அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் கணக்கெடுப்பு தொடக்கம் - Dinakaran News

அமைச்சரின் ஆலோசனையின்படி தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகளில் உபரியாக எத்தனை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கணக்கெடுக்கும் பணியை பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை தொடங்கியுள்ளது. இதனால் டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் வேலை கிடைக்காதோ என கலக்கம் அடைந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் கடந்த 18ம் தேதி நீக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நேற்று முன்தினம் டிபிஐ வளாகத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பொருட்கள் வழங்கவும், ஜூன் 2ம் தேதியே பாடப் புத்தகங்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் ஆசிரியர்கள் குறித்த விவரங்களை திரட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து, தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் வந்த பிறகு பணி நிரவல் செய்துவிட்டு அதற்கு பிறகே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிஇடி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது. பட்டதாரிகள் அளவில் தமிழ் 9,853, ஆங்கிலம் 10,716, கணக்கு 9,074, இயற்பியல் 2,337, வேதியியல் 2,667, விலங்கியல் 405, வரலாறு 6,210, புவியியல் 526 ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மொத்தம் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்போவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சான்று சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் உடனடியாக ஜூன் மாதம் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், உபரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க கூறியதால், அதற்கான பணி நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது இட மாறுதல் கவுன்சலிங் மற்றும் பதவி உயர்வு கவுன்சலிங் நடத்தப்படுவது வழக்கம். அதற்கு பிறகு தான் புதிய ஆசிரியர்கள் நியிமிக்கப்படுவார்கள்.

ஆனால் கடந்த 2013ல் எடுக்கப்பட்ட உபரி ஆசிரியர்கள் பட்டியலில் உள்ளபடி இட மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் செய்ய வேண்டியுள்ளது. இந்த மே மாதம் நடக்கும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது உபரி ஆசிரியர்கள் பட்டியலை அமைச்சர் எடுக்கச் சொல்லியதால் 2014ம் ஆண்டு பட்டியலும் சேர்ந்தால், அதிக அளவில் இடமாறுதல் வழங்க வேண்டி வரும். அப்படி செய்தால் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர் பணி நியமனம் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டிஇடி தேர்வு எழுதிய பட்டதாரிகள் தரப்பில் கேட்டபோது, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்று சரிபார்ப்பு முடிந்துள்ள நிலையில் இந்த ஆண்டு 12,000 ஆசிரியர்கள்தான் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. ஆனால் இப்போது இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்து முடித்துவிட்டு பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப் போவதாக தெரிவிக்கின்றனர்.

இதை நாங்கள் கண்டிக்கிறோம். இதனால் டிஇடி தேர்வு எழுதியவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காது. கடந்த ஆண்டு டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் போக இன்னும் சிலர் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது பணி வழங்குவார் கள். ஆகவே டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு, இட மாறுதல், பணி நிரவல் ஆகியவற்றை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். இந்த குழப்பத்தை ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை தீர்க்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி