சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் போலவே, தமிழகத்தில் பொதுத் தேர்வுகளும் மிக பிரமாண்டமானது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் பகீரத பிரயத்தனம் செய்து தேர்வுக்கு தயாராகின்றனர். பெற்றோர், ஆசிரியர், பள்ளி நிர்வாகங்கள் தரும் பல அழுத்தங்களுக்கு இடையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதி முடிக்கின்றனர். அதன் பிறகு வினாத் தாள்களை திருத்தி மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிந்து முடிவுகளை வெளியிட்டு மதிப்பெண் பட்டியலை வழங்கும் வரை தேர்வு துறையும் துரிதகதியில் செயல்படுகிறது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டுகளில் வினாத் தாள் சேதம் அடைந்தது, காணாமல் போனது போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் மத்தியில் ஆண்டுக்கு ஆண்டு விழிப்புணர்வு அதிகரித்து வருவதை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு மொத்தம் 90.6 சதவீதம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் அனைவரும் உயர் கல்விக்கு வருவதில்லை. மருத்துவம், பொறியியல் படிப்பு தரும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமை, கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத, படிப்பை தொடர முடியாத நிலை பல மாணவர்களுக்கு உள்ளது.
தனியார் கல்லூரிகளில் சீட் வாங்க லட்சக்கணக்கில் பணம் வசூலிப்பதாக ஆண்டுக்கு ஆண்டு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆண்டுதோறும் 'கேப்பிடேஷன்' பணம் அதிகரிப்பது நிற்கவில்லை. அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் இடம் பெற்றாலும், அவர்கள் வசூலிக்கும் கட்டணம்தான் இறுதியானது. அன்பளிப்பு என்ற பெயரில் பணம் வசூலிப்பதை தடுத்தாலே, உயர் கல்வி பெறும் ஏழை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் பள்ளி இடை நிற்றலை தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பது போல், கல்லூரியில் சேர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கும் அரசு ஏதாவது செய்ய வேண்டும்.
வறுமைக்கு இடையிலும் எத்தனையோ ஏழை மாணவ, மாணவிகள் பிளஸ் 2 வரை படித்து நல்ல மதிப்பெண் பெறுகிறார்கள். ஆனால், பணம் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக திறமையுள்ள மாணவர்கள் ஏராளமானோருக்கு உயர் கல்வி என்பது கனவாகவே இருந்து வருகிறது. அதை நிஜமாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.