்தமான பலதரப்பட்ட விஷயங்களைத் தெரிஞ்சி வெச்சிருந்தாதான், போட்டித் தேர்வை துணிச்சலா எதிர்கொள்ள முடியும்.

குடும்பம், நண்பர்களைத் தவிர, சென்னையிலுள்ள மனிதநேய அறக்கட்டளை பயிற்சி மையத்தில் கொடுக்கப்பட்ட சரியான வழிகாட்டுதலும் எனக்கு பெரும் உறுதுணையா இருந்துச்சி'’ என்று சொல்லும் டீனாகுமாரி, கடந்த எட்டு மாதங்களாக வணிகவரித் துறையில் பணிபுரிந்து கொண்டே, தீவிரமாகப் படித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி