புதிய பாரதம் மலர்கிறது


ஜனநாயகம் வென்றது.  மக்கள் சக்தி வென்றது.

நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 284 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் வரலாறு காணாத வெற்றி அடைந்துள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 338 இடங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்று அதன் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. தேசிய நாயகர் நரேந்திர மோதியை இந்திய மக்களில் மிகப் பெரும்பான்மையினர் தங்கள் பிரதமராக அங்கீகரித்து தேர்வு செய்திருக்கிறார்கள். வதோதரா தொகுதியில் 5 லட்சத்துக்கும் அதிகமாகவும், வாராணசியில் 3 லட்சத்துக்கும் அதிகமாகவும் வாக்குகள் பெற்று மோதி பெரும் வெற்றியடைந்திருப்பது மக்கள் அவர் மீது வைத்துள்ள தனிப்பட்ட நம்பிக்கையையும் அன்பையும் பறைசாற்றுகிறது.

வடக்கே லடாக்கிலும், மேற்கே கட்சிலும், கிழக்கே அருணாசல பிரதேசத்திலும், தெற்கே கன்னியாகுமரியிலும் என்று  நான்கு எல்லைப் புறத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருக்கிறது. மகா சக்தியான பாரத அன்னையின் பரிபூரண ஆசியே மக்களின் வாக்குகளாக மோதி அரசுக்கு உரம் சேர்க்கும் வகையில் அமைந்து விட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட சமுதாய மக்கள் முழுவதுமாக மோதிக்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று ஹேஷ்யம் கூறிய அரசியல் பண்டிதர்களின் கருத்துகளைத் தவிடு பொடியாக்கி, முஸ்லிம்கள், தலித்கள், வனவாசிகள், நகர்ப்புற மக்கள், கிராமவாசிகள் என வெவ்வேறு தரப்பினரும் அதிகமாக வாழும் எல்லாவிதமான தொகுதிகளையும் தழுவியதாக பாஜகவின் வெற்றி அமைந்திருக்கிறது.



தமிழகத்தில் பாஜக கூட்டணி ஒரு பரிசோதனை முயற்சியாக அமைந்தது. கணிசமான வாக்குகளைப் பெற்ற போதும், இடங்களை வெல்லும் அளவுக்கு இந்தக் கூட்டணி உந்து சக்தியை அடையவில்லை என்பது வருத்தமே. அதற்கு நடுவிலும் கன்னியாகுமரியில் தமிழக பாஜக தலைவர் பொன்.ஆர் அவர்களின் சிறப்பான வெற்றியும், தருமபுரியில் பாமக வெற்றியும் சிறு சந்தோஷங்கள். அதிமுகவின் 37 தொகுதி வெற்றி, “தேசிய” காங்கிரசுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய கட்சியாக அதிமுகவை முன்னணியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்தியத் தேர்தல்கள் அளிக்கும் ஆச்சரியங்கள் நம்மால் கற்பனையே செய்ய முடியாதவை !
மோதியின் சீரிய தலைமையையும், அவரது சாதனைகளையும் முன்வைத்து வளர்ச்சியையும் நல்லாட்சியையுமே மையமாக முன் நிறுத்தி  பாஜக செய்த பிரசாரங்கள் பெரும்பயன் அளித்துள்ளன. இந்தத் தேர்தலை ஒரு மாபெரும் சவாலாக, வேள்வியாக, தவமாக எடுத்துக் கொண்டு பாஜக தலைவர்கள், கட்சிப் பணியாளர்கள், தொண்டர்கள், ஆர் எஸ் எஸ் சகோதர இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், இணைய தளங்கள், சமூக வலைத்தளங்கள் என்று பற்பல தரப்பினர் பணியாற்றினர். அவர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ஹிந்து  நாட்டு மக்களின் இந்தப் பெருமகிழ்ச்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறது.
நரேந்திர மோதியின் வெற்றி என்பது ஒரு அரசியல் தலைவரின், அரசியல் கட்சியின் வெற்றி மட்டுமல்ல. ஒரு மகத்தான இந்தியக் கனவின் வெற்றி. மிக எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையிலும் கடும் உழைப்பிலும் வளர்ந்து, தனது தாய் தந்தையரின் தியாகங்களையும் அபேட்சைகளையும் சுமந்து, மலினமான அரசியல் சூழலுக்கு நடுவிலும் வீரம், தேசபக்தி, நேர்மை, தன்னலமின்மை, எளிமை, தியாகம், மன உறுதி ஆகிய உன்னதப் பண்புகளைக் கைவிடாமல் அல்லும் பகலும் அயராது உழைத்து, படிப்படியாக உயர்ந்து நாட்டின் தலைமைப் பதவியை எட்டியிருக்கும் ஒரு மாமனிதரின் சரித்திரம் எழுதப் படும் தருணம் இது.
நேற்று மதியம் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வெற்றிப் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், மோதி தனது அன்னை ஹீராபென் அவர்களை காந்தி நகரில் அவர் வாழும் எளிய இல்லத்தில் சந்தித்தார். எல்லா தொலைக் காட்சிகளும் அதைக் காட்டின. மெலிந்த கைகளால், அந்தத் தாய் தனது திருமகனின் தலைமீது கைவைத்து ஆசியளித்து, நெற்றியில் திலகமிட்டு, வாயில் இனிப்பை ஊட்டி அவர் தோள்களையும் கைகளையும் வருடினார். அதைப் பார்த்த எத்தனையோ லட்சோப லட்சம் இதயங்கள் நெகிழ்ந்திருக்கக் கூடும். இந்தப் பழம்பெரும் தேசத்தின் மூதன்னையரின் ஆசிகள் அனைத்தும் அந்தத் தாயின் கரங்களில் இறங்கி நரேந்திர மோதியை வாழ்த்திய தருணம் அது. ஒரு இந்தியத் தருணம். A moment for India.

பத்தாண்டுகளுக்குப் பிறகு தேச நலனிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட ஆட்சி மத்தியில் அமையப் போகிறது. இதற்கு முந்தைய வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியை விடவும் பல மடங்கு ஆற்றலும், செயல்திறனும், தெளிவான தொலைநோக்குப் பார்வையும் கொண்டதாக நரேந்திர மோதி தலைமையிலான ஆட்சி இருக்கும். இனி வரும் 15 வருடங்கள் இந்திய சமூகத்தின், அதன் இளைஞர் சக்தியின் முடக்கி வைக்கப் பட்டிருந்த ஆற்றல்கள் அனைத்தையும் வெளிக் கொணர்வதாக இருக்கும். நமது நாட்டை அதன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், மகோன்னதத்திற்கும் எடுத்துச் செல்வதாக இருக்கும்.  “Ab ki bar Modi Sarkar” என்று  யூ ட்யூப் வீடியோக்களில் மழலை மொழியில் பேசிய 5 வயதுக் குழந்தைகள், தாங்கள் வாக்களிக்கும் வயது வரும்போது, அதே வாசகத்தை இன்னும் அழுத்தமாக வீதிகளில் முழங்குவார்கள்.
வாராது வந்த மாமணியாக, நம் தவப்பயனாக வந்து வாய்த்திருக்கிறார் நரேந்திர மோதி. தேர்தல் முடிந்து விட்டது. இனி அரசியல் பூசல்கள் ஓய்ந்து, அனைவரும் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய பிரதமரின், புதிய அரசின் கரங்களை வலுப்படுத்துவோம். புதிய பாரதம் பிறக்கட்டும் ! 

Source : http://www.tamilhindu.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி