
கிருஷ்ணகிரி: "நான் படித்த பள்ளிக்கூடம் கிருஷ்ணகிரியில் இருந்து அதிக தூரம் என்பதால் ஊத்தங்கரையிலேயே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி படித்தேன்" என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பிளஸ் 2 தேர்வில் 1193 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார் கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவி சுஷாந்தி.
தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கும் மாணவி சுஷாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலேயே முதலிடம் பெறுவதற்கு முயற்சி செய்தேன். ஆனால் 491 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. ஆனாலும் என் முயற்சியை நழுவ விடாமல் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினேன். இந்த வெற்றிக்கு நான் மட்டும் கஷ்டப்படவில்லை. என்னுடைய அப்பா, அம்மா, எங்க பாட்டி அடுத்து ரொம்ப முக்கியமானவங்க எங்க டீச்சர்ஸ். எல்லோரும் எனக்காக கஷ்டப்பட்டாங்க.
எல்லோருடைய கஷ்டத்திற்கும் பலன் கிடைத்துவிட்டது. நான் படிச்ச வித்யா மந்திர் ஸ்கூல் கிருஷ்ணகிரியில் இருந்து தூரம் அதிகம். அதனால அங்க ஒரு வீடு எடுத்து தங்கிதான் நான் படிச்சேன். என்னோட பாதுகாப்புக்கு எங்க பாட்டி இருந்தாங்க. அவங்களும் என்னோட இந்த வெற்றிக்கு ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அப்புற, எங்க டீச்சர்ஸ் என்னை ஒவ்வொரு விஷயத்திலும் ஊக்கபடுத்திக்கிட்டே இருந்தாங்க.
எங்கிட்ட எதாவது மைனஸ் பாயிண்ட் தெரிஞ்சா உடனே அதை சுட்டிக்காட்டி சரி செஞ்சுடுவாங்க. உன் கையெழுத்து நல்லா இருக்கு. உன் ப்ரசன்ட்டேஷன் நல்லா இருக்குன்னு ஒவ்வொரு விசயத்திலும் என்கரேஜ் பண்ணிகிட்டே இருப்பாங்க. எங்க அப்பாவும், அம்மாவும் இதை பத்தாம் வகுப்பிலேயே எதிர்பார்த்தாங்க. அப்ப முடியல. ஆனா இப்ப அவுங்க ஆசைய நிறைவேத்திட்டேன். என்னுடைய லட்சியம் டாக்டராக வேண்டும் என்பதுதான். இந்த தருணத்தை என வாழ்க்கையில் மறக்க முடியாது என்று பூரிக்கிறார் சுஷாந்தி.