சான்றிதழ்கள் மாயமான வழக்கில், அஞ்சல் துறை இழப்பீடு வழங்க, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் மாற்றம் செய்து உத்தரவிட்டது.
வேலூர், தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் பெண்கள் கல்லூரியில் பணியாற்றுபவர் லட்சுமிபிரபா. 2004ல் சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கு, தன் கல்விச் சான்றுகள் மற்றும் 6,500 ரூபாய் கட்டணத்திற்கான டி.டி., ஆகியவற்றை அனுப்பினார். ஆனால், அவை, பல்கலைக்கு சென்று சேரவில்லை. இதையடுத்து, அஞ்சல் துறை இழப்பீடு வழங்கக் கோரி, வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், லட்சுமி பிரபா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த, வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், மனுதாரருக்கு இழப்பீடாக, 15 ஆயிரம் ரூபாய் உட்பட, 21 ஆயிரம் ரூபாயை, அஞ்சல் துறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அஞ்சல் துறை சார்பில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. மாநில நுகர்வோர் தீர்ப்பாய தலைவர், நீதிபதி ரகுபதி, உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, இழப்பீட்டை 15 ஆயிரத்தில் இருந்து, 8,000 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்ட, இதர இழப்பீடுகளை அஞ்சல்துறை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.