சுகாதார ஆய்வாளர் ஆக வேண்டுமா?

பழ மண்டிகளில் செயற்கை மாம்பழங்களைப் பறிமுதல் செய்வது, ஓட்டல்களில் சோதனை நடத்துவது, நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படாமல் தூய்மையைப் பராமரிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுபவர்கள் சுகாதார ஆய்வாளர்கள். ஹெல்த் இன்ஸ்பெக்டர் என்று சொன்னால் உடனே புரிந்துவிடும். ரயில்வே துறையிலும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாற்றுகிறார்கள்.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆக விரும்புவோர் சுகாதார ஆய்வாளர் படிப்பில் முதுகலை டிப்ளமோ படிப்பு (Post Graduate Diploma in Sanitary Inspector Course) முடித்திருக்க வேண்டும். ஓராண்டு கால இந்த முதுகலைப் பட்டயப் படிப்பு தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் இது.

சானிட்டரி இன்ஸ்பெக்டர் டிப்ளமா படிப்பில் சேருவதற்கு பி.எஸ்சி. வேதியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 25. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டு சலுகை அளிக்கிறார்கள். நுழைவுத்தேர்வு மூலம் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி, ஓபிசி வகுப்பினர் ஆகியோருக்கு அரசு விதிமுறைகளின்படி இட ஒதுக்கீடு உண்டு. மேலும், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவத் தினரின் வாரிசு ஆகிய சிறப்புப் பிரிவினருக்கும் தனியாகக் குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப் படுகின்றன.

டிப்ளமா படிப்பை முடித்ததும் உங்கள் பி.எஸ்சி. வேதியியல் பட்டப் படிப்புடன் கூடிய சானிட்டரி இன்ஸ்பெக்டர் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட வேண்டும். நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு மூலமாகப் பணி நியமனம் நடக்கிறது.

ரயில்வே துறையில் சுகாதார ஆய்வாளர் பணியில் சேர ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வை எழுத வேண்டும். சானிட்டரி இன்ஸ்பெக்டர் பயிற்சி முடித்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் வெகுவிரைவில் நகராட்சி, மாநகராட்சிகளில் சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்துவிடலாம்.

தற்போது காந்திகிராம் பல்கலைக்கழகம் 2014-2015-ம் கல்வி ஆண்டுக்கான சானிட்டரி இன்ஸ்பெக்டர் பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு ஜூன் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. பி.எஸ்சி. (வேதியியல்) இறுதி ஆண்டு மாணவ-மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.180. எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இலவசம்.

தபால் மூலம் விண்ணப்பத்தை பெறக் கட்டணம் ரூ.225.

“The Registrar, The Gandhigram Rural Institute-Deemed University” என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும்.

கனரா வங்கி, காந்திகிராமம் பல்கலைக்கழக வளாகக் கிளையிலும் (கோட் நம்பர் 8500), பாரத ஸ்டேட் வங்கி, அம்பாதுறைக் கிளையிலும் (கோட் நம்பர் 3373) செலுத்தக்கூடியதாக டி.டி. எடுக்க வேண்டும்.

இதர வங்கிகளில், விண்ணப்பக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.50 சேர்த்து டி.டி. எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 23.

படிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.ruraluniv.ac.in மற்றும் 0451-2452371-75.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி