தபால் ஓட்டுக்களை எண்ணுவது குறித்து தேர்தல் கமிஷன், புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது.
அதன் விபரம்:ஓட்டு எண்ணிக்கை நாளின் முந்தைய நாளில், தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர், பார்வையாளரை சந்தித்து எத்தனை தபால் ஓட்டுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நாளிலும், முந்தைய நாளில் இருந்து கடைசி வரை வந்த தபால் ஓட்டுக்கள் குறித்த விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
= ஒரு மேஜைக்கு 500 ஓட்டுக்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும்.
= ஓட்டு எண்ணும் ஊழியர்களுக்கு, தபால் ஓட்டுக்களை எப்படி பிரித்து எண்ணுவது என்பது குறித்து ஏற்கனவே தேர்தல் கமிஷன் தெரிவித்தபடி, பயிற்சி அளித்திருக்க வேண்டும்.
= ஓட்டுக்களை எண்ணுவதற்காக, மேஜைகளுக்கு வினியோகிக்கும் முன்பாக, அனைத்து மேற்பார்வையாளர், உதவியாளர்களுக்கு, ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
= ஓட்டு எண்ணிக்கை தாமதமாகவில்லை என்பதை, தேர்தல் நடத்தும் அதிகாரி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
= ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண் பார்வையாளர் (மைக்ரோ அப்சர்வர்) கூடுதலாக நியமிக்கப்படலாம்.
= ஓட்டுக்களை எண்ணும்போது, 'படிவம் 13ஏ'ல் காணும் குறைபாடால், தள்ளுபடி செய்யும் நிலை ஏற்பட்டால், அதை தேர்தல் நடத்தும் அதிகாரி மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும்.
= தபால் ஓட்டுக்களை எண்ணத் துவங்கி, அரை மணி நேரத்திற்கு பின்பே, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டுக்களை எண்ண வேண்டும். அதேசமயம் தபால் ஓட்டுக்களை முடிக்கும் முன், ஓட்டுப்பதிவு இயந்திர ஓட்டுக்களை முடித்துவிடக் கூடாது. தேவையானால் கடைசி இரு சுற்றுக்களை எண்ணாமல் நிறுத்தி வைத்து, தபால் ஓட்டுக்களை முழுமையாக எண்ணி முடித்த பின்பே, இயந்திர ஓட்டுக்களை எண்ண வேண்டும்.
செல்லாத ஓட்டுக்கள்:தபால் ஓட்டில் 'கவர் பி' என்பதை 'கட்' செய்தால், அதில் 2 பேப்பர்கள் இருக்கும். இதில் '13ஏ' உறுதிமொழி படிவம். 'கவர் ஏ' என்பதில் '13பி' என்ற ஓட்டுச் சீட்டு இருக்கும். '13ஏ' சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்த பின்பே, ஓட்டுச்சீட்டை எண்ணுவதற்கு தனியாக வைப்பர்.
'13ஏ' கவரில் உறுதிமொழிப் படிவம் இல்லை என்றாலோ; உறுதிமொழிப் படிவத்தில் வாக்காளர், 'கெஜடட்' அதிகாரி கையெழுத்து இல்லை என்றாலோ; உறுதிமொழிப் படிவத்தில் ஓட்டுச் சீட்டின் வரிசை எண் சரியாக இல்லை என்றாலோ; '13ஏ' படிவமே இல்லை என்றாலோ தபால் ஓட்டு தள்ளுபடியாகிவிடும். இவ்விபரங்களை, தேர்தல் நடத்தும் அதிகாரி சரிபார்ப்பது அவசியம்.
இதுதவிர, '13ஏ' படிவம் சரியாக இருந்தாலும் மேலும் சில காரணங்களாலும், தபால் ஓட்டு செல்லாதது ஆகிவிடும்.
ஓட்டுச் சீட்டில், ஓட்டு பதிவாகாமல் இருந்தாலும், ஒன்றுக்கு மேல் பதிவு செய்திருந்தாலும்; தபால் ஓட்டு கிழிக்கப்பட்டு அல்லது நனைந்து இருந்தாலும்; தபால் ஓட்டு, அதற்குரிய கவரைத் தவிர வேறு எந்த கவருக்குள் இருந்தாலும்; எந்த வேட்பாளருக்கு ஓட்டளித்துள்ளார் என புரியாமல் இருந்தாலும், குறிப்பிட்டபடி இல்லாமல் வேறுவகையில் பதிவு செய்திருந்தாலும்,
தபால் ஓட்டு செல்லாதது ஆகிவிடும்.இத்துடன், வெற்றி பெற்றவருக்கும், தோல்வி அடைந்தவருக்கும் உள்ள வித்தியாசத்தைவிட, மொத்த தபால் ஓட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அனைத்து தபால் ஓட்டுக்களையும், தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மீண்டும் எண்ண வேண்டும்.