நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம்: பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையில் உறுதியளித்துள்ளார். 

நாட்டின் 15வது பிரதமராக நரேந்திர மோடி இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

பதவியேற்ற பின், பிரதமர் அலுவலக இணையதளம் வழியாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலக இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 16ம் தேதி இந்திய மக்கள் தங்களுடைய தீர்ப்பை அளித்துள்ளனர், நாட்டின் வளர்ச்சி, சிறந்த நிர்வாகம் மற்றும் ஸ்திரத்தன்மைக்காக அவர்கள் வாக்களித்துள்ளனர். நாடு இதுவரை காணாத புதிய உச்சத்தை அடைவதற்கான பயணத்திற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம். அதற்காக நாட்டு மக்களின் ஆதரவு, ஆசீர்வாதம் மற்றும் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். ஒன்றிணைந்து நாட்டிற்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம். வலிமையான, வளர்ச்சியுடைய மற்றும் ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கும் நமது கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். 

பிரதமர் அலுவலக இணையதளம், பிரதமருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையேயான மிக முக்கியமான ஊடகம். தொழில்நுட்பத்தின் சக்தி மற்றும் சமுதாய ஊடகங்களின் சக்தியில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த இணையதளம் வழியாக, எனது உரைகள், பணி திட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும், மத்திய அரசின் சார்பில் துவங்கப்படும் திட்டங்கள் குறித்தும் இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு மோடி தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி