2014ம் ஆண்டின் பொதுத்தேர்வு முடிவுகளில், கணிதப் பாடத்தில் சென்டம் எண்ணிக்கை குறைந்துள்ளது.
பொதுவாக, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களைவிட, கணிதப் பாடத்தில் சென்டம் எடுப்பது எளிது என்பது பலரின் கருத்து. அதற்கேற்ப, கணிதத்தில் சென்டம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
ஆனால், இந்தமுறை கணிதப் பாடத்தைவிட, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் எண்ணிக்கை பெரிய வித்தியாசத்தில் அதிகரித்துள்ளது.
இந்தாண்டு கணிதப் பாடத்தில் சென்டம் பெற்றவர்கள் 18 ஆயிரத்து 682 பேர்தான். ஆனால், அறிவியல் பாடத்தில், 69 ஆயிரத்து 560 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 26 ஆயிரத்து 554 பேரும் சென்டம் பெற்றுள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த 2013ம் ஆண்டிலும், கணிதப் பாடத்தைவிட, அறிவியல் பாடத்தில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்பது நினைவுகூறத்தக்கது.
இது குறித்து கணித ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ”கணித பாடத்தில் இம்முறை சென்டம் குறைய காரணமே கட்டாய வினாவில் சற்று கடினமான கேள்வி கேட்கப்பட்டது தான். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் பலரும் சென்டம் தவறினார்கள்.” என்றார்.
மற்றொரு அறவியல் ஆசிரியரோ, ”அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறைதேர்வுக்கு 25 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இத்தேர்வுகளில் அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் 25 தான் வழங்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் 10 அல்லது 15 மதிப்பெண் பெறக்கூடியவராக இருப்பினும் கூட செய்முறை தேர்வில் 25 மதிப்பெண் தான் வழங்கப்படுகிறது. மேலும் மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண் ஆண்டு இறுதி தேர்வுக்கு 2.30 மணி நேரம் தேர்வு நடக்கையில் அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு 2.30 மணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. இது போன்ற காரணங்களால் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி சதவீதம் மற்றும் சென்டம் அதிகரித்தாலும் கூட, இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக செய்முறை தேர்வுக்கு பிறகு ஏற்பட்டதுதானே என்ற ரீதியில் மற்ற பாட ஆசிரியர்கள் அறிவியல் பாட சென்டம் அதிகரிப்பை பார்த்து பொறாமையடைகிறார்கள்” என்றவாறு தனது கருத்தை கூறினார்.
எது எப்படியோ ஆசிரியர்கள் உழைப்பும், மாணவர்கள் ஒத்துழைப்பும் இணைந்து அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தால் நல்லது தான்.