தொழிலாளர் நல அதிகாரியாக ஆசையா?

தொழிலாளர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய-மாநில அரசு துறைகளில் தொழி லாளர் ஆய்வாளர்கள், நல அதிகாரிகள், உதவி ஆணையர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் பணிபுரிந்துவருகிறார்கள். இதேபோல், அமைப்புசார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வருங்கால வைப்புநிதி (பி.எப்.) உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் வழங்குவதற்காகத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் உள்ளனர்.
இத்தகைய பணிகளில் சேர தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர் மேலாண்மை தொடர்பான பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையில் நேரடி உதவி ஆணையர் பதவிக் கான தேர்வெழுத தொழிலாளர் நலச் சட்ட பட்டயப் படிப்பு, தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்பு (Labour Management) போன்றவை கல்வித் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வித் தகுதி பெற்றிருக்கும் பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு மூலம் நிரப்பப்படும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் (Assistant Inspector of Labour) பணியில் முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
மத்திய அரசுப் பணிகளைப் பொறுத்தவரையில், தொழிலாளர் உதவி ஆணையர், உதவி தொழிலாளர் நல அதிகாரி, தொழிலாளர் அதிகாரி, உதவி இயக்குநர் (தொழிலாளர் நலன்) போன்ற பதவிகளும், பி.எப். உதவி ஆணையர் பதவியும் மேற்சொன்ன கல்வித்தகுதி கொண்ட பட்டதாரிகளால் யூபிஎஸ்சி (மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்) மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
தமிழகத்தில் மாநில அரசுக் கல்வி நிறுவனமான தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம் தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு (B.L.M.), பட்டமேற்படிப்பு (M.L.M.) மற்றும் பகுதிநேர, வாராந்திர முதுநிலைப் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது. இளநிலை படிப்பில் 55 இடங்களும், பட்ட மேற்படிப்பில் 40 இடங்களும், பகுதிநேர முதுநிலை பட்டயப் படிப்பில் 100 இடங்களும், வாரஇறுதி பட்டயப் படிப்பில் 100 இடங்களும் உள்ளன.
இளநிலை பட்டப் படிப்பில் சேர பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும். முதுகலைப் படிப்பிலும், முதுநிலை டிப்ளமா படிப்பிலும் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தேவை. குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டியது அவசியம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் என்றால் 40 சதவீத மதிப்பெண்ணே போதுமானது.
இந்த ஆண்டில் மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.200. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100. விண்ணப்பங்களைத் தபால் மூலமாக பெற, கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கு, விண்ணப்பக் கட்டணத்தை ‘இயக்குநர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனம், சென்னை-5’ பெயரில் எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டாக அனுப்ப வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டயப் படிப்புகளில் சேர மே 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பட்ட மேற்படிப்புக்கு இளநிலை பட்டப் படிப்பு தேர்வு முடிவுகள் வெளிவருவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விரும்பும் மாணவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தை 044-28440102, 28445778 ஆகிய தொலைபேசி எண்களிலும் அக்கல்வி நிறுவன பேராசிரியர் வி.ஜி. தியாகராஜனை 98411-92332 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். “இங்கு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்கிறோம்” என்றார் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிறுவனத்தின் இயக்குனரும் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையருமான ஏ.பாலசுப்ரமணியன்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி