திண்டுக்கல் - மாவட்ட சுற்றுலா தலங்கள்


திண்டுக்கல்
திண்டுக்கல் என்றதும் பூட்டு ஞாபகத்திற்கு வரும். ஆனால் இந்நகருக்கு பன்முகங்கள் இருக்கின்றன. வெங்காயம், நிலக்கடலையின் மொத்தச் சந்தையாகத் திகழ்கிறது. இங்கிருந்து பிரியும் சாலைகள் கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களோடு இணைகின்றன. தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடமான மலைகளின் இளவரசியான கோடைக்கானல் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் 2133 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பேரணை, சிறுமலை ஆகிய இரு சிறந்த உல்லாச ஓய்விடங்களும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளன.


அபிராமி அம்மன் கோயில்
திண்டுக்கல் நகரில் அருள் பாலிக்கும் அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையின்போது அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார். தொலைபேசி - 0451-2433229.

நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்
ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில் நிலக்கோட்டை வட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுரை நகரிலிருந்தும் சென்று வரலாம்.

பேகம்பூர் பெரிய மசூதி
மலைக்கோட்டை அடிவாரத்தின் தெற்கில் அமையப் பெற்றுள்ள இது பழமையான வரலாறுகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கிற மிகப்பெரிய மசூதி. ஹைதர் அலி திண்டுக்கல்லை ஆட்சிப் புரிந்த போது கட்டிய மூன்று மசூதிகளில் இதுவும் ஒன்று. இந்த மசூதியைப் பராமரிக்க ஹைதர் அலி நிறைய மானியங்கள் வழங்கியுள்ளார். அவரும் படைவீரர்களும் மக்களும் வழிபடத் தனித்தனியே மூன்று மசூதிகளை மலைக்கோட்டையின் அருகிலேயே வெவ்வேறு இடங்களில் கட்டியுள்ளார். ஹைதர் அலியின் இளைய சகோதரியும் கோட்டைப் படைத்தலைவர் மிர்கா அலிகானின் மனைவியுமான அடுர் உன்னிசாபேசம் இறந்தபின் பெரிய மசூதி வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டார். திண்டுக்கல்லின் ஒரு பகுதியான பேகம்பூர் ராஜவம்சப் பெண்ணின் நினைவைப் போற்றும் வகையில் இது அமைந்துள்ளது. தொலைபேசி எண் - 0451-24-2086.

பழநி
தமிழ்க்கடவுள் பழந்தமிழர்களின் கடவுள். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தமிழகத்தில், பழநி மலை முருகன் கோயிலுக்குச் சென்று மொட்டை போடாதவர்கள் இருக்க மாட்டார்கள். தென்னிந்தியாவின் மிகப்பெரிய புண்ணியத்தலமான இக்கோயிலின் மூலவர் நவபாசாணத்தால் வடிக்கப்பட்டவர். எனவே, இச்சிலையின் அபிஷேக நீரை அருந்தினால் நோய்தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மின்வடக்கயிறு ஊர்தி மூலம் மலைமீதேறி முருகப்பெருமானை வணங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி - 04545-242293.

பெரியநாயகி அம்மன் கோயில்
நாயக்கர் கால கட்டடப் பாணியில் கட்டப்பட்ட அம்மன் கோயில். பழனி மலை தண்டாயுதபாணி துணைக்கோயில்களில் முக்கியமானது இக்கோயில். பெரிய நாயகி அம்மன்கோயில் திருவிழா என்றால் ஊரே திரண்டுவரும். இங்குள்ள சிற்பங்கள் கலையழகின் உச்சம். பிரதான மண்டபத்தின் உயரமான தூண்கள் எல்லாவற்றிலும் முருகப்பெருமானின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. தொலைபேசி - 04545-242253.

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில்
கோட்டை மாரியம்மனுக்கும் திப்புசுல்தானுக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறதே, மாவீரன் திப்புவின் படைவீரர்கள்தான் மலையடிவாரத்தில் இக்கோயிலின் சிலையை நிறுவியுள்ளார்கள். இந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. சதுர வடிவில் கட்டப்பட்ட கோயிலின் தெற்கில் வெற்றி விநாயகர் கோயிலும் வடக்கில் முருகன் கோயிலும் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள சிங்கமுகச் சிற்பம் நம்மைப் பார்க்கும். கர்ப்பக் கிரகம்கூட சதுர வடிவில்தான் அமைந்திருக்கும்.

புனித ஜான் தேவாலயம்
பதினைந்து நாட்கள் நடக்கும் திருவிழாவைப் பார்க்க வேண்டுமா? நீங்கள் செல்ல வேண்டிய அன்பின் ஆலயம் புனித ஜான் தேவாலயம். சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் நகர்ந்து செல்லுங்கள். அப்போது தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது இத்திருத்தலம். 1866 இல் தொடங்கி 1872 இல் ஆலய நிர்மாணப் பணி நிறைவடைந்துள்ளது. மிகப்பிரபலம் வாய்ந்த கிறிஸ்தவப் பேராலயம் இது. தொலைபேசி - 0451-2423557.

ஸ்ரீ காளகதீஸ்வரர் கோயில்
காளகதீஸ்வரர் ஞானாம்பிகை அம்மன் குடிகொண்டுள்ள இக்கோயில் பழமையானது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோபுரங்களில் இதுவும் ஒன்று. சித்திரை மாதத்தில் இங்கு நடக்கும் பிரம்மசாரத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு பத்மகிரி நகர் அபிராமிதேவி அம்மனைக் கொண்டு வருவது இத்திருவிழாவின் முக்கிய அங்கம். இங்குள்ள மண்டபம் 14 ஆம் நூற்றாண்டில் திருவிழாவிற்கென அழகுப்படுத்தப்பட்டது. திண்டுக்கல் செல்கிறவர்கள் கட்டாயம் சென்று வர வேண்டிய திருத்தலம் இது.

தாடிக்கொம்பு பெருமாள் கோயில்
சித்ரா பௌர்ணமி அன்று அழகர் பெருமாள் தரிசனம் பக்திப் பரவசம். சித்திரை மாதத்தில் பன்னிரண்டு நாட்கள்நிகழும் அழகர் பெருமாள் சிறப்புப் பூஜை சிறப்புக்குரியது. திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அனைவருக்கும் அருள் தரும் பெருமாள் அழகர்பெருமாள்.

திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல் வரலாற்றின் திசைகள் செல்லும் கோட்டை தலையணை திண்டுபோல் இருப்பதால் இந்நகருக்கு திண்டுக்கல் எனப் பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மலையின் மீது 280 அடி உயரத்தில் கம்பீரம் காட்டும் இந்தக் கோட்டையை கி.பி. 1605 இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கர் கட்டத் தொடங்கினார். அதன்பின் திருமலை நாயக்கர் பணிகளைத் தொடங்கி கி.பி. 1659 இல் நிறைவு செய்தார்.பழம்பெரும் வரலாற்றின் அசையாத ஆவணமாக இருக்கிறது இக்கோட்டை. கி.பி. 1755 இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன் திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம் கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின் மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில் வந்தது. இச்சிறு வரலாறு கோட்டையின் பிரமாண்டத்தை ரசிக்க உதவும். மன்னர்களின் ராஜபாட்டையில் ஒரு நாள் நீங்களும் நடந்துதான் பாருங்களேன். அனுபவம் புதுமை.
காவடித் திருவிழா - பழனி முருகனுக்கு காவடி எடுப்பது என்பது தனிச் சிறப்பானது. பழனி மலையை நோக்கி கந்தனுக்கு வேல் ... வேல்... முருகனுக்கு வேல்.. வேல்... என்று காவடிகளைத் தோளில் சுமந்துகொண்டு வண்ணமயமாய்ப் பக்தர்கள் செல்வது கண் குளிரக் காண வேண்டிய காட்சி.
சித்ரா பௌர்ணமி - அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் கோயில், பெரியநாயகி அம்மன் கோயில் ஆகிய இரண்டிலும் திருவிழா பத்து நாட்களுக்கு நடக்கும்.
அக்னி நட்சத்திரம் - பழனி முருகன் கோயிலின் திருவிழா இது. சித்திரை மாத கடைசி 7 நாட்கள் மற்றும் வைகாசியின் முதல் 7 நாட்கள் நடைபெறும்.
வைகாசித் திருவிழா - பெரியநாயகி அம்மன் கோயிலிலும் திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் வைகாசித் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும்.
ஆனி அன்னத் திருநீராட்டு - திருவாவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், பெரிய உடையார் கோயில் ஆகியவற்றில் ஆனி உத்திரம் அன்று நடராஜப் பெருமாளுக்கு அன்ன நீராட்டு நடைபெறும்.
கந்த சஷ்டி - கந்த சஷ்டி பழனி முருகன் கோயிலில் 6 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். கந்தசஷ்டி நோன்புத் திருவிழாவாகும்.
திருக்கார்த்திகை - இத்திருவிழா பழனி முருகன் கோயில், திருவாவினன்குடி பெரியநாயகி அம்மன் கோயில் ஆகியவற்றில் 10 நாட்கள் நடைபெறும். இந்தப் பத்துநாட்களும் பெண்கள் திருவிளக்கு ஏற்றிவர முருகன் தங்கச் சப்பரத்தில் திருஉலா வருவார்.
தைப்பூசம் - பழனி முருகன் கோயிலில் முக்கிய திருவிழா நாட்களில் ஒன்று.
பங்குனி உத்திரம் - பழனி முருகன் கோயிலில் இத்திருவிழா பங்குனி மாதம் பத்து நாட்கள் நடைபெறும்.

கொடைக்கானல்
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இயற்கையின் வண்ணக் கோலம் கொடைக்கானல். மலையின் மீதொரு இயற்கையின் அதிசயம். இந்தியாவின் மிக அழகான வாழிடங்களில் முக்கியமானது இது. இங்கு பார்த்து பரவசப்படவேண்டிய இடங்கள் ஏராளம். பிரையண்ட் பூங்கா சூரிய ஆய்வு மையம். வெள்ளியருவி கோக்கர் வாக்கில் உள்ள தொலைநோக்கம் குறிஞ்சி ஆண்டவர் கோயில் பியர் ஷேhலா அருவி பேரிஜம் ஏரி படகுக் குழாம் மலர் ஆய்வுக்கூடம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். மேற்கு மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை அருளிய அழகின் தாயகம்.

கரடிச் சோலை அருவி
கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று களைத்துப் போய்விட்டீர்களா? அதோ தெரியுது பாருங்கள் அதுதான் கரடிச்சோலை அருவி. இங்கு வந்து கரடிகள் நீர் அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து 2 கி.மீ. தூரமும் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்திலும் கரடிச் சோலை உள்ளது.

பேரிஜம் ஏரிக்காட்சி
இது பேரிஜம் ஏரியல்ல. அதை அடைவதற்கு முன் நின்று நிதானித்து ரசித்துப் பார்க்க வேண்டிய இடம். இங்கிருந்து பார்த்தால் ஏரியின் சுற்றுவட்டாரம் வைரமென ஜொலிக்கும். உங்கள் பார்வையின் நீளம் இயற்கையின் பேரழகின் எல்லை தொடும். கொடைக்கானல் ஏரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

பிரையண்ட் பூங்கா
கொடைக்கானல் சென்றவர்கள் பிரையண்ட் பூங்கா செல்லாமல் திரும்பமாட்டார்கள். மனங்கவர் மலர்களின் கூட்டம் மணம் பரப்பும் தோட்டம். இங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள் பல ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கலப்பினச் செடிகளுக்கும் அழகிய மலர்களுக்கும் புகழ்பெற்ற இடம். கண்ணாடி இல்லமொன்றில் வளர்க்கப்படும் மலர்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உன்னதம் மே மாதம் கோடைவிழாவில் நடத்தப்படும் மலர்க் கண்காட்சி உலகளவில் புகழ்பெற்றது.

செட்டியார் பூங்கா
கோடை நகரின் வடகிழக்கு மூலையில் சிறிய திருப்பத்தில் செட்டியார் பூங்காவை கவனிக்காமல் கடந்து செல்லமுடியாது. இயற்கையழகில் அப்படியே மனம் தோய்ந்து நின்றுவிடுவீர்கள். இப்பூங்கா குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

டால்மென் வட்டம்
நிலவியல் வரைபடத்தில் கொடைக்கானல் இடம்பெறக் காரணமான இடம். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கற்கால மற்றும் எஃகு கால மக்கள் வாழ்ந்ததாகவும் அதேபோல இறந்தவர்களைப் புதைக்கும் இடமாக இருந்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பர்வத மலைக்கும் பன்னிக்காடு கிராமத்திற்கும் அருகிலுள்ள இவ்விடங்கள் கிஸ்தேவன் டால்மென் என்று அழைக்கப்படுகின்றன. மிகபபெரிய தட்டையான ஒரு கற்பாளத்தின் உச்சியின்மீது இருபெரும் கற்பாளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டால்மென்னின் அழகு காண்போரை வியக்க வைக்கும் கலை அதிசயம். இதுபோன்ற பழங்கால மனித வாழ்விடங்கள் காலத்தால் அழிக்கப்பட்டாலும் அதன் சில மிச்சங்கள் பெருமாள் பூங்காவிலும் செண்பகனூர் அருங்காட்சியகத்திலும் காணமுடிகிறது.

கோக்கர்ஸ் வாக்
அமெரிக்காவின் சான் ஆண்டானியோ நகரில் நதிக்கரையோரமாகக் காலாற நடந்து பார்த்து ரசிக்க அழகுமயமான ஒரு தனிப்பாதையுண்டு. அதைபோன்ற ஒன்றுதான் இந்த மலை விளிம்பு காலடிப்பாதை. கோடையின் தென்திசை உச்சியிலுள்ள இந்த இடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர். இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச்சரிவைக் கொண்டது. இப்பாதையிலிருந்து தரைப்பகுதியைப் பார்த்தால் வனப்பாகத் தோன்றும். இது கொடைக்கானல் ஏரியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஃபேரி அருவி
மலையில் அருவி இல்லாமலா! இந்த அழகுமிகுந்த அருவி பயணிகளுக்கு உவகைதரும் உல்லாச இடம். கொடைக்கானல் ஏரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நீரருவி அமைந்துள்ளது.

பசுமைப் பள்ளத்தாக்கு
மிக மிக ஆழமும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு. இதற்கு முந்தைய பெயர் தற்கொலை முனை. வைகை அணையை இங்கிருந்து ஓர் அழகான கோணத்தில் காணமுடியும். இதுவொரு உள்ளுக்குள் பயமூட்டும் பரவச அனுபவம். கோடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

கால்ஃப் கிளப்
தேசிய அளவில் கால்ஃப் விளையாட்டுப் போட்டிகள் நிகழும் பெருமை கொண்டது. கொடைக்கானல் கால்ஃப் கிளப் பச்சைப் புல்தரையில் பறந்து போகும் பந்துகள் முயல்கள் ஓடிவிளையாடுவது போன்று தோன்றும்.கால்ஃப் விளையாட்டிற்கான 18 குழிகள் அமைந்த விசாலமான மைதானம் இங்குள்ளது. இந்த வழியே மந்தை மந்தையாகக் கடந்து செல்லும் மலையாடுகளைப் பார்ப்பது தனி ரசனை. இங்கு உறுப்பினர் அல்லாதவர்களும்கூட விளையாட முடியும். சுற்றுலாப் பயணிகள் சாலையில் செல்லும்போது இந்தப் பிரதேசத்தை முழுமையாகக் காணமுடியும்.

கூக்கால் குகைகள்
மரங்களில் தொங்கும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்திருக்கிறீர்களா! அப்படித்தான் இங்குள்ள குகைகள் பாறைப் பாளங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். 1500 மீட்டர் உயரத்தில் இப்பாறை மறைவிடம் உள்ளது. கொடைக்கானலிலிருந்து 40 கி.மீ. தொலைவில் பூம்பாறை என்னுமிடத்தில் இக்குகைகள் காணப்படுகின்றன. பூம்பாறையிலிருந்து சிறிது தூரம் நடக்க வேண்டியிருக்கும். இக்குகைகளில் காணப்படும் சில தடயங்கள் இலையாடை அணிந்த பளிங்கர் பழங்குடியினர் இங்கு வாழ்ந்ததை வெளிப்படுத்துகின்றன. மனித இனத்தின் ஆதி வாழிடம் குகைகளாகத்தான் இருந்திருக்கின்றன. நாகரிகமடைந்த வாழ்வில் குகைகள்கூட அதிசயம்தான்.

குறிஞ்சியாண்டவர் கோயில்
மலையும் மலைசார்ந்த இடங்களுக்கான கடவுள் முருகப்பெருமாள் வீற்றிருக்கும் ஆலயம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ இக்கோயிலுடன் தொடர்புடையது. குறிஞ்சியாண்டவர் கோயிலிலிருந்து பார்த்தால் பழனி திருக்கோயிலும் வைகை அணையும் தெரியும். மலையேறி முருகனைப் பார்த்து விட்டு வாருங்கள்.

குறிஞ்சி மலர்
இயற்கையின் அதிசயங்களுக்கு முன்னால் மனித சாதனைகள் ஒன்றுமில்லை. காலையில் அரும்பி மாலையில் மறைந்துவிடும் மலரல்ல இது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூ கடைசியாகக் குறிஞ்சி பூத்த ஆண்டு 2004. அதிசயமாய்ப் பூப்பதால் குறிஞ்சி பூப்பது பரபரப்புச் செய்தி.

கொடைக்கானல் ஏரி
ஏரியில் படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இறைவன் இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம் தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏரியில் மீன்கள் விடப்பட்டன. முதன் முதலில் 1932 இல்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கியது. இப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாமும் செயல்படுகிறது. தொலைபேசி - 04542-242045

தூண் பாறைகள் (பில்லர் ராக்ஸ்)
வேறொன்றுமில்லை 122 மீட்டர் உயரத்தில் மூன்று செங்குத்தான பாறைகள் இங்கு நிற்கின்றன. அவ்வளவுதான். இப்போது புரிந்திருக்குமே கம்பீரமான தோற்றம். அழகிய மலர்கள் சூழ்ந்த சிறிய தோட்டம் ஒன்றை இந்தப் பாறைகள் பெற்றிருக்கின்றன. இதைக் கண்டுகளிக்க ஏரியிலிருந்து 7.4 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம்தானே.

செண்பகனூர் அருங்காட்சியகம்
தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டெறியப்பட்ட தொல்குடிகளின் செடி வகைகள் மலரினங்கள் உயிரினத் தொகுப்புகள் பலவும் இந்த அருங்காட்சியகத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றன. இதைத் தூய இருதயக் கல்லலூரிபராமரித்து வருகிறது. மிகச் சிறந்த மலர்ப் பண்ணைகளில் ஒன்று இங்குள்ளது. இங்கே 300 வகை அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன. ஃபாதர் உகார்தே என்ற ஸ்பெயின் நாட்டவர் தனிப்பட்ட முறையில் சேகரித்த அரிய சேகரங்களை இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். நுழைவுக் கட்டணம் ரூ.1. நேரம் - காலை 10-11 மாலை 3-5 மணி வரை.

பம்பர் அருவி
பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம். இந்த அருவிக்கு கிராண்ட் கேஸ்கட் என்றொரு பெயரும் உண்டு. பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம். கொடைக்கானலிலிருந்து நீங்கள் 4 கி.மீ. பயணிக்கத் துணிந்தவர் என்றால் பம்பர் அருவியை அடையலாம்.

வெள்ளியருவி
கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவி இது. ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளியருவியில் குளித்து மகிழலாம். இதைக்காண ஏரியிலிருந்து எட்டு கி.மீ. செல்ல வேண்டும்.

சூரிய ஆய்வு மையம்
சூரியனை யார்தான் பார்க்கவில்லை. ஆனால் சூரிய ஆய்வு மையம் வான்வெளியின் ரகசியங்களை உங்கள் கண்களுக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தும். 2343 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த இடத்தில் இது அமைந்துள்ளது. இங்கிருந்து கோள்களையும் நட்சத்திரங்களையும் காண முடியும். ஏரியிலிருந்து 3.2 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆய்வு மையம் 1989இல் நிறுவப்பட்டது.

அமைதிப் பள்ளத்தாக்கு
மனம் பேரமைதியில் திளைக்க வேண்டும் என்ன செய்யலாம்? ஒருமுறை அமைதிப் பள்ளத்தாக்கின் முன் நின்று பாருங்கள்! அதன் ஆழ்ந்த அமைதியில் உங்களையே மறந்துவிடுவீர்கள். ஆனால் இந்த இடத்திற்குச் செல்லும் பார்வையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தலையாறு அருவி
கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை என்னவென்று சொல்வீர்கள்?

Source : http://tamilnadutourism.org/Tamil/Dindukkal.html

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி