தேர்தல் பணியும் பெண்கள் நிலையும் - DINAMANI ARTICLE

தேர்தல் திருவிழாவில் பங்கேற்பதும் உழைப்பை நல்குவதும் இருபால் அரசு ஊழியர்களின் கடமைதான். எனினும் ஒருமுறை தேர்தல் பணி முடிந்து இரவு பதினொரு மணிக்கு வீட்டிற்குத் திரும்ப போக்குவரத்து வசதியற்ற நிலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி சென்று மீண்டும் புதுச்சேரியிலிருந்து சென்னை வந்து என்னை நான் பாதுகாத்துக் கொண்ட அந்த மிகச் சங்கடமான அனுபவம் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும் விருப்ப ஓய்வு கொடுத்து விடும் அளவிற்கு சிந்திக்க வைத்து விடுகிறது என்னை.

தேர்தல் பணிக்காக பெரும்பாலும் நியமிக்கப்படுபவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே. உடல்நலக் குறைவு, வயோதிகம், கணவர் மரணம், விவாகரத்துப் பெற்று குழந்தைகளோடு தனித்து வாழும் பெண்கள், கை குழந்தை உள்ளோர் இப்படிப்பட்ட சூழலில் உள்ள பெண்களும் தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைக் காட்டிலும் அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாவது இவர்களாகத்தான் இருக்க முடியும்.

தேர்தலுக்காக நடைபெறும் பயிற்சி வகுப்புகள்கூட அருகில் இருப்பது இல்லை. உதாரணத்திற்கு, சென்னையில் பணிபுரிபவர்களுக்கு செங்கல்பட்டு - உத்தரமேரூர் போன்ற ஊர்களில்தான் பயிற்சி. இதற்காக இரண்டு அல்லது மூன்று மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை.
இது தவிர ஒரு நபருக்கே ஒரே நாளில் இரண்டு மூன்று இடங்களில் பயிற்சி வகுப்புகளுக்கான உத்தரவு கடிதம். ஒரு பயிற்சியில் பங்கேற்று வந்தால், மற்ற இடங்களுக்கு ஏன் செல்லவில்லை என விளக்கக் கடிதம் தர வேண்டும். இது முடிந்தபின் ஒரே நபருக்கு இரண்டு வாக்குச்சாவடி மையங்களுக்கு பணி ஆணை வந்து சேர்வதும் உண்டு.

தேர்தலுக்கு முந்தைய நாள் காலையில் பயிற்சி மையத்திற்குச் சென்று பணி ஆணையினையைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும். இரவு அங்கு தங்கும் வசதி, குளியலறை கழிப்பறை வசதியெல்லாம் எதிர்பார்க்க முடியாததுதான். ஆனாலும் தேர்தல் பணியை நாள் முழுதும் ஓய்வில்லாமல் செய்ய வேண்டியவர்கள் முதல் நாள் இரவு உறங்க வேண்டாமா? அடுத்த நாள் குளித்துவிட்டு தங்களை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள வேண்டாமா?

இவற்றைப் பற்றியெல்லாம் யாரும் கவலை கொள்வதில்லை, மறுநாள் வாக்குச்சாவடி மையத்தில் காலை ஐந்து மணிக்கே இருந்தாக வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல நள்ளிரவுகூட ஆகிவிடும். அதுவரை அங்கிருந்து ஒப்படைக்க வேண்டும்.
பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். காவலர்கள் தங்களுக்கான வாகனத்தில் சென்றுவிடுவார்கள். கட்சி முகவர்களும் உற்சாகமாய்க் கிளம்பி விடுவார்கள். வாக்குச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் மட்டும் நள்ளிரவில் தனித்துவிடப்படுகிறார்கள்.

இவர்களின் உயிருக்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதைத்தான் அரக்கோணத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் பூங்கொடியின் மரணம் உணர்த்துகிறது. அரக்கோணத்தில் பணியாற்றிய இவர் வாணியம்பாடி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று தேர்தல் பணி செய்து திரும்பும்போது வாணியம்பாடி ரயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸில் அடிபட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.

பயிற்சி வகுப்புக்கு வராமல் இருந்தால் விளக்கக் கடிதங்கள் கேட்கும் தேர்தல் அதிகாரிகள் பணி முடித்து எப்படி வீடு செல்வீர்கள் என்று ஒரு வார்த்தை கேட்பதில்லை.

இது ஒருபுறமிருக்க பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுதும் தேர்தல் தொடர்பான பணிகள் ஏராளமாக வழங்கப்படுகின்றன. வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் மாற்றத்திற்கான விண்ணப்பம் தருவது, அதனைத் திரும்பப் பெறுவது, அதன் விவரச் சுருக்கங்களைக் குறித்துத் தருவது, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது, வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பட்டியலைக் கொண்டு சரிபார்ப்பது, சரிபார்ப்புப் பட்டியலில் கையொப்பம் பெறுவது, வாக்காளர் சீட்டு வீடுவீடாக சென்று வழங்குவது என வாக்குச்சாவடி அலுவலர்களாக ஏகப்பட்ட பணிப் பளு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு.

இந்நிலையில் இனிவரும் காலங்களிலேனும் வாக்குச்சாவடி தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் சொந்த இடத்திலிருந்து இருபது கிலோ மீட்டருக்குள் அவர்களுக்கு பணி வழங்கினால் பாதி சிரமம் குறைந்துவிடும்.

பணி முடித்து வீடு திரும்பும் வரைக்குமான பயண ஏற்பாட்டைச் செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பணியாற்ற முடியாத சூழலில் உள்ளவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தால் தேர்தல் திருவிழா என்பது மெய்யாகவே மகிழ்ச்சியான திருவிழாவே!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி