தொலைநிலைக் கல்வியால் மாணவர்கள் அடையும் நன்மைகள்

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களது படிப்பில் இலகுத்தன்மையையே பெரிதும் விரும்புகின்றனர். மேலும் பலருக்கு கல்லூரிக்கு சென்று வகுப்புகளில் கட்டாயமாக கலந்து கொண்டு படிப்பதற்கும், பின்னர் குறிப்பிட்ட நேரம் கழித்து வீட்டுக்கு வருவதற்கும் விருப்பம் இல்லை. அவர்கள் தாங்கள் நினைத்த நேரத்தில் வீட்டிலேயே அமர்ந்து படிப்பதையே விரும்புகின்றனர்.

இத்தகைய மாணவர்களுக்கு கல்வியை கற்றுத்தர தொலைநிலைக் கல்வி மிகவும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

தொலைநிலைக் கல்வியை மேற்கொள்ளும் ஒருவருக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அது படிப்பில் வித்தியாசமான அனுபவத்தை கொண்டு வருகிறது. தொலை நிலைக்கல்வியில் பயில விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு இடம் கிடைக்குமா? என்று கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இப்படிப்பிற்கு இவ்வளவு இடங்கள் தான் காலியாக இருக்கின்றன.

எனவே இத்தனை நபர்கள் தான் சேர முடியும் என்ற நெருக்கடி ஏற்படாது. பல படிப்பில் எத்தனை நபர்கள் வேண்டுமானலும் சேரலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் பல்வேறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று படிக்க இயலாத பொருளாதார சூழலில் மாட்டிக் கொண்டவர்கள் நேரடியாக சென்று படிக்க விரும்பாதவர்கள் ஆகியோருக்கு தொலைநிலைப் படிப்பு ஏற்ற ஒன்று.
மேலும் தொலைநிலைக் கல்வியில் வசூலிக்கப்படும் கட்டணம், பணிக்கு செல்லும் நபர்களால் சமாளிக்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது. மாணவர்கள் நேரடியாக சென்றுபடிக்கையில் தங்களுக்கான கல்வி மற்றும் இதர செலவினங்களையும் குடும்பத்தினரையோ அல்லது மற்றவர்களையோ நம்பியிருக்க வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால் பணி செய்து கொண்டே தொலைநிலைக் கல்வியை கற்கும் போது தங்களுக்கான செலவினங்களுக்கு பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட காலத்தில் பட்டமும் பெற்று விடலாம்.

தமிழகத்தை பொருத்தவரை பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்ய மாணவர்களுக்கு:
பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் பல்வேறான காரணங்களால் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அதுபோன்ற நபர்கள் சிலருக்கு பட்டப் படிப்பை முடித்து தானும் ஒரு பட்டதாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும். இது போன்ற நிலையில் இருக்கும் 18 வயது பூர்த்தியடைந்த நபர்களுக்கு இக்கோ வழங்கும் Bachelor preparatory programme (BPP) துறை வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் அவர்கள் உயர்கல்வி வட்டத்தில் நுழைய முடியும்.

கல்வி உபகரணம்:
ரெகுலர் கல்வி முறையில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரியில் ஆசிரியர்கள் மூலம் பாடத்திட்டம் தொடர்பான உபகரணங்களை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு அங்கு நூலகமும் உள்ளது. தொலை நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த வசதிகள் இல்லை என்றாலும் இன்றைய இன்டர்நெட் உலகில் கல்விக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் பெற முடியும். இதனால் நேரடிக்கல்விக்கும், தொலைநிலைக் கல்விக்கும் அதிக வித்தியாசமில்லை என்றாகிறது.

நல்ல அனுபவம்:
முழுநேர படிப்பில் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எப்போது வேண்டுமானலும் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி தொலைநிலைக்கல்வியில் இல்லை என்றாலும் பல நல்ல பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் தொலைநிலைக்கல்வியில் ஒரு பருவத்திற்கு 15&21 நாட்கள் வரை pcp வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ளும் மாணவர்கள் நன்கு பயன் பெறலாம். பல தொலைநிலைக் கல்வி திட்டங்களில் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்கு கட்டாய கவுன்சலிங் வழங்கப்படுகிறது.
case study method, role playing, video letures, prerecorded, project works போன்ற பல அம்சங்கள் தொலைநிலைக் கல்வி முறையில் உள்ளன. இதன் மூலம் நேரடி கல்வி மாணவருக்கு கிடைக்கும் கல்வி அனுபவங்கள் தொலைநிலைக் கல்வி மாணவருக்கும் கிடைக்கிறது. தொலைநிலைக் கல்வி முறையில் நடைபெறும் கலந்துரையாடல் வகுப்புகள் பல அனுபவம் வாய்ந்த கேள்விகளைத்தாங்கி பயனுள்ளதாய் இருக்கும். ரெகுலர் படிப்புகளைப் போல் அல்லாமல் தொலைநிலைப் படிப்பு என்பது ஒரு சுதந்திரமான மற்றும் வசதிக்கேற்ற வகையிலான படிப்பாகும்.

இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும் தொலைநிலைக் கல்வி என்பது இன்றைய வாழ்க்கை முறையில் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அதை மேற்கொள்ளும் நபர்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். திறமையும், சாதுர்யமும் உள்ள நபர்களுக்கு தொலைநிலைக் கல்வி ஒரு தடையாக இருப்பதில்லை. மேலும் தொலை நிலைக்கல்வி மூலம் பட்டம் பெற்றவர்களுக்கு பல இடங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றது. கர்ப்ரேட் உலகில் ஒருவர் கற்ற கல்வி தொலைநிலையா அல்லது நேரடி முறையிலா என்பதைப் பற்றியெல்லாம் நிறுவனங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை. அந்த படிப்பு அங்கீகரிக்கப்பட்டதாகவும், அதை முடித்தவர்கள் தகுதியும், திறமையும் உடையவர்களாகவும் இருந்தால் மட்டும் போதும் என்பதே பெரும்பாலான நிறுவனங்களின் எதிர்பார்ப்பு எனவே தொலைநிலைக் கல்வி முடித்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரம் பற்றி கவலைப்பட தேவையில்லை.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி