‘பேஸ் புக்’ பயன்பாடு, பெற்றோரின் பொறுப்பு

சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் ஒரு சிந்தனை கேள்வியை எழுப்பிவிட்டது. 13 வயதான ஒரு 8–ம் வகுப்பு மாணவி ‘பேஸ்புக்’தான் கதி என்று எப்போதும் அதிலேயே தன் நேரத்தை செலவழித்து கொண்டிருந்தாள். அவளுடைய பெற்றோர் இப்படி உன் நேரத்தை ‘பேஸ்புக்‘கில் வீணாக்கி கொண்டிருக்கிறாயே?, என்று எவ்வளவோ கண்டித்து பார்த்தனர். ஆனால், அந்த பெண் கேட்பதுபோல் இல்லை. அவள் தாயார், ‘நான் வேலைக்கு செல்கிறேன். நான் திரும்பி வரும்போது நீ ‘பேஸ்புக்‘கில் இருந்து உன் பெயரை நீக்கிவிட வேண்டும்‘ என்று கண்டிப்புடன் கூறினாள். ஆனால், இதை தாங்கிக்கொள்ள முடியாத அந்த சிறு பெண், தாயார் திரும்பி வரும்போது தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தாள். இதேபோல், ‘பேஸ்புக்‘கில் காதலை வளர்த்துக்கொண்ட 9–வது வகுப்பு படித்துக் கொண்டிருந்த மற்றொரு 14 வயது மாணவி ‘பேஸ்புக்‘கில் காதலை வளர்த்துக்கொண்டு, அந்த காதலனுக்கு தன் உடலையும் விருந்தாக கொடுத்தப்பிறகு, அவனால் கைவிடப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல், அந்த சின்ன பெண் தற்கொலை செய்துகொண்ட துயரமான சம்பவமும் நடந்து இருக்கிறது.

விஞ்ஞானம் வளர, வளர சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்க்கையை குறிப்பாக, மாணவ செல்வங்களின் வாழ்க்கையை ஆக்கிரமித்துவிட்டது. ஏற்கனவே பிறந்து, விவரம் தெரிந்தவுடனே, செல்போனை இயக்கும் முறை எல்லா குழந்தைகளுக்கும் தெரிந்துவிட்டது. முதலில் வெறுமனே பேசுவதற்கு மட்டும் செல்போன் பயன்டுத்திய இன்றைய இளம்தலைமுறை, பிறகு பாட்டு கேட்பதற்கு, வீடியோ பார்ப்பதற்கு, குறுஞ்செய்தி அனுப்புவதற்கு என்று பயன்படுத்த தொடங்கி, இப்போது இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்காக செல்போனை வாங்க முற்பட்டுவிட்டனர். இன்டர்நெட்டில் தகவல்களை அறிய மட்டும் பயன்படுத்தினால் பரவாயில்லை. ஆனால், ‘பேஸ்புக்‘ என்று சொல்லப்படும் முகநூலில் மூழ்குவதற்காக செல்போனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். தற்போது செல்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 80 கோடி ஆகிவிட்டது. ‘ஸ்மார்ட்போன்‘ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 9 கோடி ஆகிவிட்டது. ‘மொபைல் பிராட் பேண்ட்‘ பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இரவு நேரத்தில் அளவில்லாத இன்டர்நெட் பயன்பாடுகூட வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்தியாவில் நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 73 சதவீதம் குழந்தைகள் ‘பேஸ்புக்‘ மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. இதில், 25 சதவீதம் குழந்தைகள் 13 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும், 22 சதவீத குழந்தைகள் 11 வயதிற்கு குறைந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். 8 வயது, 9 வயது குழந்தைகள்கூட ‘பேஸ்புக்‘கில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது எதிர்கால இந்தியாவிற்கு நல்லதா?, கெட்டதா? என்பது புரியவில்லை. ஏற்கனவே டெல்லி ஐகோர்ட்டு 13 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள் ‘பேஸ்புக்‘ பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ‘பேஸ்புக்‘கினால் ஆதாயம் 10 சதவீதம் என்றாலும், கேடு 90 சதவீதம் என்று வெ.இறையன்பு சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் கூறினார்.

அரசியல் பிரபலங்கள் மக்களோடு தொடர்பு கொள்வதற்கு ‘பேஸ்புக்‘ உதவுகிறது. நண்பர்கள் வட்டத்தை பெருக்க உதவுகிறது என்றெல்லாம் ‘பேஸ்புக்‘கிற்கு சாதகமான தகவல்கள் கூறுகிறது. பல நேரங்களில் ஆக்கப்பூர்வமான தகவல்கள் ஏராளமானவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ‘பேஸ்புக்‘ உதவுகிறது என்றாலும், சில நேரங்களில் நேரவிரயமும், தவறான உறவுகள் உருவாவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. யார்–யாரை பற்றியும், என்ன வேண்டுமானாலும் எழுதலாம், என்ற கட்டுக்கடங்காத சுதந்திரத்தை வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், வயது வித்தியாசம் இல்லாமல் போதை ஏற்றும் மாற்று சூதாட்டம்தான் இது.

மதனபுத்தகங்கள் மூலமாக வரும் செய்திகளை காதல் என்று நினைத்து ரெண்டுங்கெட்டான் வயதில் உள்ளவர்களை ஏமாந்து போக வைக்கிறது. ஆனால், வெளிப்படையான சமுதாயம் வளர்ந்து கொண்டே வரும் இந்த காலகட்டத்தில், இதையெல்லாம் சட்டத்தின் மூலமாக தடைசெய்ய நிச்சயமாக முடியாது. ஆனால், பெற்றோர்களுக்குத்தான் பெரும்பொறுப்பு இருக்கிறது. ‘பேஸ்புக்’கை தங்கள் வீட்டு குழந்தைகள் ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்களா? என்பதை கண்காணிக்கும் கடமை அவர்களுக்கே உண்டு.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி