ஒரு தவறான முன்னுதாரணத்தை, அரசியல் சட்ட மரபுக்கு எதிரான சட்டத்தைத் தட்டிக் கேட்டுத் திருத்துவதற்கு ஆறு ஆண்டுகள்
ஆகியிருக்கின்றன. முடிவுக்கு வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு.
மேஜர் ஜான் பென்னிகுவிக் என்கிற ஆங்கிலேய பொறியாளரால், வீணாகக் கடலில் கலக்கும் பெரியாறு நதியின் வெள்ளத்தை வைகை ஆற்றிற்குத் திருப்பிவிட்டு ஏறத்தாழ 1,69,411 ஏக்கர் விவசாய நிலப்பரப்புக்குப் பாசன வசதி ஏற்படுத்திக் கொடுக்க நிறைவேற்றப்பட்ட நல்லதொரு திட்டம்தான், நீதிமன்றங்களில் நியாயம் கேட்டுக் கடந்த பல ஆண்டுகளாக அல்லாடிக் கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய அணை என்பதால், அதன் கட்டுமானம் பலம் இழந்திருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சை எழுப்பப்பட்டது.
1979இல் குஜராத் மாநிலம் மோர்வியிலுள்ள மச்சூ அணை உடைந்த விபத்தில் பல உயிர்கள் பலியாகின. அந்த விபத்தைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையாலும் பாதிப்பு ஏற்படும் என்கிற பீதியை கேரள மாநிலத்தில் சிலர் எழுப்பினார்கள். மத்திய அரசின் குழு ஒன்று தமிழக அரசை அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கொள்ளளவை 152 அடியிலிருந்து 142 அடியாகக் குறைக்கும்படியும் ஆலோசனை கூறியது.
முல்லைப் பெரியாறு அணையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும், புதிய அணை ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் கேரளம் எழுப்பிய கோரிக்கைகளைத் தமிழகம் மட்டுமல்ல, உச்சநீதிமன்றமே ஏற்றுக் கொள்ளவில்லை. 2006 பிப்ரவரி 27ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக அதிகரித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் வழிகோலியது. அதுமட்டுமல்ல, அணையின் கட்டுமானத்தையும் பாதுகாப்பையும் பலப்படுத்திய பிறகு நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும் அனுமதித்தது.
கேரளத்தில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கூட்டணியும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த இடதுசாரிக் கூட்டணியும் சரி, தங்களுக்கு ஏற்புடைய விஷயங்களில் அரசியல் சட்டத்தை நீட்டுவார்கள், நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான தீர்ப்பு வந்தபோது இந்த நியாயமெல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டது.
கேரள சட்டப்பேரவை கூடியது. அதுவரையில் இல்லாத "அணை பாதுகாப்புச் சட்டம்' ஒன்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒத்த குரலில் ஆதரிக்க ஏகமனதாக அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 136 அடிக்கும் அதிகமாக அணையின் உயரத்தை அதிகரிக்கத் தமிழகத்திற்கு அனுமதி மறுத்தது கேரள அரசு. உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தடம்புரளச் செய்ய மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்றிய விசித்திரம் அங்கே அரங்கேறியது.
அந்தச் சட்டத்தை எதிர்த்துத் தமிழகம் தொடர்ந்த வழக்கில்தான் இப்போது ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தமிழகத்திற்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நீதிமன்றத்தின் வரம்புகளில் கேரள சட்டப்பேரவை தலையிட்டதைக் கண்டித்தது மட்டுமல்லாமல் அந்தச் சட்டத்தை ரத்து செய்து, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு உரிமையைத் தமிழகத்துக்கு வழங்கி நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்வதற்கும் வழிகோலியிருக்கிறது.
இத்தனையையும் கூறிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அப்படியொரு சட்டத்தை முன்மொழிந்த முதலமைச்சருக்கோ அல்லது சட்டப்பேரவையின் தலைவருக்கோ நீதிமன்ற அவமதிப்புக்காகத் தண்டனை வழங்கி இருந்தால், இதுபோல் அதிகப்பிரசங்கித்தனங்களில் நமது அரசியல்வாதிகள் வருங்காலத்தில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்கும்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்ததால் பிரச்னை முடிந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கேரளம் ஏற்க மறுத்தபோதே, மத்திய அரசு தீர்ப்பை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்திருந்தால் இந்தக் காலதாமதத்திற்கே அவசியமிருந்திருக்காது. ஆனால், கேரளத்தில் தங்களுக்கு அரசியல் பின்னடைவு ஏற்படும் என்கிற காங்கிரஸ் கட்சியின் அச்சம்தான், கேரள அரசின் அடாவடித்தனத்தை அமைதியாக இருந்து ஆமோதிக்க வைத்தது. ஒவ்வொரு முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பு கேரளத்தால் மீறப்படும் போதும், நமது கூட்டாட்சித் தத்துவத்தின் முதுகில் கத்தியால் குத்தப்படுகிறது என்பதை இந்தப் பிரச்னையுடன் தொடர்புடைய காங்கிரஸூம், இடதுசாரிகளும் உணர வேண்டும்.
முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு தீர்வு, நடுநிலையான மத்திய அரசு இரண்டு மாநில அரசுகளையும் அழைத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சுமுகமான ஒப்பந்தம் ஏற்படுத்துவதாக மட்டுமே இருக்கும்.