சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.பி.எஸ்.இ., எனும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில், கட்டாய கல்வி சட்டத்தை அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர கோரிய மனுவிற்கு பதிலளிக்க, பள்ளி கல்வித் துறை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த, திருமுல்லைவாயிலைச் சேர்ந்த, ஏ.வி.பாண்டியன் என்பவர், தாக்கல் செய்த மனு: இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. 2010, ஏப்ரலில், அமலுக்கு வந்த இச்சட்டப்படி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டும்.

அமல்படுத்த முடியவில்லை:
அதற்கு, மாநில விதிகளில், உரிய பிரிவுகளை சேர்த்திருக்க வேண்டும். ஆனால், மாநில விதிகளில் உரிய பிரிவுகள் இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மத்திய சட்டம், விதிகளை அமல்படுத்த முடியவில்லை. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்துவதை கண்காணிக்க, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், உரிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துஇருந்தது. சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கான, 25 சதவீத ஒதுக்கீட்டை நிரப்புவது குறித்தும், உத்தரவிட்டிருந்தது. மாநில அரசைப் பொறுத்தவரை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், மத்திய அரசு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை, புரிந்துள்ளது. ஆனால், மாநில விதிகளில், உரிய பிரிவுகள் சேர்க்காததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், அமல்படுத்த முடியவில்லை.

உரிய பிரிவுகள்:
எனவே, இலவச கட்டாய கல்வி சட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அமல்படுத்த, உரிய பிரிவுகளை கொண்டு வர, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதிகள் அருணா ஜெகதீசன், வைத்தியநாதன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், கல்வி துறை சார்பில், கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி ஆஜராகினர்.

'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு:
மனுவுக்கு, மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி