
மும்பை : வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருந்து, அதை நடைமுறையில் பராமரித்து வராத வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறையை சில வங்கிகள் பின்பற்றி வருகின்றன.
இந்த நடைமுறையை ரத்து செய்து வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், ‘‘இனிமேல், பராமரிப்பில் இல்லாத வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லை என்று கூறி அபராதம் விதிப்பதற்கு அனுமதி கிடையாது’’ என கூறப்பட்டுள்ளது.
மேலும், ‘‘அப்படி அபராதம் விதிப்பதற்கு பதிலாக அத்தகைய கணக்குகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளை குறைத்துக்கொள்ளலாம், குறைந்த பட்ச இருப்புத்தொகையை பராமரித்த பின்னர் அந்த சேவைகளை மீண்டும் வழங்கலாம்’’ எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள், பராமரிக்கப்படாத வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச இருப்புத்தொகை இல்லை என்றாலும், அபராதம் விதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.