முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை முழு நேர நீதிமன்றம்: மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நடந்தது

சென்னை உயர் நீதிமன்ற 150 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முழு நேர நீதிமன்றம் நடைபெற்றது.


சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1862-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி தொடங்கப்பட்டது. 2012 செப்டம்பர் 8-ம் தேதி 150-வது ஆண்டுவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை 2004-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, கரூர் ஆகிய 13 மாவட்டங்களைச் சேர்ந்த வழக்குகள் விசாரணை நடைபெறுகிறது.

உயர் நீதிமன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும்.

சிறைக் கைதிகளுக்கு பரோல் கேட்டு விடுமுறை நாள்களில் அவசரமாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள், தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டு, அவரால் நியமிக்கப்படும் நீதிபதி முன்பு விசாரணைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த விசாரணை சில மணி நேரம் மட்டுமே நடைபெறும். முழு நேரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் நீதிமன்றங்கள் செயல்பட்டது இல்லை.

தற்போது உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை. வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் விடுமுறைக் கால நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 150 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை, மக்கள் பிரச்சினைக்காக முழு நேர நீதி மன்றம், உயர் நீதிமன்றக் கிளை யில் நடைபெற்றது. நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

சிவகாசியில் சீனப் பட்டாசு பிடிபட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்கு, குற்றாலத்தில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப் படை வசதிகளை செய்யக் கோரும் வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. முதலில் அமர்வாகவும், பின்னர் தனித்தனி யாகவும் நீதிபதிகள் இருவரும் வழக்குகளை விசாரித்தனர்.

விடுமுறை நாளிலும் நீதிமன்றம் முழு நேரமாக நடத்தப்பட்டதை வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி